திங்கள், 11 டிசம்பர், 2017

ஒரே உடலில் இரண்டு இதயங்களை பொருத்தி சென்னை டாக்டர்கள் ....

ஓர் உடலில் இரு இதயங்கள்!
மின்னம்பலம் :ஓர் உடலில் இரண்டு இதயங்களைப் பொருத்தி இதயமாற்று அறுவை சிகிச்சையைத் தவிர்க்கும் புதிய சிகிச்சை முறையைச் சென்னையைச் சேர்ந்த மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பொதுவாக இதயமாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டிய நோயாளிகள், வேறு உறுப்புகளின் பாதிப்பால் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை இருந்தது.
அப்படிப்பட்ட பலவீனமான இதயம்கொண்ட நோயாளிகளுக்கு உதவும் வகையில், இடது வெர்டிகுலர் கருவி ஒன்று பொருத்தப்படும். ஆனால் இந்தக் கருவியின் விலை சுமார் ஒரு கோடி ரூபாய் வரை ஆகிறது. இதனால் வசதி இல்லாதவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாத நிலை இருந்தது.
இதைத் தவிர்ப்பதற்காக, பலவீனமான இதயத்துக்கு உதவும் மற்றொரு இதயத்தைப் பொருத்தும் புதிய அறுவை சிகிச்சை முறையை சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் முயன்றுள்ளனர்.


முதலில் சோதனையாக நோய்வாய்ப்பட்ட நாய் ஒன்றின் உடலில் இரண்டாவது இதயத்தைப் பொருத்தியுள்ளனர். நாயின் வயிற்றில் வைக்கப்பட்ட இரண்டாவது இதயம் அதன் இயற்கையான முதல் இதயத்துக்குப் பக்கபலமாக செயல்பட்டிருக்கிறது. முதல் இதயம் செயலிழந்த பிறகும் இரண்டாவது இதயம் 48 மணி நேரத்துக்கு இயங்கி நாயின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது. வயிற்றில் இரண்டாவது இதயத்தைப் பொருத்துவதால் அறுவை சிகிச்சையில் ஏற்படும் ஆபத்தும் குறைகிறது. இவ்வாறு இரண்டாவதாகப் பொருத்தப்படும் இதயத்தின் ரத்த சுழற்சி செயல்திறன் குறைந்தபட்சம் 30 சதவிகிதம் இருக்க வேண்டும். அப்படி இல்லாதபோது அந்த இதயத்தைப் பொருத்துவதைத் தவிர்த்துவிடுவோம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுபற்றி மேலும் சோதனை நடத்தப்போவதாகவும் மருத்துவர் செரியன் கூறினார்.
இதுபோன்று கடந்த ஜூன் மாதம் கோவையில் ஒரு மனிதன் உடலில் இரண்டு இதயங்களைச் செயல்பட வைப்பதற்கான அறுவை சிகிச்சையைக் கோவையைச் சேர்ந்த மருத்துவர்கள் செய்து முடித்தது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: