வியாழன், 14 டிசம்பர், 2017

குஜராத்தில் 93 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு துவங்கியது

தினத்தந்தி :குஜராத்தில் 93 சட்டமன்ற தொகுதிகளில் இறுதி கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். அகமதாபாத், 182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9, 14–ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 89 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் கடந்த 9–ந்தேதி நடந்தது. அதில் சுமார் 68 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்த நிலையில் எஞ்சிய 93 தொகுதிகளுக்கு 2–வது மற்றும் இறுதிக்கட்டமாக தேர்தல் இன்று தேர்தல் துவங்கி நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியதும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்த 93 தொகுதிகளில் கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 52 தொகுதிகளையும், காங்கிரஸ் 39 தொகுதிகளையும் கைப்பற்றின. இதனால் இரு கட்சிகளும் 2–வது கட்ட தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்ற வியூகம் அமைத்து செயல்பட்டன.
பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்வாகி இருக்கும் ராகுல்காந்தி மற்றும் பல தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகள் சேகரித்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை மாலையுடன் இறுதிக் கட்ட பிரசாரம் ஓய்ந்தது.

இதைத்தொடர்ந்து 93 தொகுதிகளிலும் இன்று நடைபெறும் ஓட்டுப் பதிவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் மொத்தம் 851 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். சுமார் 2 கோடியே 22 லட்சம் வாக்காளர்கள் இந்த தொகுதிகளில் வாக்களிக்க தகுதி ஆனவர்கள் ஆவர். பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா, நிதிமந்திரி அருண்ஜெட்லி ஆகியோருக்கு ஓட்டு குஜராத் மாநிலத்தில் உள்ளது. இதனால் 3 தலைவர்களும் இன்று தங்களுடைய வாக்கை பதிவு செய்வதற்காக ஆமதாபாத் நகருக்கு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: