திங்கள், 11 டிசம்பர், 2017

சுமந்திரன் :ஒரு அரசாங்கத்தின் பாதுகாப்பில்தான் மதம் தப்பி பிழைக்குமேன்றால் அது ஒரு உருப்படியான... ...

Tamil Mirror டி.விஜித்தா : அரசாங்கத்தின் பாதுகாப்பினால் தான் ஒரு மதம்  தப்பிப் பிழைக்குமாக இருந்தால், அது ஓர் உருப்படியான மதமாக  இருக்க முடியாது. ஒரு நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் சமத்துவமாக நடத்தப்படுவதாக இருந்தால், அரசிசமைப்பில் குறித்த ஒரு மதத்தை முதன்மையானது எனக் குறிப்பிடுவது தவறானது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
“அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில், சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி, மக்களுக்கான புதிய அரசமைப்பு குறித்து, இளைஞர், யுவதிகளுக்கு விளக்கம் அளிக்கும் கூட்டத்தில் அதிதியாகக் கலந்துகொண்டு, இளைஞர், யுவதிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
“ஒரு நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் சமத்துவமாக நடத்தப்படுவதாக இருந்தால், அரசமைப்பில் குறித்த ஒரு மதத்தை முதன்மையானது எனக் குறிப்பிடுவது தவறானது என்ற கருத்தையே நான் கொண்டிருக்கின்றேன். இடைக்கால அறிக்கையில் நான் கையெழுத்திட்டுக் கொடுத்த ஆவணத்திலும், அதனையே குறிப்பிட்டுள்ளேன்.

“நாடாளுமன்றத்திலும் அரசமைப்புப் பேரவையிலும் எனது பேச்சில் நான் அதனை சொல்லியிருக்கின்றேன். ஆனால், ஒரு குறித்த சமயம் தான் நடைமுறையில் இருப்பதற்கு அரச பாதுகாப்பு தான் அவசியம் என்று கேட்டால், அதற்கு ஏன் மறுப்புத் தெரிவிக்க வேண்டும் என்பது என்னுடைய சிந்தனை. என்னுடைய சிந்தனையின் படி, சமயங்கள், எல்லாவற்றையும் விட மேலானவை. ஓர் அரசாங்கத்தின் பாதுகாப்பினால் தான் ஒரு சமயம் தப்பிப் பிழைக்குமாக இருந்தால், அது ஓர் உருப்படியான சமயமாக இருக்க முடியாது.
“ஆகையினால், என்னுடைய சமயத்துக்கு அரச பாதுகாப்பு வேண்டும் என நான் ஒரு போதும் கேட்கமாட்டேன். கடவுளுக்கு அரசாங்கம் தான் பாதுகாப்பு கொடுக்க வேண்டுமா? ஆனால் முதன்மையான சமயம் என ஒன்றைக் குறிப்பிட்டால், மற்ற சமயங்கள் இரண்டாம், மூன்றாம் சமயங்கள் என விளக்கம் வரும் என்ற காரணத்தினால், நான் அதை எதிர்க்கிறேன்.
“ஆனால், சரித்திர ரீதியாக தங்களுடைய சமயம் முதன்மையாக இருந்திருக்கிறது. அதனை எடுக்க வேண்டாம். அப்படி இருப்பதால் ஏனைய சமயங்களை சமத்துவமாக நடத்தாமல் விட மாட்டோம் என்று ஒரு கோரிக்கை வருவதாக இருந்தால், அதனை நாங்கள் சீர்தூக்கிப் பார்க்கலாம். இது தொடர்பாதக முன்மொழிவுகளில் அதற்கு பதிலாக மாற்று முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
“அப்படி முதன்மைத் தானம் கொடுத்திருந்தாலும், அது மற்ற சமயங்கள் எல்லாவற்றையும் பாகுபாடு இல்லாது நடத்த வேண்டும் என்ற வாசகமும் சேர்ந்து எழுத வேண்டும். இந்த அரசமைப்பில் மற்றைய எல்லா விடயங்களும் சரியாக அமையுமாக இருந்தால் இந்த விடயத்தை பெரிதுபடுத்தாமல், பெயரளவிலே முதன்மைஸ்தானம் என்று கொடுத்து அது மற்றவர்களை எந்தவித்திலும் பாகுபாட்டுக்கு உட்படுத்தாமல் இருக்கக் கூடிய காப்போடு வருமாக இருந்தால், அதனை ஆதரிக்கலாம்” எனத் தெரிவித்தார்.
அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் தலைவர் ரவீந்திர டி சில்வா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், புதிய அரசமைப்பு தொடர்பான தெளிவூட்டல் இடம்பெற்றதுடன் பல நூற்றுக்கணக்கான மூவினத்தையும் சேர்ந்த இளைஞர், யுவதிகளும் கலந்து கொண்டனர்.
tamilmirror.lk

கருத்துகள் இல்லை: