திங்கள், 11 டிசம்பர், 2017

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

நக்கீரன்: காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் முன்னிலையில் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, எந்த எதிர்ப்பும் இன்றி ராகுல்காந்தியை தலைவராகத் தேர்ந்தெடுக்க கட்சி மேலிடம் முடிவு செய்தது. இதையடுத்து, காங்கிரஸின் தலைவர் பொறுப்பிற்கு வேறு யாரும் போட்டியிடாததால், தனித்துப் போட்டியிட்ட ராகுல்காந்தி வெற்றி பெற்றதாக காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் தலைமை அதிகாரி முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ‘மொத்தம் 89 விருப்பமனுக்கள் வந்தன.


அனைத்தும் ராகுல்காந்தியை தலைவராக்க வேண்டும் என்றும் கூறியிருந்தன. அனைத்தும் செல்லுபடியான மனுக்கள் என்பதாலும், மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடைந்ததாலும், தலைவர் பதவிக்காக தனித்துப் போட்டியிட்ட ராகுல்காந்தி வெற்றிபெற்றதாக அறிவித்துள்ளோம். வரும் டிசம்பர் 16 ஆம் தேதி அவர் தலைமைப் பொறுப்பேற்பார்’ என தெரிவித்துள்ளார். நேரு குடும்பத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பேற்கும் ஆறாவது நபர் ராகுல்காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

சோனியா காந்தி 19 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பு வகித்து வந்தார். 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக பொறுப்பேற்ற ராகுல்காந்தி வரும் டிசம்பர் 16 ஆம் தேதி அக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்கவுள்ளார்

கருத்துகள் இல்லை: