புதன், 13 டிசம்பர், 2017

ஆர்.கே.நகர் டிடிவி தினகரனுக்கே வெற்றி வாய்ப்பு ! பேராசிரியர் ராஜநாயகம் கருத்து கணிப்பு

நக்கீரன் :சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கே வெற்றி வாய்ப்புள்ளதாக பேராசிரியர் ராஜநாயகத்தின் மக்கள் ஆய்வு வெளியிட்டுள்ள முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் ஆய்வு சார்பில் பேராசிரியர் ராஜநாயகம் மற்றும் குழுவினர் இணைந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதன் முடிவில், ஆர்.கே.நகர் தொகுதியின் இன்றைய சூழலில் மக்கள் வாக்களிப்பதாக இருந்தால் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள டிடிவி தினகரன் மற்றவர்களை விட 35.5% மக்கள் ஆதரவுடன் முதலிடத்தில் உள்ளார்.

அதையடுத்து திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 28.5% மக்கள் ஆதரவு பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். அடுத்து, அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 21.3% மக்கள் ஆதரவு பெற்று 3வது இடத்தில் உள்ளார்.

இந்தநிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்டபடி தேர்தல் நடந்திருந்தால் பெரும்பான்மையான ஆதரவு யாருக்கு என்றும் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதிலும் டிடிவி தினகரனுக்கே மக்கள் அதிக ஆதரவு தெரிவித்துள்ளனர்.


ஏப்ரலில் யாருக்கு வாக்களித்திருப்பீர்கள் என்று யூகத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் டிடிவி தினகரனுக்கு 38.2% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மருதுகணேஷக்கு 27.0% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அப்போது ஓபிஎஸ் தரப்பில் மதுசூதனன் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அந்த வகையில் மதுசூதனனுக்கும் 18.3% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதேபோல் வேட்பாளரின் சின்னத்தையும் சம்பந்தப்பட்ட வேட்பாளரின் பெயரையும் சரியாகப் பொருத்துவதில், பிரஷர் குக்கர் - டிடிவி தினகரன் இணை மிகப் பெரும்பான்மையோரால் (91.6 %) அடையாளம் காணப்படுகிறது.

அதையடுத்து இரட்டை இலை - மதுசூதனன் (81.1 %) மக்களால் அடையாளம் காணப்படுகிறது. அதன்பின் உதயசூரியன் - மருதுகணேஷ் (77.8 %) மக்களால் அடையாளம் காணப்படுகிறது.

தேர்தல் சின்னத்தின் முக்கியத்துவம் குறித்துப் பல்வேறு கருத்துகள் நிலவும் நிலையில், பிரஷர் குக்கர் சின்னம் அறிவிக்கப்பட்ட ஓரிரு நாள்களிலேயே ஏறத்தாழத் தொகுதி மக்கள் முழுவதும் அது சென்று சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: