


கைது செய்யப்பட்ட நால்வரின் வாக்குமூலத்தை வைத்து முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய, மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன், கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் உட்பட எட்டு பேர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. டிசம்பர் 8ஆம் தேதி, கொள்ளையர்களைப் பிடிப்பதற்காகத் தனிப்படை ராஜஸ்தான் சென்றது.
ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் ஜெய்த்ரான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்புர்கலான் என்ற கிராமத்தில் கொள்ளையர்கள் நாதுராம் மற்றும் தினேஷ் சவுத்ரி ஆகியோர் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, நேற்று (டிசம்பர் 13) அதிகாலை தனிப்படை அங்கு சென்றது. அப்போது ஏற்பட்ட மோதலில் பெரிய பாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தத் தகவல் கேள்விப்பட்டதும், இறந்தவர் குடும்பத்துக்கு ரூபாய் ஒரு கோடி நிதியும், அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்று தமிழகக் காவலர்கள் வாட்ஸ்அப் மூலமாக முதல்வருக்குக் கோரிக்கை வைத்திருந்தனர். இதை நேற்று மதியம் மின்னம்பலத்தில் வெளியான செய்தியில், தமிழகக் காவல் ஆய்வாளர் சுட்டுக்கொலை என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.
அதற்கேற்றவாறு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மரணமடைந்த பெரிய பாண்டியன் குடும்பத்துக்கு ஒரு கோடி நிதி வழங்கப்படுமென அறிவித்திருக்கிறார். அதோடு, அவரது மகன்கள் ரூபன், ராகுல் படிப்பு செலவுகளைத் தமிழக அரசு ஏற்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். காயம் அடைந்திருக்கும் ஆய்வாளர் முனிசேகர் மற்றும் மூன்று காவலர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



பொதுவாக, தமிழகக் காவல் துறையினர் குற்றவாளிகளைத் தேடி வேறு மாநிலங்களுக்குப் போனால், அங்குள்ள போலீஸார் அதுபற்றி முன்கூட்டியே கொள்ளையர்களுக்குத் தகவல் கொடுத்துவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில், குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் சம்மன் கொடுக்கமுடியாமல் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்தச் சூழலில், இணை ஆணையர் சந்தோஷ்குமார் ஐபிஎஸ் போன்ற அம்மாநிலம் சார்ந்த உயர் அதிகாரிகள் தலைமையில் தனிப்படையை அனுப்பியிருந்தால், இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது” என்று சில தமிழகக் காவல் துறை அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக