வியாழன், 14 டிசம்பர், 2017

ஸ்டாலின் :ராஜஸ்தானுக்கு போலீஸாரை தனியாக அனுப்பி இருக்கக் கூடாது

tamilthehindu : ராஜஸ்தானில் கொள்ளையர்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனியாக அனுப்பாமல் உயர் அதிகாரிகள் இது போன்ற நடவடிக்கைகளுக்கு சென்றிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி, கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் தலைமையில் 6 பேர் தனிப்படை ராஜஸ்தான் கொள்ளையர்களைப் பிடிக்கும் முயற்சியில் சுடப்பட்டனர். அதில் பெரியபாண்டி உயிரிழந்தார். முனிசேகர் படுகாயமடைந்தார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

காவல் ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார்? அது பற்றிய உங்கள் கருத்து?
கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்பட்ட முறையில் இரண்டு ஆய்வாளரை அனுப்பி உள்ளார்கள். உயர் அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து சென்றிருக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இதை தவிர்த்திட வேண்டும் என்று காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன். உயிரிழந்த அவரது குடும்பத்தாருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரது குடும்பத்தாருக்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்குவதுடன் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அல்லது அவரது மகனுக்கு காவல்துறையில் பணி வழங்கிட வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: