ஞாயிறு, 10 டிசம்பர், 2017

நகராட்சி ஆணையரிடம் திமுக சிவ.பத்மநாபன் டொனேஷன் கேட்டார்... வாட்ஸ் அப் வைரல்!


நக்கீரன்  : தென்காசி நகராட்சி ஆணையர் ஏகராஜ். இவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறார் திருநெல்வேலி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாபன். அந்த ஆடியோ தற்போது வெளியாகி வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது.
;சிவ பத்மநாபன் : சார்... வணக்கம். நான் திமுக மாவட்டச் செயலாளர் பேசுறேன். சிவ பத்மநாபன். ;நகராட்சி ஆணையர் ஏகராஜ் : சார்... சொல்லுங்க சார்...
;சிவ பத்மநாபன் : வந்தாங்களாம். 10 ரூபா கொடுப்பேன்னிங்களாம். அப்படியின்னா நீங்க கொடுக்க வேண்டாம். 10 ரூபான்னா வேண்டாம் சார். வேண்டாம், வேண்டாம்.;
நகராட்சி ஆணையர் ஏகராஜ் : சரி என்ன செய்யணுமுன்னு சொல்லுங்க. நா முடியுமான்னு பாக்குறேன். கொஞ்சம் ரொம்ப கஷ்டம் இங்க.
;சிவ பத்மநாபன் : வேண்டாம்... வேண்டாம்... நீங்க கொடுக்க வேண்டாம்... ஒர்க் நடக்குது. வேலைகள் நடக்குது. நீங்க என்னென்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னு எங்களுக்கு தெரியும். தினமும் ஆயிரம் கம்பிளையண்டு வருது. சரி நீங்க ஆற்காட்டாருக்கு வேண்டிய ஆளு. நெருக்கமான ஆளு. அப்படியின்னு சொல்லிப்புட்டாங்க எங்ககிட்ட... அதனால நாங்க வாய மூடிக்கிட்டு இருக்கோம்...


நகராட்சி ஆணையர் ஏகராஜ் : சரி

சிவ பத்மநாபன் : ஆமா

நகராட்சி ஆணையர் ஏகராஜ் : என்ன பண்ணனுமுன்னு சொல்லுங்க.

சிவ பத்மநாபன் : ஒரு 50 ரூபாய்க்கு குறையில்லாம கொடுத்துவுடுனுமுன்னா கொடுத்துவுடுங்க. இல்லன்னா வேண்டாம்.

நகராட்சி ஆணையர் ஏகராஜ் : அவ்வளவு வசதி இல்ல... எனக்கு... எங்க அய்யாக்கிட்ட கேட்டுப்பாருங்க... நான் எவ்வளவு ஸ்டிரைட் பார்வடா இருப்பேனு...

சிவ பத்மநாபன் : அது தெரியும் எங்களுக்கு நீங்க எவ்வளவு ஸ்டிரைட் பார்வடுன்னு

நகராட்சி ஆணையர் ஏகராஜ் : உங்ககிட்ட ஏகராஜின்னு ஒருத்தன் இருந்தானே

சிவ பத்மநாபன் : சார்... ஒவ்வொரு பில்டிங் வாரியா நீங்க எவ்வளவு எவ்வளவு ரூபா கொடுத்து வாங்கியிருக்கீங்கன்னு என்னுகிட்ட பட்டியல் இருக்கு.

நகராட்சி ஆணையர் ஏகராஜ் : சரிங்கண்ணே... நீங்க சொல்றது கரெக்டு..

சிவ பத்மநாபன் : கேளுங்க சார்... நீங்க அத ரசீது போடாம, இப்ப ஒரு சட்டத்தை போட்டுக்கிட்டு எந்த எந்த பில்டிங்கில எவ்வளவு எவ்வளவு வாங்குரீங்கன்னு ஒரு பட்டியல் இருக்கு. என்னுகிட்ட கம்பிளைண்ட் தந்திருக்காங்க.

நகராட்சி ஆணையர் ஏகராஜ் : நான் ரசீது இல்லாம எதுவும் பண்றதில்ல.

சிவ பத்மநாபன் : நீங்க என்ன பண்ணியிருக்கீங்கன்னு தெரியும் சார். ரொம்ப பேச வேண்டாம். 50 ரூபா கொடுத்துவுடுறதுன்னா கொடுத்துடுங்க. இல்லன்னா வேண்டாம்.

நகராட்சி ஆணையர் ஏகராஜ் : இல்ல சார்... கூட சேத்து 10 ரூபா தரேன். 50 ரூபா கொடுக்குற அளவுக்கு வசதி இங்க சுத்தமாக கிடையாது. அப்ப நீங்க என்ன பண்ணனுமோ பண்ணிக்கீங்க.

சிவ பத்மநாபன் : சரி சார்.. நீங்க கொடுத்துவுட வேண்டாம். பார்த்துகிறேன்.

நகராட்சி ஆணையர் ஏகராஜ் : சரிங்க சார்.

ஆளும் கட்சிக்கு எதிராக வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வெளியாகும் இதுபோன்ற செய்திகளை திமுக தலைமைக்கு எடுத்துச் செல்லும் திமுக இணையதள குழு, இந்த செய்தியையும் எடுத்து சென்றுள்ளனர். இது தொடர்பாக தலைமை நடவடிக்கை எடுக்குமா என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். 

இதுகுறித்து சிவ பத்மநாபனை தொடர்பு கொண்டபோது, கமிஷனர்தான் கட்சி நிதியாக ஒரு லட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறியிருந்ததாகவும், ஆள் அனுப்பியபோது அவரிடம் 10 ஆயிரம் ரூபாய்தான் கொடுக்க முடியும் என்று கூறியதாகவும், அதை வேண்டாம் என்று மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரம் நடந்து ஒரு மாதம் ஆகிவிட்டதாகவும், தங்கள் உரையாடலில் கமிஷனர் பேசியதை எடிட் செய்து இப்போது ஆடியோவாக வெளியிட்டிருப்பதாகவும் கூறினார். 

இந்த கமிஷனர் ஏகராஜ், நாள் ஒன்றுக்கு லட்சக் கணக்கில் லஞ்சம் பெறுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் மீது புகார்கள் இருக்கின்றன. அந்த புகார்களின் பேரில் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தக் கூட திட்டமிட்டிருந்தோம். இந்த நிலையில்தான் கட்சி நிதியாக ஒரு லட்சம் ரூபாய் தருவதாக கூறியிருந்தார். இப்போது பிரச்சனையை எங்கள் தரப்பில் திருப்பி விடுகிறார். அவராகவே கட்சி நிதி கொடுப்பதாக கூறினாரே தவிர நாங்கள் அவரிடம் கேட்கவில்லை என்று மறுத்தார்.

நகராட்சி ஆணையரை தொடர்பு கொண்டபோது, டிரைவிங்கில் இருப்பதாகவும், பிறகு பேசுவதாகவும் கூறி தொடர்பை துண்டித்துக்கொண்டார். மறுபடியும் சிறிது நேரம் கழித்து தொடர்பு கொண்டபோது, போனை எடுக்காமல் தவிர்த்தார். 

பரமசிவன். 

கருத்துகள் இல்லை: