ஞாயிறு, 4 டிசம்பர், 2016

தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் சம்மன்


பெங்களூருவில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் ரூபாய் 152 கோடி சிக்கிய விவகாரத்தில் கர்நாடக அரசின் உயரதிகாரிகள் சிக்கராயப்பா, ஜெயச்சந்திரா ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
மத்திய அரசு, ரூபாய் 500,1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8ஆம் தேதி அறிவித்தது. வங்கிகளில் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்ய இந்த மாதம் வரை மட்டுமே அவகாசம் உள்ளது. இதனை பயன்படுத்தி பல்வேறு தந்திரங்களையும் பயன்படுத்தி கருப்புப் பணத்தை வெளுப்பாக்கும் நடவடிக்கைகள் முழுவீச்சீல் நடைபெற்று வருகின்றன. அதனை வருமான வரித்துறையும் முறியடித்து வருகின்றன. கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இது தொடர்பான தில்லுமுல்லு அதிகரித்து வரும் செய்தி வருமான வரித்துறைக்கு கசிந்ததையடுத்து வேறு முக்கிய நகரங்களில் உள்ள பெரும் புள்ளிகளையும் அதிகாரிகளையும் குறிவைத்து அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனைகளின் போது கரன்சி நோட்டுகள், தங்க நகைகள், சொத்து பத்திரங்கள், பங்கு முதலீட்டு ஆவணங்கள் போன்றவை சிக்கின. கர்நாடகத்தில் மாநில அரசு அதிகாரிகளிடம் ரூபாய் 152 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தமிழகத்தில் சென்னை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையில் எண்ணற்ற ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என வருமான வரி புலனாய்வு பிரிவு தலைமை இயக்குநர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது: “கர்நாடகவில் காவிரி பாசன நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சிக்கராயப்பா மற்றும் கர்நாடக மாநில நெடுஞ்சாலைத்துறை தலைமை திட்ட அதிகாரி ஜெயச்சந்திரா ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள், அவரது உறவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கர்நாடகா மட்டுமின்றி தமிழகத்தில் சென்னை, ஈரோடு உட்பட 12 இடங்களில் 50 குழுக்களாக அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில் ரூபாய் 6 கோடி ரொக்கம், 7 கிலோ தங்கக்கட்டி, 9 கிலோ தங்க நகைகள், ஆவணங்கள், பத்திரங்கள், 2 சொகுசு கார்கள் உள்ளிட்ட ரூபாய் 152 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் ரூபாய் 6 கோடி பணம் முழுவதும் புதிய ரூபாய் 2000 தாள்களாக இருந்தன. அது பற்றி விசாரணை நடக்கிறது” இவ்வாறு அவர் கூறினார்.
ராமலிங்கா
கர்நாடகத்தில் நீர்ப்பாசனம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டபோது பல்வேறு கட்டுமான பணிகளில் ஈரோட்டை மையமாக கொண்டு இயங்கி வரும் ராமலிங்கா கன்ஸ்ட்ரக்‌ஷன் என்ற நிறுவனம் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. ஈரோட்டில் உள்ள அதன் தலைமை அலுவலகத்திலும் சென்னை தி.நகர் விஜயராகவா சாலையில் உள்ள அதன் கிளை அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. வருமான வரி புலனாய்வு பிரிவு தலைமை இயக்குநர் பாலகிருஷ்ணன், தமிழக வருமான வரி புலனாய்வு கூடுதல் தலைமை இயக்குநராக பணிபுரிந்துள்ளார். ஜெகத்ரட்சகன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் வீடுகளில் முன்பு நடத்தப்பட்ட சோதனைகளுக்கு இவரே மூலக்காரணம். பதவி உயர்வு பெற்று கர்நாடகத்தில் தற்போது பணியாற்றி வரும் இவர், சமீபத்தில் தனது மகள் திருமணத்தை ஆடம்பரமாக நடத்திய ஜனார்த்தன ரெட்டி வீட்டில் சோதனை நடத்தப்பட்டதற்கும் இவர்தான் காரணம். இவ்விவகாரத்தை சி.பி.ஐ-யிடம் மாற்ற ஏற்பாடு நடந்து வருகிறது.
இவ்விவகாரம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வெளிச்சத்துக்கு வந்துள்ள ஊழல் மற்றும் முறைகேடு பனிப்பாறை நுனி போன்றது. அதன் முழு பரிணாமும் வெளிச்சத்திற்கு வரும்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று பொருளாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகா சட்ட மேலவையில் பாஜக மூத்த தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், கர்நாடகா அரசின் அதிகாரிகளின் வீட்டிலிருந்து பணம், நகை, ஆவணங்கள் எடுத்தது குறித்து பிரச்னையை கிளப்பினார். இதற்கு பதிலளித்த சட்ட மந்திரி டி.பி.ஜெயசந்திரா, ‘தவறு செய்த யாரையும் அரசு தப்ப விடாது’ என்றார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பணி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் மாநில முதல்வர் சித்தராமய்யாவுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படுகிறது. இது குறித்து சித்தராமய்யா அளித்த விளக்கத்தில், “பணியாற்றும்போது சில அதிகாரிகளிடம் நெருக்கமாக இருக்க வேண்டியிருக்கும். இது பணி சார்ந்த நெருக்கமே தவிர வேறு எதுவும் இல்லை. நெருக்கமான அதிகாரிகள், நெருக்கமற்ற அதிகாரிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. தவறு செய்த யாருக்கும் நாங்கள் கேடயமாக இருக்க மாட்டோம். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடு” என்று சித்தராமய்யா கூறினார்.minnambalam.com

கருத்துகள் இல்லை: