ஞாயிறு, 4 டிசம்பர், 2016

இதுதான் மொத்த இந்தியாவின் கதை - -எம்.ராஜசேகர்

.scroll.in
பண மதிப்பிழப்பு நடவடிக்கை – யோசனை - செயல்படுத்தப்பட்ட முறை இரண்டுமே - எப்படி இந்தியாவின் விவசாயச் சந்தை சங்கிலியை, குக்கிராமங்கள் வரைக்கும் பாதித்திருக்கிறது என்று தெரியும். மேலோட்டமாகப் பார்த்தால், பெட்டையா மண்டியின் மற்றுமொரு சாதாரண நாளாக அது தெரியலாம். வடக்கு பீகாரின் சிறு நகரில் இருக்கும் சந்தை. காய்கறிகளும் பழங்களும் விற்கப்படும் சந்தைக்கான கான்கிரீட் வாயிலுக்கு அருகே லாரிகள் நிற்கின்றன. மண்டி சமிதி என அழைக்கப்படும் இச்சந்தையில், கூடைகள் முழுக்க காய்கறிகளுடன் வியாபாரிகள் அமர்ந்திருக்கின்றனர். கடைகளில் சரக்கு நிறைந்து இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், வணிகர்களிடமும், நடைபாதை வியாபாரிகளிடமும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கம் குறித்துக் கேட்டால், சந்தையில் நிலவும் அசாதாரண நிலை வெளிச்சத்துக்கு வருகிறது. காய்கறிகளின் விலை வீழ்ந்திருப்பதாகக் கூறுகிறார்கள். நவம்பர் எட்டு அறிவிப்புக்கு முன் கிலோ பன்னிரண்டு ரூபாய்க்கு விற்கப்பட்ட காலிஃப்ளவர், ‘இப்போது ஒன்று அல்லது இரண்டு ரூபாய்க்குத்தான் விற்கப்படுகிறது’ என்று சந்தையில் மொத்த வியாபாரம் செய்யும் மஹ்ஃபூஸ் ஆலம் சொல்கிறார்.

நவம்பர் எட்டாம் தேதி பிரதம மந்திரியின் அறிவிப்பு வந்து இரண்டு, மூன்று நாட்களிலேயே விலைவாசிகள் பெரும் வீழ்ச்சியடையத் தொடங்கியதாக, பழ வணிகரான முகமது இஸ்லாம் கூறுகிறார். கிலோ ரூபாய் பதினைந்துக்கு விற்கப்பட்ட கத்திரிக்காய் தற்போது, கிலோ ரூபாய் இரண்டு அல்லது மூன்றுக்கு விற்கப்படுகிறது. கிலோ ரூபாய் பதினைந்துக்கு விற்கப்பட்ட இலைக்கோசு தற்போது, கிலோ ரூபாய் ஐந்துக்கு விற்கப்படுகிறது. கிலோ ரூபாய் பத்துக்கு விற்கப்பட்ட பசலைக்கீரை, கிலோ ரூபாய் 2.50க்கு விற்கப்படுகிறது.
அதிர்ச்சியளிக்கும் விலைவாசி வீழ்ச்சிகள் இவை. இதற்கெல்லாம் என்ன விளக்கம்?
வாடிக்கையாளர்கள் சொல்வது என்ன?

கன்ஹையா தாஸ், தன் முப்பதுகளின் மத்தியில் இருப்பவர். பெட்டையா நகரில் இருக்கும் பூர்வி கர்கையா கிராமத்தில் வாழ்கிறார். அவருடைய குடும்பத்துக்கென விவசாய நிலம் இல்லாததால், ராஜ் மிஸ்த்ரி (கட்டட வேலை மேற்பார்வையாளராக) வேலை செய்கிறார். அவருடைய குடும்பத்தில் பலருக்கும் இதுதான் வேலை. அரசாங்கத்தின் முடிவு எப்படி அவர்களை பாதித்திருக்கிறது. இன்று அவர்களது குடும்பத்தில் பணம் இல்லை. கடந்த இருபது நாட்களாக ராஜ் மிஸ்த்ரிகளுக்கு வேலை இல்லை.
‘ஒரு நாளுக்கு ரூபாய் 280 - 360 வரை சம்பாதிப்போம். அரசின் இந்த முடிவு வந்தபிறகு, எங்கள் காண்டிராக்டர் எங்களுக்கு எந்த வேலையும் தரவில்லை’ என தாஸ் சொல்கிறார். ‘எங்கெல்லாம் வேலை இருக்கிறதோ, அங்கே காண்டிராக்டர்களும், வீட்டு உரிமையாளர்களும் பழைய ரூபாய் 500, 1000 நோட்டுகளை கொடுக்க நினைக்கிறார்கள். நாங்கள் இரண்டு நாட்கள் வரிசையில் நின்று அந்தப் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டியதாக இருக்கும்’ என்று அவர் சொல்கிறார். ‘வேறு வழி ஒன்றும் இருக்கிறது. வட்டிக்காரர் ஒருவரிடம் பழைய ரூபாய் 500 நோட்டைக் கொடுத்தால், அவர் அதற்குப் பதிலாக ரூபாய் 450 தருவார். அதைப்போன்ற பணப்பரிமாற்றத்தில் தனக்கு நஷ்டம்தான் ஏற்படும்’ என்று தாஸ் சொல்கிறார்.
நிலைமையை மேலும் சிக்கலாக்குவது, வங்கியில் இருக்கும் சேமிப்பு தொகையை குடும்பத்தினரால் எடுக்க முடியாததுதான். தாஸ் குடும்பத்துக்கு வங்கிக்கணக்கு இருக்கும் மத்திய பீகார் கிராமீன் வங்கி, கிராம மக்களை, ரூபாய் ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் வரை மட்டுமே எடுக்க அனுமதிக்கிறது. அதுவும், வாரம் ஒருமுறை மட்டுமே.
வங்கிக்கு என தனிக் கட்டுப்பாடுகள் இருப்பதாக, காசாளர் ஒருவர் சொல்கிறார். கிராமீன் வங்கிகள் பிறர் சாராமல் இயங்கும் நிறுவனங்கள் அல்ல. அவை, பெரும் தேசிய வங்கிகளின் கீழ்தான் இயங்குகின்றன. ‘பஞ்சாப் நேஷனல் வங்கிதான் எங்களுக்கு நிதி அளிப்பது’ என காசாளர் கூறுகிறார். ‘அவர்கள் ரிசர்வ் வங்கியில் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு, எங்களுக்கு எங்கள் பங்கை தரவேண்டும். ஆனால் பஞ்சாப் நேஷனல் வங்கி, பெரும்பாலும் பணத்தை அதன் கிளைகளுக்கே அனுப்பிவிட்டு, குறைந்த அளவையே எங்களுக்கு அனுப்புகிறது’ என்று அவர் கூறுகிறார்.
வங்கிக்கு ரூபாய் பதினைந்திலிருந்து இருபது லட்சம் வரை தேவைப்படும் வேளையில், வெறும் ரூபாய் மூன்று லட்சமே அளிக்கப்படுகிறது. எனவே, மக்கள் ரூபாய் 10,000 எடுத்துச் செல்ல வங்கிக்கு வந்தாலுமே, வங்கியால் மிகக் குறைந்தளவு பணத்தையே கொடுக்க முடிகிறது. தங்களால் இயன்றளவு, அனைவருக்குமே பணத்தை பகிர்ந்தளிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது.
ஒரு வாரத்துக்கு ரூபாய் ஆயிரத்துக்கு மேல், பெட்டையாவில் இருக்கும் குடும்பங்களால் வங்கிகளில் இருந்து எடுக்க முடிவதில்லை. உணவு வாங்குவது, மருந்து வாங்குவது என அடிப்படைத் தேவைகள் தொடங்கி, வருகிற காலத்துக்கு வேளாண் இடுகைகள் வாங்குவது, கடைகளில் சரக்குகள் நிறைப்பது வரை, அனைத்துக்கும் இந்த ரூபாய் ஆயிரத்தைத்தான் அவர்கள் நம்பியிருக்கிறார்கள்.
‘துயர காலத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்’ என தாஸ் சொல்கிறார். நிலைமை இதற்கு மேலும் மோசமானால், குடும்பங்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளுக்கான செலவை குறைத்துக்கொள்ளும், ‘தினமும் மூன்று வேளை உண்பதற்குப் பதிலாக, ஒரு வேளை உண்போம்’ என கன்ஹையா தாஸ் சொல்கிறார்.
வணிகர்கள் சொல்வது என்ன?
பெட்டையா காய்கறிச் சந்தையில் விலைவாசி வீழ்ச்சியடைந்திருப்பதற்கான காரணம் மிக வெளிப்படையானது. ‘வாடிக்கையாளர்கள் குறைவாக வாங்குகிறார்கள். அதனால் மண்டியில் விலைவாசி வீழ்ச்சியடைந்திருக்கிறது’ என முஹமது இஸ்லாம் சொல்கிறார்.
மேலும் பெட்டையா ஒரு சிறு மண்டி. வணிகர்கள் தங்கள் சரக்குகளை விற்க, சுற்று வட்டாரத்தில் வேறு பெரிய நகரங்களே இல்லை. 25 கி.மீ. சுற்றளவில் இருக்கும் காய்கறி தேவைகளை மட்டும்தான் பெட்டையா கிராமம் நிறைவேற்றுகிறது. அங்கிருக்கும் வாடிக்கையாளர்களே குறைவாக வாங்கத் தொடங்கும்போது, தேவையையும் அளிப்பையும் (சப்ளையையும்) சமன் செய்ய சந்தை முயற்சித்தது. அதன் விளைவுதான் உடனடி விலைவாசி வீழ்ச்சி.
விளைநிலத்திலிருந்து, உணவு நம் தட்டுக்கு வரும் வரை, இந்தியாவில் வேளாண் உற்பத்தி பல கைகள் மாறும். பீகாரின் இந்தப் பகுதியில், விவசாயிகள் தங்கள் உற்பத்திகளை கிராம அளவிலான ஒருங்கிணைப்பாளர்களிடம் கொடுக்கிறார்கள் அல்லது மண்டிக்கு கொண்டுவந்து மொத்த வியாபாரம் செய்பவர்களிடம் கொடுக்கிறார்கள். மொத்த வியாபாரிகள் அதை சில்லறையாக விற்பவர்களுக்கு அளிக்கின்றனர். நடைபாதையிலும் தெருக்களிலும் சந்தையிலும் இருக்கும் கடைநிலை வியாபாரிகள் உற்பத்தியை வாடிக்கையாளர்களிடம் விற்கின்றனர்.
ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு உற்பத்தி கை மாறும்போது, சிறு லாபம் வைக்கப்படுகிறது. உதாரணமாக, விவசாயிகளின் உற்பத்தியை, மண்டியில் இருக்கும் வணிகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் கமிஷன் ஏஜெண்டுக்கு 1% தரகு. ஒரு கிலோ காலிஃபிளவர் ரூபாய் இருபதுக்கு விற்றுக்கொண்டிருந்த நேரத்தில், இவருக்கு கிலோவுக்கு இருபது பைசா கிடைத்தது.
ஆனால் தற்போது, வாடிக்கையாளர்கள் குறைவாக காய்கறிகள் வாங்கி, விலைவாசிகள் வீழ்ச்சி அடைந்திருப்பதனால், இந்தச் சங்கிலியில் இருக்கும் அனைத்து இடைநிலை லாபமும் வீழ்ந்திருக்கிறது. விற்கப்படும் ஒரு கிலோ காலிஃபிளவருக்கு, கமிஷன் ஏஜெண்டுக்கு கிடைப்பது வெறும் ஒரு பைசா. நிலைமைகள் மேலும் சிக்கலாக்கும்விதமாக, அவர்களுடைய பணம் வங்கிகளில் மாட்டிக் கொண்டிருக்கிறது.
வியாபாரிகளின் கதையும் இதேதான். மண்டியில் வெங்காயமும், உருளைக்கிழங்கும் விற்கும் வெண் தாடி வைத்திருக்கும் முதியவரான மொஹமது அஹ்சானின் வருவாயும் வீழ்ச்சி அடைந்திருப்பதாகச் சொல்கிறார். நவம்பர் எட்டாம் தேதிக்குமுன் கிலோ ரூபாய் பத்துக்கு விற்றுக்கொண்டிருந்த உருளைக்கிழங்கு தற்போது, கிலோ ரூபாய் ஆறுக்கு விற்கப்படுகிறது.
பழங்களின் நிலைமை இன்னும் மோசம். காய்கறிகள் வாங்குவதை தொடரும் பல குடும்பங்களும் பழங்கள் வாங்குவதில்லை. இஸ்லாம் தற்காலிகமாக தன் வியாபாரத்தை நிறுத்தி வைத்திருக்கிறார். டெல்லியிலும் காஷ்மீரிலுமிருந்து ஆப்பிள்கள் கிடைத்துக் கொண்டிருந்தன. நாசிக்கில் இருந்து மாதுளைகள் கிடைத்துக் கொண்டிருந்தன. இரண்டிலுமே, தன் சரக்குகளை விற்றுமுடித்தபின், புதிதாக பழங்களுக்கு ஆர்டர் கொடுக்கவில்லை. ‘ஒரு லாரி முழுதும் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான வாழைப்பழங்கள் இருந்தன. எங்களால் அதை விற்கமுடியாமல் போனதால், அவற்றை தூக்கி வீசி விட்டோம்’ என்று அவர் சொல்கிறார். தேவை வீழ்ச்சியடைந்திருப்பதால், வணிகர்கள் தங்கள் பொருட்களை வாங்கும் விலையையும் விற்கும் விலையையும் குறைத்திருக்கின்றனர்.
விவசாயிகள் சொல்வது என்ன?
இவற்றில் எல்லாம் அதிகம் பாதிப்படைவது விவசாயிகள்தான். மற்ற வருடங்களைப் போலவேதான் இந்த வருடமும் இருக்கும் என நினைத்த விவசாயிகள், பருவமழை தொடக்க காலத்தில் பயிரிட முதலீடுகள் செய்திருந்தார்கள். பீகாரின் தெற்கில் இருப்பதைவிட, பீகாரின் வடக்கில் விளைநிலங்கள் குறைவு. மேலும் அநேக விவசாயிகள் நிலத்தை குத்தகைக்கு எடுத்திருப்பார்கள்.

(பினய் பஸ்வான்)
மொத்தத்தில், வருவாய் குறைந்திருக்கிறது. பெட்டையாவின் பர்வத் கிராமத்தில் வாழும் பினய் பஸ்வான் எனும் விவசாயியை எடுத்துக்கொள்ளுங்கள். அவருடைய விவசாய வருவாய், ரூபாய் இருபத்து நான்கு அல்லது இருபத்து ஐந்தாயிரம். இதில் பாதி காய்கறிகளில் இருந்து வருவது. மீதம், அரிசியிலிருந்தும் கோதுமையிலிருந்தும் வருவது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது, அவரைப் போன்ற விவசாயிகள், தங்கள் நெல் அறுவடையையும் காய்கறிகள் அறுவடையையும் முடித்திருந்தார்கள். பணப்பற்றாக்குறை காரணமாக, அவர்கள் நெல் அறுவடையை நம்பி நெல்லை சில காலம் கழித்து விற்கலாம் எனத் திட்டமிடுகிறார்கள். ‘எங்களுக்கு ரூபாய் 500, 1000 நோட்டுகள் வேண்டாம்’ என பஸ்வான் சொல்கிறார்.
ஆனால், காய்கறிகள் குறுகிய காலத்திலேயே அழுகத் தொடங்கிவிடும். அவற்றை உடனடியாக விற்க வேண்டும். போன வருடத்தைவிட, இந்த வருட அறுவடை நன்றாக இருந்தது. தற்போது சிக்கலாக மாறியிருக்கிறது. விவசாயிகளுக்கு பெரும் இழப்புகள்தான் ஏற்பட்டிருக்கின்றன. ‘பயிரில் நாங்கள் போட்டிருக்கும் முதலீட்டை திரும்பப் பெற, குறைந்தபட்சம் ஒரு கிலோவுக்கு ரூபாய் பத்து வேண்டும். ஆனால் இப்போதும் எங்களுக்கு ஒரு கிலோவுக்கு ரூபாய் 2.50க்கு மேல் கிடைக்காது’ என்று சொல்கிறார், பெட்டையாவில் இருக்கும் விவசாயி ஸுபைர் அலி.
இந்த நெருக்கடியை விவசாயிகள் சமாளிக்க முயற்சிக்கின்றனர். நல்ல விலை கிடைக்கும் என நம்பிக்கையில், தங்கள் கிராமத்தில் இருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும், நர்கதியகஞ்ச் மண்டிக்கு தங்கள் தயாரிப்புகளை விவசாயிகள் கொண்டு சென்றனர். பெட்டையாவைவிட ஒருபடி மேல். காலிஃபிளவர் கிலோ ரூபாய் 2.50. பிற விவசாயிகள், காலிஃபிளவர்களை வீட்டிலேயே வைத்து கிராம மக்களுக்கு விற்றுவிடலாம் என திட்டமிடுகின்றனர். பணப்பற்றாக்குறை இருக்கும்போதிலும், சில விவசாயிகள் தங்கள் பணியாளர்களுக்கு கருணையோடே சம்பளக்காசு கொடுக்கிறார்கள். விலைவாசிகள் எல்லாம் அதிகமாக இருக்கும்போது, தங்களுக்கு என எதுவும் வைத்ததில்லை என்று சொல்கிறார் பர்வத் விவசாயி ஒருவர், ‘இந்த வருடம், ஒவ்வொரு பத்து சாக்கு உற்பத்திக்கும் நான்கு சாக்குகளை நாங்களே வைத்துக்கொள்கிறோம்’ என்று கூறுகிறார்.
இந்தச் சூழ்நிலை, விவசாயிகளுக்கு எப்படியும் உதவப் போவதில்லை. ராபி பயிர்களை பயிரிடுதலில் அவர்கள் மீண்டும் பிரச்னையை சந்திப்பார்கள். உதாரணமாக பவன், கோதுமை, வெண்டைக்காய், கத்திரிக்காய், சுரைக்காய் ஆகியவற்றை பயிரிடத் தொடங்கியிருக்கிறார். அறுவடையிலிருந்து குறைந்த வருவாயே கிடைத்த காரணத்தால் அவர், பணத்தை கடன் வாங்க வேண்டியதாக இருக்கும். சிறு விவசாயிகளுக்கு வங்கிகள் கடன் கொடுப்பதில்லை. உள்ளூரில், வட்டி விகிதம் ஐந்து வட்டி என அவர் சொல்கிறார். கடன் வாங்கும் தொகை, பணப்பற்றாக்குறை காரணமாக - தன் நிலத்தில் பாதியளவுக்கு மட்டும்தான் பயிரிடமுடியும்.
இவை அனைத்தையும் ஒன்றுதிரட்டிப் பார்த்தால், பண மதிப்பிழப்பு நடவடிக்கை – யோசனை - செயல்படுத்தப்பட்ட முறை இரண்டுமே - எப்படி இந்தியாவின் விவசாயச் சந்தை சங்கிலியை, குக்கிராமங்கள் வரைக்கும் பாதித்திருக்கிறது என்று தெரியும். சனிக்கிழமையன்று, நிருபர் ஆலமை சந்தித்தபோது, அவர் பெட்டையா மண்டியில் மரத்தால் அமைக்கப்பட்டிருந்த கடையில் அமர்ந்திருந்தார். அவருக்கு முன்பாக இருந்த சுவரில், ‘நாங்கள் பழைய ரூபாய் 500, 1000 நோட்டுகளை ஏற்பதில்லை’ என ஒரு தாளில் எழுதி ஒட்டப்பட்டிருந்தது.
‘இதுதான் மொத்த இந்தியாவின் கதை; பீகாரின் கதை மட்டுமே இல்லை’ என ஆலம் சொன்னார். இந்தியா, பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூன்றாவது வாரத்துக்குள் நுழையும்வேளையில், இந்தியாவின் சந்தைகள், பிரச்னைகளை பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளன. பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு பத்து நாட்கள் ஆன பிறகு, பீகாரின் சந்தை உறைந்ததுபோல இருந்தது. அறிவிப்பு வந்து மூன்று வாரங்கள் கழித்து, நாட்டின் பிற பகுதிகளிலிருந்து வரும் செய்திகள், விலைவாசிகளிலும், சரக்குகள் இருப்பிலும் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதைக் குறிக்கின்றன.
மஹாராஷ்டிராவை எடுத்துக் கொள்ளுங்கள். வாஷிம் மாவட்டத்தின், கரஞ்சா தாலுக்காவின், செழிப்பான கிராமமான ஷாஹாவில் சோயாபீன் அறுவடை முடிந்துவிட்டது. ஆனால், சந்தை இயங்கவில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னரே, சோயாபீன்ஸ் விலை, கடந்த வருடத்தில் இருந்ததைவிட பாதியாக இருந்தது. அப்போதிருந்தே, அங்கு மந்தநிலை உருவாகியிருந்தது. வாஷிம் நகருக்கு அருகிலிருக்கும் நம்தேவ்ராவ் ஹிங்கிள், ‘பத்து வருடத்துக்கு முன்பு விற்ற விலையில், இப்போது சோயாபீன் விற்றுக் கொண்டிருக்கிறது’ என்கிறார். இதனால் விவசாயிகளும் தொழிலாளர்களும் படும்பாடு தெளிவாகத் தெரிகிறது. மஹாராஷ்டிராவின் சில பகுதிகளில், தங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளத்தைப் பணமாக கொடுக்காமல் தானியங்களாக கொடுக்கிறார்கள் சில விவசாயிகள். வாஷிமின் கிசான் நகரைச் சேர்ந்த விவசாயி பரத் பவார், ‘அதிக தாமதமாவதற்கு முன், எங்கள் சோயாபீன்களை அறுவடை செய்ய வேண்டும்’ என்கிறார். ‘முடிந்தவரை, குடும்ப உறுப்பினர்களேதான் அறுவடை செய்கிறோம். நாங்கள் பணியமர்த்தும் ஊழியர்களுக்கு உணவளித்தோ, எங்களிடம் இருக்கும் தாள்களை அளித்தோ சம்பளம் கொடுக்கிறோம்’ என்கிறார்.
தமிழில்: ஸ்னேகா
நன்றி: scroll.in/article/822860/cauliflower-sells-for-rs-one-a-kilo-in-bihar-as-demonetisation-depresses-demand  minnambalam,com

கருத்துகள் இல்லை: