புதன், 25 மே, 2016

டெல்லியில் கொங்கோ மாணவர் அடித்து கொலை .. கறுப்பின மாணவர்களுக்கு எதிராக நிறவெறி தாக்குதல்கள்


டெல்லியில் காங்கோ மாணவர் படுகொலை: ஆப்பிரிக்க தூதர்கள் போர்க்கொடி - நடவடிக்கை எடுப்பதாக சுஷ்மா உறுதிஆப்பிரிக்கர்களுக்கு எதிராக தொடரும் வன்முறை சம்பவங்களை அடுத்து, இந்தியா ஏற்பாடு செய்திருந்த ஆப்பிரிக்க தினத்தைப் புறக்கணிக்க போவதாக ஆப்பிரிக்கத் தூதர்கள் தெரிவித்துள்ளனர். புதுடெல்லி டெல்லியில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்து வந்த மசுண்டா கிட்டாடா ஆலிவர் என்ற ஆப்பிரிக்க மாணவர், கடந்த வெள்ளிக்கிழமை ஆட்டோவில் ஏற முயன்றபோது ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து மூன்று நபர்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஆராய்ந்த இந்தியாவில் உள்ள ஆப்பிரிக்கத் தூதர்கள், இந்தப் படுகொலைக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிரிக்கர்களுக்கு எதிராக நடந்த வன்முறை சம்பவங்களைக் குறிப்பிட்டு, இந்த சம்பவங்கள் குறித்து முறையான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை, இந்த சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படவுமில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.


இத்தகைய சம்பவங்கள் தொடரும் நிலையில், புதிதாக ஆப்பிரிக்க மாணவர்களை இந்தியாவுக்கு மேற்படிப்புகளுக்காக அனுப்பவேண்டாம் என்றும் ஆப்பிரிக்க அரசுகளைக் கோரவும் தாங்கள் முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் ( ஐ.சி.சி.ஆர்) வரும் வியாழனன்று நடத்தவிருக்கும் ஆப்பிரிக்கா தினத்தை புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார்.

“இந்த சம்பவத்தை கேள்விப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுளேன். இது துரதிர்ஷ்டவசமான, கடும் வலியை ஏற்படுத்த கூடிய சம்பவம் என்பதை ஆப்பிரிக்க மாணவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்” என்று சுஷ்மா கூறியுள்ளார்.

மேலும் மத்திய மந்திரி வி.கே. சிங், இந்தியாவில் உள்ள ஆப்பிரிக்கத் தூதர்களின் சங்கத்தினரை சந்தித்து ஆப்பிரிக்கர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இந்தியா முழு ஈடுப்பாட்டுடன் இருப்பதாக எடுத்துக் கூறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்  malaimalar.com

கருத்துகள் இல்லை: