வியாழன், 26 மே, 2016

10-ம் வகுப்பில் 1,038 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி


கோப்புப் படம்: எம்.வேதன்
கோப்புப் படம்: எம்.வேதன்

10-ம் வகுப்பு தேர்வில் 1,038 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழக அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் மூலம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஊக்குவித்து கல்வி அளித்ததன் விளைவாகவும், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்புப் பயிற்சிகளாலும், இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப்பள்ளிகள் 90.2 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளன.

ஈரோடு மாவட்டம் 98.48 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டம் 98.17 சதவீதம் தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தையும், விருதுநகர் மாவட்டம் 97.81 சதவீதம் தேர்ச்சி பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி, கூடுதல் சிறப்பு கையேடு அளித்ததன் மூலமாக 1,038 அரசுப் பள்ளிகள் 100 சதவித தேர்ச்சியை பெற்று சாதனைப் படைத்துள்ளன.
தேர்வில் ஆதிதிராவிட நலப்பள்ளிகள் 86.21 சதவீதமும், மாநகராட்சிப் பள்ளிகள் 94.41 சதவீதமும், வனத்துறைப் பள்ளிகள் 93.48 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 93.87 சதவீதமும், அரசுப் பள்ளிகள் 90.21 சதவீதமும், அறநிலையத்துறைப் பள்ளிகள் 85.69 சதவீதமும், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் 94.09 சதவீதமும், நகராட்சிப் பள்ளிகள் 90.58 சதவீதமும், சமூகநலத்துறைப் பள்ளிகள் 84.98 சதவீதமும், பழங்குடியினர் நலத்துறைப் பள்ளிகள் 86.62 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன'' என்று கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.  tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: