புதன், 25 மே, 2016

ஜெயலலிதா : மாநில மேம்பாட்டுக்கு இணைந்து பணியாற்ற திமுக முன்வரும் என்று எதிர்பார்க்கிறேன்

சென்னை: தமிழகத்தின் வளர்ச்சிக்காக இணைந்து பணியாற்ற தி.மு.க.,வும் பொருளாளர் ஸ்டாலினும் முன் வருவார்கள் என எதிர்பார்க்கிறேன். பதவி ஏற்பு விழாவில், அவரையோ, தி.மு.க.,வையோ அவமதிக்கும் எண்ணமில்லை எனவும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.முதல்வராக ஜெயலலிதா 6வது முறையாக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். அங்கு ஸ்டாலினுக்கு பத்தாவது வரிசையில் இடம் அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்திருந்தார். தி.மு.க.,வை, ஜெ., திட்டமிட்டு அவமானபடுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தார்.இந்நிலையில் இன்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. விழாவில் பங்கேற்றதற்காக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
. எம்.எல்.ஏ.,க்கள் பகுதியில் ஸ்டாலின் அமர வைக்கப்பட்டார் என தெரிந்து கொண்டேன். அரங்கில், அரசு முன்னுரிமை அடிப்படையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த சீட் வரிசை ஒதுக்கீடு, அசகவுரியத்தை ஏற்படுத்தியதாக ஸ்டாலின் எண்ணினால், அவருக்கோ, அவரது கட்சிக்கோ அவமரியாதை செய்யும் எண்ணமில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் கலந்து கொள்வது பற்றி அதிகாரிகள் எனது கவனத்திற்கு கொண்டு வந்திருந்தால், விதிமுறைகளை தளர்த்தி, ஸ்டாலினுக்கு முன் வரிசையில் இடமளிக்க அறிவுறுத்தியிருப்பேன்.
அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கு இணைந்து பணியாற்ற அவரும், அவரது கட்சியும் முன் வருவார்கள் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  தினமலர்.com

கருத்துகள் இல்லை: