புதன், 25 மே, 2016

இரண்டு பேருடன் உறவு பூண்டுவிட்டாள் ...யதார்த்த இயற்கை.. அவள் அப்படித்தான்


ருத்ரய்யா என் நண்பர். ”அவள் அப்படித்தான்” படம் எடுக்க நினைத்தபோது நாங்கள் பல முறை அது குறித்துப் பேசி விவாதித்தோம். அதில் உள்ள முக்கியப் பெண்பாத்திரம் குறித்த அவர் கருத்துகள் எனக்கு உடன்பாடாக இருக்கவில்லை. படம் வெளிவந்த பின்னும் இது குறித்துப் பல முறை பேசினோம். ஆனால் சினிமா குறித்தும், பெண்கள் குறித்தும் எங்களுக்குள் பல கருத்து மோதல்கள் இருந்தன. அவர் பெண்களைப் பெரிதும் மதித்தவர். அதனாலேயே அவர்களைக் குறித்த அவர் எண்ணங்கள் சாதகமானவைதான் என்பது அவர் எண்ணம். ஆனால் ஆதரவு என்று நினைத்துக்கொண்டு அமுக்குவதும் ஆதரிப்பவர் புரிந்துகொள்ளாத/புரிந்துகொள்ள விரும்பாத ஒடுக்குமுறைதான் என்பது என் வாதம்.

1984க்குப் பின் அவருடன் தொடர்பில்லாமல் போயிற்று. இன்று பழைய புத்தகங்களைக் கிளறும்போது “மானுடம்” இதழ் கிடைத்த்து. 1982இல் அக்டோபர் 26, 27 தேதிகளில் இலக்கு கலாசார இயக்கத்தின் திருச்சிக் குழு ”சினிமாவும் நமது கலாசாரமும்” என்ற தலைப்பில் நடத்திய கருத்தரங்கில் எஸ். ஆல்பர்ட், அம்ஷன்குமார், டி.ஜி.வைத்தியநாதன், கோ.ராஜாராம், தமிழவன், அசோகமித்திரன், பிரபஞ்சன், எஸ். சாமிநாதன், ஜி.கே. ராமசாமி, ரெங்கராஜன் போன்றவர்களுடன் ”சினிமாவும் சமூகப் பொறுப்பும்” என்ற என் கட்டுரை ஒன்றும் இடம் பெற்றது. பிறகு இக்கட்டுரைகளை ”மானுடம்” இலக்கியப் பத்திரிகை ஜனவரி 1983 இதழில் பிரசுரித்தது. பல அச்சுப்பிழைகளுடன் கட்டுரைகள் வெளியாகியிருந்தன என்றாலும் மொத்தக் கட்டுரைகளையும் படிக்க முடிந்தது.
என் கட்டுரையில் சினிமா இன்னும் இங்கு எதையாவது ”சொல்ல” வேண்டிய சாதனமாகவே பார்க்கப்படுகிறது என்று கூறி, “அழகாகச் சொல்லல், அசிங்கமாகச் சொல்லல் என்ற பிரிவுகளும் நல்லதைச் சொல்லல் கெட்டதைச் சொல்லல் என்ற பிரிவுகளும் பாட்டுடன் சொல்லல், வசனத்துடன் சொல்லல் என்ற பிரிவுகளும் இந்தச் “சொல்ல” வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் பிறந்தவை. “சொல்வது”தான் சமூகப் பொறுப்புடைய செயல்” என்று விளக்கி, ஏதாவது அறிவூட்டும் சேதி, நீதி போதிக்கும் சேதி இவற்றைக் கூற யத்தனிக்கும் சினிமாவாகவே யதார்த்த சினிமாவைப் பார்த்திருந்தேன். என் கட்டுரையில் “அவள் அப்படித்தான்” பற்றி இவ்வாறு எழுதியிருந்தேன்:
””அவள் அப்படித்தான்” பெண்ணின் வழக்கமான ரூபத்திலிருந்து மாறுபட்ட ஒரு பெண்ணைப் பற்றியது. அவள் பெண்; அவள் திருமணமாகாதவள்; அவள் கன்னி இல்லை என்பது மட்டுமே இந்தப் படத்தின் யதார்த்தம். ஆனால் அப்படி ஒரு பெண்ணை, படைப்பாளரால் ஏற்க முடியவில்லை. காரணம் இவருக்கும் ஈஸாப் கதைகள் பிடிக்கும். நீதி போதனை செய்கிறார். இப்படி ஒரு பெண் இருப்பது இயற்கையாக இவருக்கே படவில்லை போலும். காரணம் காட்டுகிறார். ஒன்றுமில்லை; அவள் அம்மா அவளுடைய அப்பாவுக்கு உண்மையானவளாக இருக்கவில்லை. தன் தற்சமய நிலையை அவளாகத் தேர்ந்தெடுக்கவில்லை. அவள் “துரத்தப்பட்டிருப்பதாக’ அவளே சொல்கிறாள். அவள் பெண் விடுதலை பற்றிப் பேசுவதும் கூட “துரத்தப்பட்டிருப்பதால்”தான். மேலும், பணம் தேவையுள்ள இன்னொரு பெண்ணைத் துண்டைக் கட்டிக்கொண்டு நிற்கச் சொல்லும் அளவுக்கு அவள் பெண் விடுதலை பற்றிய எண்ணங்கள் போலித்தனமானவை. இரண்டு பேருடன் உறவு பூண்டுவிட்டாள் என்ற ஒரு யதார்த்த இயற்கை நிலை கூட இங்கு போதனை-எதிர்போதனைகளில் அகப்பட்டுக்கொண்டு கிழிபடுகிறது. பொருளாதார, சமுதாய அதிகாரமற்ற நிலையில், ஆன்களுடன் உறவு பூண்வதன் மூலம் விடுதலையாக நினைக்கும் பெண்ணின் பாத்திரம், பெண்ணியக்கத்தின் ஆதாரங்களை விளையாட்டாக்கிறது. படத்தின் கடைசி போதனை, ”தவறிய” பெண்கள், இரண்டுக்கும் மேற்பட்ட காதலர்கள் உள்ள பெண்கள், நடுத்தெருவில் நின்று ஏங்குவார்கள் என்பதுதான். இந்தப் பொறுப்பற்ற வடிவின் காரணம் யதார்த்தத்தையே புரிந்துகொள்ளாமல், அதைக் காமராவில் அடைத்துவிடலாம் போதனைகளுடன் என்ற சிந்தனைதான். ”இந்தப் படத்துக்குப் பின் இத்தகையப் பெண்களைப் பரிவுடன் பார்ப்பார்கள்; புரிந்துகொள்வார்கள்” என்றார் டைரக்டர். பரிவு ஏன்? அவள் என்ன தவறு செய்துவிட்டாள்? புரிந்துகொள்ள முடியாதபடி அவள் செயலில் என்ன சிக்கல்? ”தவறாத” தாய்மார்களுடன், “துரத்தப்படாமல்” காதலர்களை ஏற்கும் பெண்களுக்கு, நடுத்தெருவை விடக் கடுமையான தண்டனை உண்டு என்று சொல்லலாமா?”
- அம்பை
Lakshmi Chitoor Subramaniam

கருத்துகள் இல்லை: