சனி, 28 மே, 2016

எம்.எஸ்.சுப்புலட்சுமி... ஊடகங்களால் உருவாக்கப்பட்ட எக்ஸ்ட்ரா லார்ஜ் சங்கீத பிம்பம் ...

எம் எஸ் அம்மா பாவம் சதாசிவ அய்யரிடம் அகப்பட்டு தனது வாழ்வை தொலைத்த பெண்மணி . இவர் ஒரு பார்பனர் அல்ல. ரஜினிகாந்த்,தனுஷ்  போல பார்பனர்களால் பயன்படுத்தப்பட்டவர் ஆகும். நல்ல   ஒரு இசைக்கலைஞர் (இசைவேளாளர்) அவர்களின் வியாபரத்துக்கு  கிடைத்த இலவச மூலதனம் அவ்வளவுதான் சதாசிவத்தின் இறுதி கிரிகைகளின்போது அவர் பிராமணர் இல்லை என்பதால் வெளியே நிறுத்தி வைத்து பின்பு சதாசிவ அய்யர்வாளின் உடல் தூக்கி கொண்டு சென்றபின்தான் எம் எஸ் அம்மாவை உள்ளே அனுமதித்தார்கள். சதாசிவத்தின் மனைவி என்ற ஸ்தானம் அவருக்கு கிடைக்கவில்லை  அன்புள்ள சாரு அவர்களுக்கு
மே மாத காலச்சுவடு இதழில் டீ.எம். கிருஷ்ணா  எம்.எஸ். பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மொழிபெயர்ப்புதான்.  அது என்னை மிகவும் பாதித்தது.  ஒரு பதில் எழுதிப் போட்டிருக்கிறேன். வருமா என்று தெரியாது.  அதை நீங்கள் படித்தீர்களா என்று எனக்குத் தெரியாது.  படித்து அது சரியென்றால் ஓகே.  இல்லையென்றால் அதற்கு எதிர்வினையாற்றவும் நீங்கள்தான் ஏற்றவர் என்பது என் கருத்து.
அன்புடன்,
வி.என். ராகவன்.
சாரு நிவேதா :Dear Sir,
உங்கள் கடிதத்துக்கு என் மனமார்ந்த நன்றி.  நீங்கள் குறிப்பிட்டுள்ள கிருஷ்ணாவின் கட்டுரையை ஆங்கிலத்தில் வெளிவந்த போதே படித்து விட்டேன்.  பொதுவாக சில விஷயங்கள் குறித்து நான் ஒரு வார்த்தை கூட எழுதக் கூடாது என்று எனக்குள் ஒரு விதி வைத்திருக்கிறேன்.  மதம், ஜாதி, கர்னாடக சங்கீதம் போன்றவை அவற்றில் சில.  மதம், ஜாதி பற்றி எழுதினால் கொன்று விடுவார்கள்.  அல்லது பெருமாள் முருகனுக்கு நேர்ந்த கதி ஏற்படும்.   
இருந்தாலும் துணிந்து எழுதலாம் என்றால் முருகனுக்குக் கிடைத்த தார்மீக ஆதரவு எனக்குக் கிடைக்காது.  ஏனென்றால் நான் இடதுசாரிகளுக்கும் சத்ரு, சக எழுத்தாளர்களுக்கும் சத்ரு.  கர்னாடக சங்கீதம் பற்றி எழுதக் கூடாது என்று முடிவெடுத்ததற்குக் காரணம், சுந்தர ராமசாமிதான்.  அவர் எழுதிய ஜே.ஜே. சில குறிப்புகள் என்ற நாவலை சராசரி என்று முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதினாலும் எழுதினேன், அதன் விளைவை இன்றளவும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.  எங்காவது லண்டனிலிருந்து வரும் ஒரு சர்வதேச சஞ்சிகையில் நான் எழுதினால் கூட பின்னாலேயே வந்து சாரு நிவேதிதா ஒரு போர்னோ எழுத்தாளன், அவன் ஒரு சராசரி என்று பின்னூட்டம் போடுகிறார்கள்.  அப்படிப் பின்னூட்டம் போடுபவர்கள் சாதாரண ஆட்கள் அல்ல; உலக அளவில் பிரபலமான தமிழ் – ஆங்கிலத் தூதுவர்கள்; தமிழ் – ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள்.  இதற்கு ஒரே காரணம், முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஜே.ஜே. சில குறிப்புகள் ஒரு சராசரி நாவல் என்று நான் சொன்னதுதான்.
இந்த நிலையில் கர்னாடக சங்கீதம் பற்றியும் கருத்துச் சொல்லி மேலும் மேலும் தீண்டாமைக் கொடுமையை அனுபவிக்க வேண்டுமா என்ற கவலையில்தான் அது பற்றி எழுதுவதில்லை.  ரெண்டு மூணு ஜென்மாவுக்கு வேண்டிய அளவு கர்னாடக சங்கீதத்தைக் கேட்டிருக்கிறேன்.  ஆனால் முறையான ஆரம்பப் பயிற்சி இல்லாததால் ராகத்தை அனுமானிக்கத் தெரியாது; எல்லோரையும் போல் தொடை தட்டி ரசிக்க முடியாது.  அவர்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும்.  மற்றபடி மேடையில் உள்ள கலைஞரின் ஆன்மாவின் உள்ளே சென்று விட முடியும்.   மொத்தத்தில் சங்கீத ரசனை உண்டு; ஞானம் இல்லை.
எப்படி இந்த ரசனை ஏற்பட்டிருக்குமென்றால், முந்தின ஜென்மத்தில் திருவையாறில் தியாகப் பிரும்மம் தெருவில் பாதரட்சை இன்றி நடந்து கொண்டே தனது சங்கீதத்தால் ஸ்ரீராம பிரானை துதித்துப் பாடிக் கொண்டு போகிற போது அவர் பாதத்தில் பட்ட புழு பூச்சிகளில் ஒன்றாக இருந்திருப்பேன் என்று தோன்றுகிறது.  அதனால்தான் சங்கீதம் என்றால் உயிராக இருக்கிறது.
ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக எல்லா துறைகளிலும் போலவே சங்கீதம் என்றாலும் எனக்கு ஆக உயர்தரமானதுதான் பிடிக்கிறது.  ஆரம்பத்திலிருந்தே எம்.எஸ். பிடிக்கவில்லை.  (ஊடகங்களால் உருவாக்கப்பட்ட ஒரு பிம்பம் எம்.எஸ்.  அவ்வளவுதான்.  அப்துல் கலாம் மாதிரி.  இப்போது சகாயம் ஐஏஎஸ் மாதிரி.)  ஜி.என்.பி., டி.கே. பட்டம்மாள், எம்.எல். வசந்தகுமாரி போன்றவர்களைப் பிடிக்கிறது.  எம்.எஸ்.ஸின் குரல் இனிமைக்கு ஈடு இணை இல்லை என்பது வேறு விஷயம்.  ஆனால் என்னுடைய ரசனை உலகில் அது மட்டும் போதவில்லை.  ஒருவேளை சதாசிவத்தின் ஆதிக்கம் இல்லாதிருந்தால் – எம்.எஸ். ஒரு சுதந்திரப் பறவையாகத் திரிந்திருந்தால் – பக்தி மட்டுமாக இல்லாமல் சிருங்காரமும் பாடியிருந்தால் அவர் மிகச் சிறந்த கலைஞராகப் பரிணமித்திருப்பாரோ என்னவோ.
சென்ற ஆண்டு எம்.எஸ்.ஸின் நூற்றாண்டு விழா வந்த போது ஒரு பிரபல பத்திரிகையில் எம்.எஸ். பற்றி என்னிடம் ஒரு கட்டுரை கேட்டார்கள்.  எனக்கு ரொம்பவே ஆச்சரியம்.  நான் எப்படி எம்.எஸ். பற்றிப் பாராட்டி எழுதுவேன் என நினைத்தார்கள்?  இவ்வளவுக்கும் அந்தப் பத்திரிகை நண்பர்கள் எனக்கு மிகவும் நெருங்கியவர்கள்.  என்னைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள்.  ஆனாலும் எம்.எஸ். பற்றி வெற்றுப் புகழுரையாக அல்லாமல் அவரது வாழ்க்கையைப் பற்றியும் சங்கீதம் பற்றி ஓரளவும் எழுதிக் கொண்டு வந்த போதே பாதியில் இது அந்தப் பத்திரிகையில் வெளிவருவது பலரையும் புண்படுத்தும் எனத் தெரிந்து பத்திரிகை ஆசிரியருக்கு விஷயத்தைத் தெரிவித்து விட்டேன்.  அதாவது, என் இயலாமையை.  அந்தக் கட்டுரை இப்போதும் அந்த நிலையிலேயே பாதியளவிலேயே இருக்கிறது.  என் கட்டுரைக்கு ஆதாரமாக இருந்தது, எம்.எஸ். பற்றி டி.ஜே.எஸ். ஜார்ஜ் எழுதிய புத்தகம்.  அந்தப் புத்தகத்தின் அறிமுகம் எனக்கு ஜெயமோகன் மூலமாக அவரது தளத்திலிருந்து கிடைத்தது.  (அடப்பாவி, இந்த ஆள் ஒரு விஷயத்தையும் விட்டு வைக்க மாட்டான் போலிருக்கிறதே என்று அப்போது நினைத்தேன்.  ஸாரி, ‘ன்’ விகுதிதான் மனதில் வந்தது; ஜெயமோகன் மன்னிக்கவும்.)
இப்போது கிருஷ்ணாவுக்கு வருவோம்.  அவரை நான் பி.ஏ. கிருஷ்ணனின் புத்தக வெளியீட்டுக் கூட்டத்தில் பார்த்தேன்.  அந்தக் கூட்டத்தில் மற்ற எல்லோரையும் விட அவர் பேச்சுதான் நன்றாக இருந்தது.  மேலும், கர்னாடக சங்கீதம் பற்றி அவர் ஆங்கிலத்தில் எழுதும் கட்டுரைகள் என்னுடைய கருத்துக்களுக்கு இணையாக இருப்பதை ஆச்சரியத்துடன் கவனித்திருக்கிறேன்.  அது பற்றி என் இணைய தளத்தில் ஓரிரு முறை பாராட்டுதலாக எழுதியும் இருக்கிறேன்.  க.சங்கீதம் பற்றிய பழசான, பிற்போக்குத்தனமான பார்வைகளை அவர் கட்டுரைகள் உடைத்தெறிந்து கொண்டிருந்தன.  ஆனால் அவர் சேரிகளுக்குச் சென்று க.சங்கீதம் கற்பிப்பதில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை.  அது ஒத்துவராது.  அதை விட பள்ளிக் குழந்தைகளின் பாடத் திட்டத்தில் கர்னாடக சங்கீதத்தைச் சேர்த்தால் ஏதேனும் பலன் ஏற்படலாம்.  ஆனால் ஒட்டு மொத்தமாகவே சமூகம் ’எங்களுக்கு இலக்கியம் வேண்டாம், கலை வேண்டாம், கலாச்சாரம் வேண்டாம், நல்ல அரசியல் வேண்டாம், பணமும் சினிமாவும் போதும்’ என்று philistine தளத்தில் இருந்து கொண்டிருந்தால் சேரியில் போய் கர்னாடக சங்கீதம் சொல்லிக் கொடுத்து என்ன பயன் ஏற்படப் போகிறது?  கலாச்சார மேன்மை என்பது ஒட்டு மொத்தமாக அல்லவா ஏற்பட வேண்டும்?  சிலர் உடற்பயிற்சிக் கூடத்தில் மார்புகளுக்கும் கைகளுக்கும் பயிற்சி எடுப்பார்கள்.  தொடை சூம்பி விடும்.  கர்னாடக சங்கீதத்தை மட்டும் கற்பித்தால் மற்ற விஷயங்கள் சூம்பி விடுமே?
சரி, எப்படியிருந்தாலும் டி.எம். கிருஷ்ணா என் மனதில் வலுவான இடத்தைப் பிடித்து விட்டார்.  யார் இவர், இவ்வளவு முற்போக்காக இருக்கிறாரே என்று பார்த்தால் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் The School-இல் படித்தவர் என்று அறிந்தேன்.  ஓ, அதுதானா என்று விஷயம் விளங்கி விட்டது.  இப்பேர்ப்பட்டவரை நம்முடைய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அழைக்கலாமே என்று போன் செய்தேன்.  மிஸ்டர் கிருஷ்ணாதானே என்றேன்.  ஆமாம் என்றார் மென்மையான குரலில்.  என் பெயரைச் சொன்னேன்.  அடுத்த வினாடி போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.  சரி, போன் பிரச்சினை, அவரிடமிருந்தே அழைப்பு வரும் என்று காத்திருந்தேன்.  பிறகு மீண்டும் நானே அழைத்தேன்.   இறுக்கமான குரலில் என்ன என்று கேட்டார். (பழைய மென்மை போய் விட்டிருந்தது.) விஷயம் சொன்னேன்.  விழா நடக்க இருக்கும் தேதி ஃபெப்ருவரி 27 என்றேன்.   அன்றைய தினம் சிங்கப்பூரில் இருக்கிறேன் என்று சொல்லி விட்டு என் பதிலுக்கும் காத்திராமல் போனை வைத்து விட்டார்.
எனக்கு ஒரு மாதிரியாகப் போய் விட்டது.  மறுக்கலாம், தப்பில்லை.  ஆனால் அதற்கும் ஒரு முறை இருக்கிறதே என்று நினைத்தேன்.  பிறகு நம் மீதுதான் தப்பு; நாம் ஏன் அவரைக் கேட்டோம் என்று நினைத்து விட்டு விட்டேன்.  ஆனால் ஆச்சரியகரமாக அன்றைய தினம் மாலை ஆறு மணி அளவில் பெசண்ட் நகர் எட்வர்ட் எலியர்ட்ஸ் பீச்சில் அவரை எனக்கு நேர் எதிராக பத்து அடி தூரத்தில் பார்த்தேன்.  கண்ணுக்குக் கண்.  நேர் எதிரே.  பத்து அடி தூரம்.  ஆச்சரியம் மேலிட, ஆ, கிருஷ்ணா என்று மலர்ச்சியுடன் சிரித்தேன்.  அவரோ முகத்தைத் திருப்பிக் கொண்டு போய் விட்டார்.  என்னைப் பார்த்த பிறகே சென்றார்.  என்னைப் பார்த்ததை நான் பார்த்தேன்.  சாவகாசமாக நடந்து வந்து கொண்டிருந்தவர் என்னைப் பார்த்த பிறகு மிக அவசரமாக நடைபாதையை விட்டுக் கீழே இறங்கிப் போய் விட்டார்.  அந்தத் தருணத்தில்தான் புரிந்து கொண்டேன், அவர் என்னைத் தவிர்க்கிறார் என்பதை.  ஆனாலும் ஜே.கே.பள்ளியில் கல்வி பயின்ற ஒரு ஆத்மா இன்னொரு மனித ஜீவியை இத்தனை மூர்க்கமாக அவமதிக்க வேண்டுமா என்று தோன்றியது.  உங்களைப் பார்த்து முகமலர்ச்சியுடன் கை குலுக்க ஓடி வரும் ஒரு மனிதனைப் பார்த்து விட்டு வேறு பக்கம் போய் விடுவீர்களா என்ன?  இவ்வளவுக்கும் நான் டி.எம். கிருஷ்ணா பற்றிப் பாராட்டித்தான் என் இணைய தளத்தில் எழுதியிருக்கிறேன்.
அதற்குப் பிறகு பல முறை அமேதிஸ்ட் உணவகத்தில் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  என்னைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொள்வார்.  நானும் அவர் எதிர்பார்ப்பது போலவே அவர் பக்கம் போக மாட்டேன்.  ஆனால் உண்மையில் அந்த எட்வர்ட் எலியர்ட்ஸ் பீச் சம்பவத்தின் போதுதான் சாரு நிவேதிதாவாகிய நான் கொஞ்சம் பெரிய ஆள் போலிருக்கிறது என்று புரிந்து கொண்டேன்.  என்னைப் பார்த்து ஒரு பிரபலமான மனிதர் தப்பி ஓடுகிறார் என்றால் நான் கொஞ்சம் பெரிய ஆள் என்றுதானே அர்த்தம்?
உங்கள் கடிதத்தைப் படித்த போது இதையெல்லாம் இப்போதாவது சொல்லலாம் என்று தோன்றுகிறது.
இம்மாதிரி தருணங்களில் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தீண்டத்தகாதவன் எப்படி உணர்ந்திருப்பானோ அவ்வாறே நானும் உணர்கிறேன்.  இதெல்லாம் நவீன தீண்டாமை என்றே கருதுகிறேன்.  இந்த நவீன தீண்டாமை இப்போது ஜாதி வித்தியாசம் இல்லாமல் சகல தரப்பிலும் பரவியிருக்கிறது.
டி.எம். கிருஷ்ணாவின் Southern Music என்ற பெரிய புத்தகத்தை ஆசை ஆசையாக வாங்கி வைத்திருக்கிறேன்.  அதை நிச்சயம் படிப்பேன்.  அதற்கும் மேற்படி சம்பவங்களுக்கும் சம்பந்தம் இருக்காது.
என் மதிப்பிற்குரிய மூத்தவர் ஒருவர் மும்மூர்த்திகள் பற்றி என்னை ஒரு புத்தகம் எழுதப் பணித்தார்.  ஸ்ரீவில்லிபுத்தூர், 1857 என்ற இரண்டு நாவல்களையும் முடித்து விட்டு, இறை சக்தி எனக்கு அனுமதியும் ஆன்ம பலமும் அருளினால் எழுதலாம்.
இப்போதைக்கு எம்.எஸ். என்ற தேன்கூட்டுக்குள் கை வைத்துக் கொட்டுப் பட நான் விரும்பவில்லை.  என் சங்கீத ரசனைக்குள் எம்.எஸ். என்ற பெயர் இல்லை.  அந்தப் பெயர் ஊடகங்களால் மட்டுமே பூதாகரமாக்கப்பட்டது; இப்போதைய சகாயம் ஐ.ஏ.எஸ்.போல.
அன்புடன்,
சாரு

கருத்துகள் இல்லை: