ஞாயிறு, 22 மே, 2016

விப்ரோவில் ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடிய ஷ்ரேயா உக்கில்

ஷ்ரேயா உக்கிலின் கதை அனைத்து இந்திய ஐ.டி பெண் ஊழியர்களின் வழக்கமான கதையாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், அவரது அனுபவங்களில் சிலதையோ பலதையோ ஒவ்வொருவரும் அலுவலகப் பணியில் தினமும் எதிர்கொள்கின்றனர்.
ஷ்ரேயா 2005-ம் ஆண்டு விப்ரோ பெங்களூருவில் வேலைக்கு சேர்ந்தார். தொடர்ந்து 2010-ல் ஐரோப்பிய விற்பனை பிரிவின் லண்டன் அலுவலகத்துக்கு பணி புரியச் சென்றார். அங்கு விப்ரோவின் ஐரோப்பிய விற்பனை மேலாளர் வினய் ஃபிராகே மேனேஜராக இருந்த பிரிவில் சேர்ந்தார்.
“ஆண்கள் சக பெண் ஊழியர்களுடன் முறையற்ற தொடர்புக்கு முயற்சிப்பது, பணிரீதியான பயணங்களில் நிர்வாண கிளப்புகளுக்கு போவது, சத்தமாகப் பேசி வாயடைக்கச் செய்வது, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது என ஆணாதிக்க, பெண் வேட்டையாடும், பெண்களை சிறுமைப்படுத்தும் கலாச்சாரம் விப்ரோவில் நிலவுகிறது.
பெண்கள் அடங்கிப் போனவர்களாக இருக்கக் கோரும் சூழலை விப்ரோ ஊக்குவிக்கிறது” என்கிறார் ஷ்ரேயா.
தான் ஒரு பெண்ணாக, இந்தியப் பெண்ணாக இருந்ததால், உயர் பதவிகளில் இருக்கும் நபர்களுடன் நட்பை பராமரிக்கும் ஒரு மூத்த, அதிகாரம் படைத்த மேலாளருக்கு இணங்கிப் போக கட்டாயப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக கூறுகிறார் ஷ்ரேயா. பெண் என்பதால் ஒதுக்கி வைக்கப்படுவது, மிரட்டப்படுவது, துன்புறுத்தப்படுவது இவை குறித்து புகார் சொல்லத் துணிந்ததால் தான் பழி வாங்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.
Clipboard
விப்ரோ கம்பெனி
தைரியமான, திறமையான, தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் பெண்கள் “எமோஷனல்”, “சைக்கோடிக்”, “மெனபாசல்” என்று முத்திரை குத்தப்படுகின்றனர். அவர்களை ஆதரிக்கும் பெண்கள் “லெஸ்பியன்கள்” என்று அழைக்கப்படுகின்றனர் என்கிறார் ஷ்ரேயா.
2010-ல் லண்டனுக்கு பணி புரிய சென்ற ஷ்ரேயாவை அவரது மேனேஜர் வினய் உளரீதியில் சித்திரவதை செய்திருக்கிறார். ஷ்ரேயாவை “ஷ்ரில்”, “பிட்ச்” என்று பாலியல் ரீதியான வசவுகளாலும் “ஆழமற்றவர்”, “ஐரோப்பியரல்லாதவர்” போன்ற அவமதிக்கும் சொற்களாலும் திட்டுவதை வழக்கமாக வைத்திருந்தார் வினய். அவரது பதவி உயர்வு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறார். அதே வேலை செய்த அவரது சக ஆண் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு £160,000 வரை ஊதியம் கொடுக்கப்பட்ட நிலையில் ஷ்ரேயாவின் சம்பளம் £75,000 ஆக இருந்தது.
அந்த ஆண்டு இறுதியில் ஷ்ரேயா விப்ரோவின் சர்வதேச விற்பனை பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்ட புஞ்சா என்ற மேலாளரிடம் இது குறித்து புகார் அளித்தார்.
நிலைமை இன்னும் மோசமானது. 54 வயதான புஞ்சா, ஷ்ரேயாவை பாலியல் ரீதியாக வசப்படுத்துவதற்கு தீவிரமான, திட்டமிட்ட முயற்சியில் இறங்கினார். பல சந்தர்ப்பங்களில் அலுவலக வேலைக்குப் பிறகு இரவு வெகு நேரம் தன்னுடன் உட்கார்ந்து குடிக்கும்படி வற்புறுத்தியிருக்கிறார், தனது ஹோட்டல் அறைக்கு வரும்படி ஷ்ரேயாவை அழைத்திருக்கிறார்.
ஒரு வெளிநாட்டு பயணத்தின் போது, ஷ்ரேயா தன்னை சஞ்சலப்படுத்துவதாகவும், இந்திய புராணத்தில் வரும் முனிவர்களின் தவத்தைக் கலைக்கும் அப்சரஸ் போல அவர் இருப்பதாகவும் புஞ்சா அவரிடம் கூறியிருக்கிறார்.
தான் தனது மனைவியிடமிருந்து பிரிந்து விட்டதாகவும், தனிமையாக உணர்வதாகவும், தனது மகளை ஷ்ரேயாதான் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் புலம்பியிருக்கிறார். இன்னொரு சமயம் ஷ்ரேயாவின் வீட்டுக்கு வந்த அவர் அங்கு தங்கப் போவதாக வலியுறுத்தியிருக்கிறார்.
அவரது அணுகல்களை ஷ்ரேயா தவிர்க்க முயற்சித்த போது, ஷ்ரேயா தன்னை அவமானப்படுத்தி விட்டதாகவும், வேறு யாரும் தன்னை அவ்வளவு அவமானப்படுத்தியதில்லை என்றும், யாருடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விட்டாயா என்றும் மிரட்டியிருக்கிறார், புஞ்சா. அவரது விடாப்பிடியான மிரட்டல்களைத் தொடர்ந்து ஷ்ரேயா அவருடன் உறவு ஏற்படுத்திக் கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார். அது முழுக்க முழுக்க புஞ்சா தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியதால் நடந்தது என்கிறார் ஷ்ரேயா.
நிறுவனத்துக்கு இந்த விஷயம் தெரிய வந்த போது, ஷ்ரேயாவை அவரது விருப்பத்துக்கு மாறாக இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்த்து. ஷ்ரேயா விப்ரோவின் பி.பி.ஓ பிரிவுக்கு வெளியில் வேறு பிரிவுகளில் பணியிடம் தேட முயற்சித்த போது அதற்கு முட்டுக் கட்டை போட்டது. கடைசியில் ஷ்ரேயா விப்ரோவை விட்டு பணிவிலகல் கடிதம் கொடுத்தார்.
ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத நிறுவனம், அவரை பழி வாங்கும் விதமாக முறையற்ற நடத்தை என்று காரணம் காட்டி அவரை பதவி நீக்கம் செய்தது.
stop-this-shame
பெண்கள் அடங்கிப் போனவர்களாக இருக்கக் கோரும் சூழலை விப்ரோ ஊக்குவிக்கிறது
கடைசியில் மன அழுத்தத்துக்கு உள்ளான ஷ்ரேயா ஒரு மன நோய் மருத்துவரிடம் சிகிச்சை பெற ஆரம்பித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து நிறுவனத்தின் மீது துன்புறுத்தல் புகார் கொடுத்திருக்கிறார்.
தான் நடத்தப்பட்டது குறித்து மத்திய லண்டன் பணி தீர்ப்பாயத்திடம் அக்டோபர் 2015-ல் வழக்கு தொடுத்திருக்கிறார் ஷ்ரேயா. தீர்ப்பாயத்தின் தீர்ப்பு இப்போது வெளியாகியுள்ளது. அதன்படி, “விப்ரோவின் ஊதிய கொள்கையில் பாலின ரீதியாக பாகுபடுத்தும் போக்கு தோய்ந்துள்ளது”. ஷ்ரேயா பணிநீக்கம் செய்யப்பட்டது நியாயமற்றது என்று தீர்ப்பாயம் கூறியிருக்கிறது. ஆனால், நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி சக ஊழியரிடம் பாலியல் தொடர்பு வைத்திருந்ததால், அது தவறான பணிநீக்கம் என்று கூற முடியாது என்றும் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக விப்ரோவின் துணைத் தலைவர் டி.கே குரியன், தலைமை சட்ட ஆலோசகர் இந்தர்பிரீத் சானி, முன்னாள் துணைத் தலைவர் ஜார்ஜ் ஜோசப், பொது மேலாளர் சித் சர்மா, உலகளாவிய மனித வளத் துறைத் தலைவர் சவுரப் கோவில் உட்பட பல மூத்த விப்ரோ மேலாளர்கள் மீது ஷ்ரேயா குற்றம் சாட்டியிருந்தார். அவர்கள் பல்வேறு அளவுகளில் பழிவாங்குதல், நியாயமற்ற பணி நீக்கம், பாலின ரீதியாக பாகுபடுத்தல் போன்ற குற்றங்களை இழைத்ததாக தீர்ப்பாயம் கண்டறிந்துள்ளது.
office-harassment
54 வயதான புஞ்சா, ஷ்ரேயாவை பாலியல் ரீதியாக வசப்படுத்துவதற்கு தீவிரமான, திட்டமிட்ட முயற்சியில் இறங்கினார்
“இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்தாவது ஐ.டி நிறுவனங்கள், பெண் ஊழியர்களை நடத்துவதை மறுபரிசீலனை செய்து அவர்களை நியாயமாகவும் சமமாகவும் நடத்துவார்கள் என்று நம்புகிறேன்” என்கிறார் ஷ்ரேயா.
“எல்லா மட்டங்களிலும் உள்ள பெண்களை தமது குரலை வெளிப்படுத்தி, தமது கருத்துக்கள் கேட்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது ஒரு போராட்டம், கடுமையான போராட்டம் என்பதில் சந்தேகத்திற்கிடமில்லைதான். ஆனால், பெண்களுக்கு எதிரான இந்த நிலையை மாற்றுவதற்கான ஒரே வழி அதை புற உலகின் கவனத்துக்குக் கொண்டு வருவதுதான். எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் சரி, இது போன்ற நியாயமற்று, சட்ட விரோதமாக நடந்து கொண்டு தப்பி விட முடியாது. இது மரியாதைக்கும் சம உரிமைக்குமான போராட்டம். அந்தப் போராட்டம் மிகவும் கஷ்டமானதாக இருந்தது என்பது உண்மை. இருப்பினும், இதே போன்ற ஒரு போராட்டத்தை மீண்டும் நடத்த வேண்டி வந்தால் நான் முழு மனதோடு அதில் ஈடுபடுவேன்” என்கிறார் ஷ்ரேயா.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஐ.டி ஊழியர் பிரிவு
Call : 90031 98576

கருத்துகள் இல்லை: