கெளசல்யாவுக்கு எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் துவங்கி, கெளசல்யா தன் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து பலர் கவலை கொண்டிருந்ததை காண முடிந்தது கெளசல்யா இப்போது நலமாக இருக்கிறார். அவர் தற்கொலைக்கு முயன்றது உண்மை. ஆனால் அவர் அபாய கட்டத்தை எதுவும் எட்டவில்லை. மனரீதியில் அவர் தன்னை வலுப்படுத்திக்கொள்ள அவருக்கு மனநல ஆலோசனை தேவைப்படுகிறது. அதற்காக அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரை சந்திக்க மீடியாக்கள் உள்ளிட்ட யாருக்கும் அனுமதிக்கவில்லை. கெளசல்யா இனி என்ன செய்ய வேண்டும் என பலரும் கவலைப்படத் துவங்கி விட்டார்கள்.
அதிர வைத்த ஒற்றை வரி வாக்குமூலம்
இந்த கவலைக்கு மிக முக்கிய காரணம், தற்கொலைக்கு முயன்ற கெளசல்யா முதலில் சொன்ன ஒற்றை வரி வாக்குமூலம். 'நான் சாக விரும்புகிறேன். என்னை சாக விடுங்கள்' என்பது தான் அது. இரு மாதங்களுக்கு முன்னர் கெளசல்யாவின் கணவரான தலித் இளைஞர் சங்கர், சாதி மாறி கெளசல்யாவை திருமணம் செய்து கொண்டதால் உடுமலை பஸ் நிலையம் அருகே கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார். கெளசல்யாவும் தாக்கப்பட்டார்.
"அவங்க (கெளசல்யா) சம்பவம் நடந்த நாள்ல இருந்தே அதைப்பத்தி மட்டும் தான் நினைச்சுட்டு இருக்காங்க. ஆனா தன்கிட்ட இருந்த வருத்தத்தை எப்பவும் மத்தவங்ககிட்ட காட்டிக்கவே இல்லை" என்கிறார் சங்கரின் சகோதரர்.தற்கொலை முயற்சிக்கு காரணம் இது தான்< சங்கர் கொலை வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த நாட்களில் கெளசல்யாவின் மனவேதனை உச்சத்தை எட்டியுள்ளது. தன் மனவேதனையை யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத சூழல், மனவேதனையை மேலும் அதிகப்படுத்தியது. இதனால் சங்கரின் உடல் புதைக்கப்பட்ட இடத்துக்கு சென்று, புலம்பி அழுதுள்ளார் கெளசல்யா. மிக அதிகமான மனவேதனைக்குள்ளானவர், அதை யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார். இந்த மிக அதிகப்படியான மன வேதனையின் உச்சம் தான் கெளசல்யாவின் தற்கொலை முயற்சி.
தன்னோடு எப்போதும் உறங்கும் சங்கரின் உறவினர் வீட்டு பெண்ணிடம், 'இன்று நான் தனியாக படுத்துக்கொள்கிறேன்' என சொல்லி அவரை அனுப்பிய கெளசல்யா, அன்று இரவு உணவில் சானிபவுடரை கலந்து சாப்பிட்டுள்ளார். விஷம் பெரியதாக பரவாததால் ஆபத்தில் சிக்காமல் நன்றாக இருக்கிறார். இருந்தாலும் மனவேதனையில் இருக்கும் அவருக்கு மனநல ஆலோசனை என்பது அவசியமாகிறது. உடன் சில மருத்துவ பரிசோதனைகளும் அவருக்கு தேவைப்படுகிறது. அதனால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.>சாதிக்கு எப்போது முடிவு வரும்?
இத்தனை மன வேதனையிலும் தன்னை சந்திப்பவர்களிடம் தெளிவாகவே பேசும் கெளசல்யா. "சங்கர் மீதும், என் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலை இந்த உலகமே வேடிக்கை பார்த்தது. சங்கர் அதில் இறந்து விட்டார். நான் இங்கு நடை பிணமாகவே இருக்கிறேன். என் மீதுள்ள அன்பால் என் பெற்றோர் எதையும் செய்வார்கள் என நினைத்தேன். ஆனால் என் பெற்றோருக்கு என் மீது அன்பு இல்லை. அது சாதி மீதான அன்பு என்பதை உணர்ந்து கொண்டேன். எனக்கு நிறைய உதவிகள் கிடைத்தது. ஆனால் சாதி என் வாழ்க்கையை இழக்க செய்துவிட்டது. இந்த சாதிக்கு எல்லாம் எப்போது முடிவு வரும்?" என கேட்கும் கெளசல்யாவின் பேச்சில் மனவேதனையும், விரக்தியும் வெளிப்படுகிறது.
இது தொடர்பாக மன நல ஆலோசகரிடம் பேசினோம். "கெளசல்யா அங்கு வாழும் வரை சங்கரின் நினைவைவிட்டு விலக முடியாது. அது மட்டுமே நினைவில் இருக்கும். கெளசல்யா இளம்பெண். படிக்க, பணிக்கு செல்ல எல்லா வாய்ப்புகளும் அவருக்கு இருக்கிறது. சாதியால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார். இதில் இருந்து முழுமையாக விலக அவருக்கு இடமாற்றம் அவசியம். நன்கு படித்து வேலைக்கு சென்று தன்னை வலிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றனர்.
தன் கனவு, வாழ்க்கை எல்லாவற்றையும் சாதியிடம் பறிகொடுத்துவிட்டு நிற்கிறார் கெளசல்யா. சாதியின் கோர முகம் கெளசல்யாவை மிகவும் பயமுறுத்தி இருக்கிறது. நாம் எல்லாம் நினைத்து பார்க்க முடியாத ஒரு மோசமான இடத்தில் கெளசல்யா நிற்கிறார். அவர் மீள வேண்டும். மன வேதனையில் இருந்து மீண்டு புதிய வாழ்க்கையை அவர் தொடர வேண்டும். கெளசல்யா மருத்துவமனையில் இருந்த நாட்களில் அவர் திரும்ப திரும்ப எழுப்பிய கேள்விகளில் ஒன்று, 'இந்த சாதியை எல்லாம் ஒழிக்கவே முடியாதா? என்பது தான். முடியும். அதற்கு கெளசல்யாவும் வேண்டும்!< ச.ஜெ.ரவி
படங்கள்: >தி.விஜய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக