ஞாயிறு, 15 மே, 2016

அடிமைத்தனத்தில் ஊறியவர்கள் சதா பயபக்தியுடன் அடிமைகளாகவே இருப்பார்கள்....சுயமரியாதை... அப்படீன்னா?

Tamilnadu Assembly Election News: உடைக்கப்பட வேண்டிய பிம்பம்உடைக்கப்பட வேண்டிய பிம்பம் ஜெயலலிதா படுமோசமான தோல்வியை சந்திப்பார் என, இதுவரை வெளிவந்துள்ள எந்தவொரு கருத்துக் கணிப்பும் சொல்லவில்லை என்பது வியப்பூட்டும் விஷயம்தான், இல்லையா? இத்தனைக்கும் முழுக்க முழுக்கச் செயலற்று கிடந்த ஆட்சி இது. இது போதாதென்று, சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சில காலம் சிறைக்கும் சென்று திரும்பினார் ஜெயலலிதா. இதற்கெல்லாம் சிகரமாக, பெருமழை ஒன்றும் பெய்து தமிழகத்தையே புரட்டிப் போடவும் செய்தது.

அப்போதுகூட மக்களுக்கு உதவும் ஓர் அமைப்பாக அல்லாமல், ஒரு பகை சக்தி போலவே செயல்பட்டது ஜெயலலிதா அரசு. இருந்தும் ஏன் அவருடைய தோல்வியை யாரும் இதுவரை அழுத்தமாக அறிவிக்கவில்லை?
காரணம் எளிமையானது. இவ்வளவு செய்த பிறகும் (அல்லது உருப்படியாக எதுவுமே செய்யாத போதிலும்) ஜெயலலிதாவின் பிம்பம் உடைந்து சிதறிவிடவில்லை. இழைத்த தவறுகளுக்காக சிறை சென்றபோதும்கூட அவருக்கு ஆதரவான பேரலையொன்று எழவே செய்தது. அவருக்காக விமரிசையாக பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.
செயலற்ற அரசை விட்டுவிட்டு, மழை மீதே குற்றம் கண்டுபிடித்தனர். சசிபெருமாளின் தற்கொலை, தமிழகம் முழுவதும் நடைபெற்ற மக்கள் அதிகாரம் அமைப்பின் தொடர் போராட்டங்கள், மது திணிப்புக்கு எதிரான மக்களின் எழுச்சி அனைத்தையும் கடந்து, ஜெயலலிதாவின் புகழ் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது.
அவருடைய ஆட்சியால் தொடர்ந்து பாதிக்கப்படுபவர்கள் ஏழை, எளிய அடித்தட்டு மக்கள் தான் என்றபோதும், அவர்களில் கணிசமானவர்கள் ஜெயலலிதாவை இன்னமும் நிராகரித்துவிடவில்லை. இது விநோதமாக இல்லையா?இல்லை. 12 ஜனவரி, 1967 அன்று, எம்.ஆர்.ராதாவால் எம்.ஜி.ஆர்., சுடப்பட்டார். மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில், 50 ஆயிரம் மக்கள், வாசலில் திரண்டுவிட்டனர். இவர்களில் பலர் வாய் விட்டு அழுதபடி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர். மருத்துவமனையின் வழி நெடுகிலும் உள்ள கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டன. எம்.ஜி.ஆர்., மீண்டு வர ஆறு வாரங்கள் பிடித்தன.
அந்த ஆறு வாரங்களும் ஒரு நாள் விடாமல், கும்பல் கும்பலாக மக்கள் மருத்துவமனை வாசலில் திரண்டபடி இருந்தனர். பெங்களூரில் இருந்து, இருபது ரிக் ஷாக்காரர்கள் எம்.ஜி.ஆரைக் காண விரைந்து வந்ததைக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். காரணம், அவர்கள் தங்கள் மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு முழுக்க முழுக்க ரிக் ஷாவை மிதித்தபடியே வந்து சேர்ந்தனர்.
இது நடந்து, கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, தி.மு.க.,வில் இருந்து எம்.ஜி.ஆர்., வெளியேற்றப்பட்டார். வழக்கம் போல் இந்த முறையும் தமிழ்நாடு முழுவதும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. மக்கள் வீதிகளில் திரண்டனர். தி.மு.க., கொடி கம்பங்கள் தேடித்தேடி
வீழ்த்தப்பட்டன.
தி.மு.க.,வுக்கு எதிரான கோஷங்கள் மூலைக்கு மூலை கேட்கத் தொடங்கின. இந்த நீக்கத்தை அவர்கள் எம்.ஜி.ஆருக்கு இழைக்கப்பட்ட அநீதியாகக்கூட காணவில்லை; தங்கள் மீது இழைக்கப்பட்ட தாக்குதலாகவே கண்டனர். அதனால் தான் பலர், கருணாநிதி அரசைப் பழிவாங்கும் விதமாக பேருந்துகளை தாக்கியழிக்கத் தொடங்கினர். கிட்டத்தட்ட, 60 லட்சம் ரூபாய் இழப்பை அரசு சந்திக்க வேண்டியிருந்தது.
பின்னர், உடல்நலம் மோசமடைந்து எம்.ஜி.ஆர்., அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, இருபதுக்கும் மேற்பட்டவர்கள் தீக்குளித்து இறந்து போயினர். எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த சமயத்தில் மட்டும் தமிழகத்தில் கிட்டத்தட்ட, 27 ஆயிரம் புதிய சாலையோர கோவில்கள் முளைத்தன.
எம்.ஜி.ஆர்., பின்னால் இப்படி லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வர என்ன காரணம்?
‘தி இமேஜ் டிராப்’ என்னும் நுாலில் திராவிட இயக்க ஆய்வாளர் எம்.எஸ்.எஸ். பாண்டியன் இந்த விநோதத்தை விரிவாக அலசுகிறார்.
எம்.ஜி.ஆர்., தன் ஆட்சிக்காலத்தில் புரட்சிகர பொருளாதார கொள்கைகள் எதையும் வகுத்துவிடவில்லை. ஏழை மக்களின் வாழ்வை மாற்றிஅமைக்கும்படியான திட்டங்களை வடிவமைக்கவும் இல்லை. அடித்தட்டு மக்களின் நலன்கள் மீது அவர் ஆர்வம் செலுத்தவில்லை. உண்மையில், அவருடைய கொள்கைகளும், திட்டங்களும், ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்கு எதிரானவையாகவும், மேல்மட்ட வர்க்கத்தினருக்கு ஆதரவாகவும் தான் இருந்தன.
இருந்தும், ஏழை எளிய மக்கள், அவர் பின்னால் திரண்டு வந்ததற்குக் காரணம், அவர் கவனமாக உருவாக்கியிருந்த பிம்பம். பாட்டாளிகளின் பங்காளனாக, ஏழைகளின் நாயகனாக, அவர் தன் ஆளுமையைத் திரைப்படங்கள் மூலம் வகுத்துக் கொண்டார். அதை மக்கள் நிஜமென்றே நம்பினர்.
ஜெயலலிதா செய்திருப்பதும் இதையே தான். எம்.ஜி.ஆரைப் போலவே, மது விற்பனை மூலம் கிடைத்த வருமானத்தில் இருந்து ஒரு சிறு தொகையைக் கிள்ளி இலவசங்களாக அள்ளித் தெளித்தார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரைப் பின்பற்றி மக்கள் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கினார்.
எம்.ஜி.ஆரைப் போலவே தன்னையும் ஏழை மக்களின் தலைவராக சித்திரித்துக் கொண்டார். அமைச்சர்கள் முதுகை வளைத்து நின்று அவருக்குச் சலாமிடு வதை மக்கள் பயபக்தியுடன் காணுமாறு செய்தார். மக்கள் அதிருப்தியடையும் போதெல்லாம் புதிய இலவசங்களைக் கொண்டு அவர்களை அமைதியாக்கினார். மீண்டும் எம்.ஜி.ஆரைப் போலவே பெண்களின் ஆதர்சனமாகத் தன்னை வடிவமைத்துக் கொண்டார்.
ஜெயலலிதாவின் ஆட்சி அடித்தட்டு மக்களுக்கு எதிரானது. இருந்தும், அவர்களே ஜெயலலிதாவின் வாக்கு வங்கியாகவும் இருக்கின்றனர். இந்த நிலையை மாற்றுவதற்கு ஜெயலிதாவின் தேர்தல் தோல்வி மட்டும் உதவாது. அவருடைய பிம்பமும் உடைக்கப்பட்டாக வேண்டும். இது நடக்காவிட்டால் பின்னர் அவரிடத்தைப் பிடிக்கும் இன்னொருவரும் இதேபோன்ற பிம்பத்தை
உருவாக்கிக் கொள்ள ஆரம்பிப்பார்.
மருதன்
கட்டுரையாசிரியர் கிழக்கு பதிப்பகத்தின் நுாலாசிரியர். அரசியல், வரலாறு ஆகிய துறைகளில்
நுால்கள் எழுதியுள்ளார்.
தொடர்புக்கு: marudhan@gmail.com  தினமலர்.com

கருத்துகள் இல்லை: