வெள்ளி, 20 மே, 2016

17 இடங்களில் வெற்றி: புதுச்சேரியில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சி


புதுவை சட்டமன்ற தேர்தலில் 17 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைக்கிறது. வாக்கு எண்ணிக்கை புதுவை மாநிலத்தில் 30 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. புதுவை சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அமைத்து ஓரணியாகவும், என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதீய ஜனதா, பா.ம.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாவும் போட்டியிட்டன. மக்கள் நல கூட்டணியும் போட்டியிட்டது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 16-ந்தேதி நடந்தது. < வாக்குப்பதிவு முடிந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. வாக்குகள் பாரதிதாசன் மகளிர் கல்லூரி, லாஸ்பேட்டை மகளிர் பாலிடெக் னிக் கல்லூரி மற்றும் காரைக் கால், மாகி, ஏனாம் ஆகிய 5 இடங்களில் எண்ணப்பட்டது.


முன்னணி

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்குகளிலேயே காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் முன்னணி வகிக்க தொடங்கினார்கள்.

தொடக்கத்தில் இருந்த முன்னணி போன்றே வாக்குகள் எண்ண எண்ண காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்து இருப்பது தெரியவந்தது.

ரங்கசாமி வெற்றி

இந்திராநகர் தொகுதியில் போட்டியிட்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி கூட முதல் சுற்றில் பின் தங்கினார். அவர் 4 ஆயிரத்து 923 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட ஏ.கே.டி.ஆறுமுகம் 5 ஆயிரத்து 993 வாக்குகளும் பெற்றிருந்தார். அதன் பின் 2-வது சுற்றில் ஏ.கே.டி.ஆறுமுகம் 4 ஆயிரத்து 28 வாக்குகளும், ரங்கசாமி 5 ஆயிரத்து 159 வாக்குகளும் பெற்றனர். தொடர்ந்து வந்த மேலும் 2 சுற்றுகளிலும் ரங்கசாமி முன்னிலை வகித்து வெற்றிபெற்றார்.

காங்கிரஸ் கட்சியின் புதுவை மாநில தலைவர் நமச்சிவாயம், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் வெற்றிபெற்றனர். தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார், காரைக்கால் மாவட்ட அமைப்பாளர் நாஜிம், புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் புருஷோத்தமன் ஆகியோர் தோல்வியை தழுவினார்கள்.

காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள்

அதேபோல் அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கண்ணனும் வெற்றிவாய்ப்பினை இழந்தார். இறுதியாக காங்கிரஸ் 15 இடங்களிலும், என்.ஆர்.காங்கிரஸ் 8 இடங் களிலும், அ.தி.மு.க. 4 இடங் களிலும், தி.மு.க. 2 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றிபெற்றனர்.

புதுவையில் ஆட்சி அமைக்க 16 இடங்கள் தேவை. காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி மொத்தம் 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிக இடங்களில் வெற்றிபெற்றதால் புதுச்சேரியில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைகிறது.

வாக்கு சதவீதம்

இந்த தேர்தலில் காங்கிரசுக்கு 30.6 சதவீத வாக்குகளும், என்.ஆர்.காங்கிரசுக்கு 28.1 சதவீத வாக்குகளும், அ.தி.மு.க.வுக்கு 16.8 சதவீத வாக்குகளும், தி.மு.க.வுக்கு 8.9 சதவீத வாக்குகளும், பாரதீய ஜனதாவுக்கு 2.4 சதவீத வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்டுக்கு 1.1 சதவீத வாக்குகளும், பா.ம.க.வுக்கு 0.7 சதவீத வாக்குகளும் கிடைத்தன. சுயேச்சை வேட்பாளர்கள் 7.9 சதவீத வாக்குகளை பெற்றனர்.

நோட்டாவுக்கு (யாருக்கும் இல்லை) 1.7 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

காங்கிரஸ் வென்ற தொகுதிகள்

காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகள் வருமாறு:-

1. ஊசுடு (தனி)

2. வில்லியனூர்

3. உழவர்கரை

4. காமராஜ் நகர்

5. லாஸ்பேட்டை

6. காலாப்பட்டு

7. ராஜ்பவன்

8. நெல்லித்தோப்பு

9. அரியாங்குப்பம்

10. மணவெளி

11. ஏம்பலம் (தனி)

12 நெட்டப்பாக்கம் (தனி)

13. பாகூர்

14. திருநள்ளாறு

15. ஏனாம்

தி.மு.க. உருளையன் பேட்டை, நிரவி-திருபட்டினம் ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றது.

என்.ஆர்.காங்கிரஸ்

என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகள் வருமாறு:-

1. மண்ணாடிப்பட்டு

2. திருபுவனை (தனி)

3. மங்கலம்

4. கதிர்காமம்

5. இந்திரா நகர்

6. தட்டாஞ்சாவடி

7. நெடுங்காடு (தனி)

8. காரைக்கால் வடக்கு

அ.தி.மு.க.

முத்தியால்பேட்டை, உப்பளம், முதலியார்பேட்டை, காரைக்கால் தெற்கு ஆகிய 4 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. மாகி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.

கடந்த தேர்தலில் 15 இடங் களில் வெற்றிபெற்ற என்.ஆர். காங்கிரஸ் இந்த முறை 7 இடங்களை இழந்துள்ளது. கடந்த முறை 5 இடங்களில் வெற்றிபெற்ற அ.தி.மு.க. ஓரிடத்தை இழந்துள்ளது. தி.மு.க. கடந்த முறையை போன்றே 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து புதுவையில் காங்கிரசார் உற்சாகமாக கொண்டாடினார்கள்  dailtythanthi.com

கருத்துகள் இல்லை: