திங்கள், 16 மே, 2016

கேரளாவில் 71 சதவீத வாக்குப்பதிவு: அதிகபட்சமாக கண்ணூர் மாவட்டத்தில் 78.49 சதவீத வாக்குகள் பதிவு

கேரளாவில் இன்று நடந்த சட்டமன்றத் தேர்தலில் சராசரியாக 71 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக கண்ணூர் மாவட்டத்தில் 78 சதவீத வாக்குகள் பதிவாகின. திருவனந்தபுரம்: கேரள சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட 140 தொகுதிகளில் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலையில் இருந்தே ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். கேரள கவர்னர் சதாசிவம், முதல் மந்திரி உம்மன் சாண்டி, கம்யூனிஸ்ட் தலைவர் அச்சுதானந்தன் முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி, மத்திய முன்னாள் மந்திரி சசிதரூர், மாநில பா.ஜ.க. தலைவர் ஓ.ராஜகோபால், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் நடிகருமான சுரேஷ் கோபி, நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்டோர் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.


காலை 7 மணியளவில் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. அப்போது சராசரியாக 71.7 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக கண்ணூர் மாவட்டத்தில் 78.49 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. குறைந்தபட்சமாக பத்தனம்திட்டாவில் 61.95 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

இதர மாவட்டங்களான திருவனந்தபுரத்தில் 67.83 சதவீதம், காசர்கோட்டில் 71.80 சதவீதம், வயநாட்டில் 70.42 சதவீதம், கோழிக்கோட்டில் 73.76 சதவீதம், மலப்புரத்தில் 68.51 சதவீதம், பாலக்காட்டில் 76.50 சதவீதம், திரிச்சூரில் 72.52 சதவீதம், எர்ணாகுளத்தில் 72.33 சதவீதம், இடுக்கியில் 72.18 சதவீதம், கோட்டயத்தில் 71.98 சதவீதம், ஆலப்புழாவில் 74.54 சதவீதம், கொல்லம் மாவட்டத்தில் 69.59 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: