அந்த வாகனத்தை விரட்டிச் சென்று தடுத்து நிறுத்தினர். விசாரணையில், ' ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின்பேரில் விஜயவாடாவில் உள்ள ஸ்டேட் வங்கி கிளைக்குப் பணம் கொண்டு செல்லப்படுவதாக' தெரிவித்துள்ளனர்.
ஆனாலும், இதுதொடர்பான ஆவணங்களை தேர்தல் அதிகாரிகளிடம் காட்டவில்லை. கண்டெய்னர் லாரியின் எண்ணும், காட்டப்பட்ட ஆவணங்களிலும் பெருமளவு வித்தியாசம் இருந்துள்ளது. அதிலும், ஒரே நேரத்தில் 570 கோடி ரூபாய் பணம் பிடிப்பட்டது, பொதுமக்களிடையே கூடுதல் சந்தேகங்களைக் கிளப்பியது. 'இது யாருடைய பணம்? எதற்காக மாநிலம்விட்டு மாநிலம் கடத்தப்பட்டது? அதிலும், தேர்தலுக்கு ஒருநாள் முன்பு இப்படி அவசரம் அவசரமாகக் கொண்டு செல்லப்படுவதன் மர்மம் என்ன? அதிகாரிகளைப் பார்த்ததும் கண்டெய்னரில் வந்தவர்கள் தப்பியோட முயற்சித்தது ஏன்?' என பல கேள்விகளை அரசியல் கட்சிகள் எழுப்பின.
ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்குக் கொண்டு செல்லப்பட்ட பணம் என்றால், பறக்கும் படையினர் வண்டியை நிறுத்த முயன்ற போது நிற்காமல் சென்றதற்கு என்ன காரணம்? தவறான வழிகளில் சேர்ந்த பணம் என்பதால் தானே கன்டெய்னர்களை நிறுத்தாமல் கொண்டு சென்றிருக்கிறார்கள். வண்டியில் ஏதோ ஜெராக்ஸ் நகல்களை மட்டும் காட்டினார்களாம். அந்த நகல்களிலும் முரண்பாடான தகவல்கள் உள்ளனவே. உண்மை நகல்கள் எங்கே? இவ்வளவு பணம் எடுத்துச் சென்றால் அது உண்மையான நேர்மையான நோக்கத்திற்கான பணமாக இருந்தால், இன்சூரன்ஸ் செய்திருக்க வேண்டும். அப்படி எந்த இன்சூரன்ஸ் ஆவணங்களும் இல்லையாம். ரிசர்வ் வங்கி விதி முறைப்படி ஒரு கோடி ரூபாய் கொண்டு சென்றால், அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு பாதுகாப்போடு செல்ல வேண்டுமென்றும், 5 கோடி ரூபாய் கொண்டு சென்றால், அதற்கு எவ்வளவு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதற்கு விதிமுறைகள் உள்ளன. விதிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன. இந்தப் பணத்தை பகலில் அல்லாமல் இரவில் எடுத்துச் செல்ல என்ன காரணம்?" எனக் கேள்வி எழுப்பிருந்தார்.
இதற்கு ஆந்திராவைச் சேர்ந்தவரும், தமிழகத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் நபர் ஒருவர்தான் உதவியிருக்கிறார். 'பதவியைத் தக்க வைத்ததற்கான கைமாறு' என ஒரே வரியில் சொல்லிவிடலாம். கண்டெய்னர் பணத்தோடு சூரி ரெட்டி என்பவர் சென்றதாகச் சொல்கிறார்கள். அவர் ஒரு சாதாரண ஊழியர். இவ்வளவு பெரிய தொகைக்கு அவர் ஒருவர் மட்டும்தான் பொறுப்பாளி. இதைவிட, இந்தப் பணம் வங்கிக்குச் சொந்தமானது அல்ல என்பதற்கு வேறு காரணம் தேவையில்லை. தேர்தல் முடிந்த பிறகு பணத்தைக் கொண்டு போயிருக்கலாம். வருமான வரித்துறை இந்தப் பணத்தை மோப்பம் பிடித்துவிட்டதுதான், அவசரமாகக் கடத்தி செல்லப்படுவதற்குக் காரணம்" என்றார் விரிவாக.
சில சந்தேகங்கள்:
1. கோவை வங்கிகளின் வரலாற்றிலேயே இவ்வளவு பணத்தை இதுவரையில் கொண்டு சென்றதில்லை. 570 கோடியை சேமித்து வைக்கும் அளவுக்கான வசதிகள் ஸ்டேட் வங்கியில் இல்லை என்பது உண்மையா? இல்லையா?
2. பணம் அனைத்தும் மரப் பெட்டிகளில் ஏதோ பிஸ்கட் பாக்கெட்டுகளை பேக்கிங் செய்வதுபோல், அடுக்கியிருந்தது சரியா?
3. வங்கிகளின் அதிகாரப்பூர்வ ஆவணம் இல்லாமல், லுங்கி உடையில் காவல்துறையினர் சென்றது ஏன்?
4. பணம் பிடிபட்டு 18 மணிநேரம் கழித்து வங்கி அதிகாரிகள் உரிமை கொண்டாடியது ஏன்?
5. கண்டெய்னர் வண்டிகளுக்கு சாதாரண பூட்டைப் போட்டு பூட்டியது சரியா?
6. கண்டெய்னர்களுக்கு ஏன் சீல் வைக்கப்படவில்லை? பணம் பறிமுதலான அன்றே எஸ்.பி.ஐ வங்கி அதிகாரிகள் வெளியூருக்குத் தப்பிச் சென்றது ஏன்?
7. முக்கிய அரசியல் புள்ளியின் பணத்தை ஐதராபாத்துக்கு கொண்டு செல்ல முயற்சி நடந்ததா?
8. தமிழகத்தைச் சேர்ந்த மூத்த முக்கியப் புள்ளியின் அழுத்தத்தைத் தொடர்ந்தே, வங்கி அதிகாரிகள் பணத்திற்கு உரிமை கோரினார்கள் என்ற தகவல் உண்மையா?
-என அணிவகுக்கும் சந்தேகங்களை நம்மிடம் பட்டியலிட்டார் இந்தியன் வங்கி அதிகாரி ஒருவர். மேலும் அவர், " கோவை வங்கிகளின் வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய தொகையை நாங்கள் அனுப்பியதில்லை. மூன்று கண்டெய்னர் பணத்தையும் சேர்த்து 570 கோடி ரூபாய் என்பதை நம்ப முடியவில்லை. பணத்தின் மதிப்பு கூடுதலாக இருக்கவே வாய்ப்பு அதிகம். ஏற்கெனவே, ஐந்து கண்டெய்னர்கள் ஆந்திர போலீஸ் பாதுகாப்புடன் சென்று சேர வேண்டிய இடத்திற்குப் போய்விட்டது என்கிறார்கள். கடைசி நிமிடத்தில் இருக்கும் மீதிப் பணத்தையும் கடத்த முயற்சித்து மாட்டிக் கொண்டார்கள். ரிசர்வ் வங்கி ஆளுநர் நேரடியாக விசாரணை நடத்தினால், யாருடைய ஊழல் பணம்? எதற்காக ஆந்திரா சென்றது? கடைசி நிமிடத்தில் மாநிலம் விட்டு மாநிலம் கடத்த முயற்சித்தது ஏன்? என்பதற்கான முழு ரகசியங்களும் அம்பலமாகும்" என்கிறார்.
அரசின் பொருளாதார நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வரும், ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிடுவாரா? எனக் கேள்வி எழுப்புகின்றன அரசியல் கட்சிகள். தேர்தல் தொடங்கிய நாளில் இருந்தே கொங்கு மண்டலத்தை குறிவைத்தே வருமான வரித்துறையினர் படையெடுத்தனர். 'பெரும் பணம் சிக்கிவிடக் கூடாது' என்ற அச்சத்தில் கடைசி நிமிடத்தில் கண்டெய்னரில் கடத்த உத்தரவிட்டது யார்? என்ற மில்லியன் டாலர் கேள்விக்கான முடிச்சை ரிசர்வ் வங்கி அவிழ்க்குமா?
ஆ.விஜயானந்த் vikatan.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக