ஞாயிறு, 15 மே, 2016

நடிகர் பார்த்திபன்: எனக்கு கண்டெய்னரில் கரண்ஸி அனுப்பவில்லை...NOTA-வுக்கு நான் பிரச்சாரம்...?

NOTA - என்பது ஒரு கட்சி அல்ல. அதற்கு கிட்டும் வாக்குகளை வைத்து அது ஆட்சி அமைக்க போவதும் இல்லை. ஆனால் அது நம் உண்மை உணர்வின் உன்னத வெளிபாடு ! கட்சிகளுக்கு கண்டபடி சின்னங்கள் உண்டு அவ்வோட்டு சீட்டில்.ஆனால் மக்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ஒரே சின்னம் NOTA தான். அது ஆட்சி அமைக்காது. ஆனால் அதன் எண்ணிக்கை ஆட்சியாளர்களை அச்சுறுத்தும். அடுத்த கட்சிக்காரர்களை கவனமாக வேட்பாளர்களை தேர்வு செய்ய செய்யும். சுருக்கமாய் அது நம் சு'தந்திரச் சின்னம். யாரோ கொள்ளையடிப்பவர் ஆளட்டும் எனில் வெள்ளையனே ஆண்டிருக்கலாமே?
நம்மவர், நம்மில் ஒருவர், நம் உணர்வை உணர்ந்த உயர்ந்த ஒரு நல்லவர் ஆளவே, அதில் நம் உரிமைகளை ( மருத்துவமும் கல்வியும் சமமாய் தரமாய் ) பெற்று வாழவே சுதந்திரம் பெற்றோம்.
அது இன்று 10% நடந்தாலே 100% வெற்றி.
அப்பனாகவோ, அண்ணனாகவோ, தம்பியாகவோ ஒரே குடும்பத்தில் இருந்தாலும் அவரவர் கருத்தை வெளியிடும் சுதந்திரம் நமக்கும் இருக்க வேண்டும்.


நாம் வாக்களிப்பவர் வெற்றி பெற வேண்டுமே அன்றி யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்று ஊர் சொல்வதையோ கருத்துக்கணிப்பதையோ பார்த்து அவர்களுக்கே வாக்களிப்பதற்கு பதில் நம் வாயில் நாமே வாய்க்கரிசி போட்டுக்கொள்ளலாம்.
புகைப்படத்தில் உள்ள சின்னத்தில் உள்ளது வலக்கையா? இடக்கையா? என்பதை உற்று கவனித்ததைப் போல, நமக்கு நம்பிக்கையான வேட்பாளர் இருக்கும் சின்னத்தில் அவர் எந்த கட்சியாக/சுயேட்சையாக நின்றாலும் அவரை
(மிக மரியாதையாக) தேர்வு செய்வோம். அப்படி எவனும் (மரியாதை எதற்கு) இல்லையென்ற கோபத்தில் ஓட்டளிக்காமல் இருக்காமல்
NOTA-வளிப்போம். இப்படி நான் பிரச்சாரம் செய்ய எவரும் எனக்கு கண்டெய்னரில் கரண்ஸி அனுப்பவில்லை என்பதை துணை ராணுவத்தின் துணையுடன் துணிவுடன் சொல்லிக் கொள்கிறேன்.
இன்றிரவு NEWS 7-ல் 9-10 'திக்கற்ற வாக்காளர்களுக்கு வக்காலத்து' வாங்கிகிறேன்.
'அவசியம் பார்க்க வேண்டும்'என்ற அவசியமில்லை.
பிற பிரச்சாரங்களால் மூளை tired ஆகியிருக்கும்.
விரைவில் உறங்கி
தமிழகத்தின் விடியலாய் எழுவோம்!

கருத்துகள் இல்லை: