`ஆட்சிக்கு வந்தால் எல்லோருக்கும் செல்போன் தருவேன். உங்களிடம் ரேஷன் கார்டு இருக்கிறதா? கார்டை கொண்டுவந்து காட்டிவிட்டு செல்போன் வாங்கிச் செல்லுங்கள். பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க, 50 சதவிகித மானியம் தரப்படும். தமிழ்நாடு அரசு கேபிள் இணைப்பு பெற்றவர்களுக்கு செட்டாப் பாக்ஸ் இலவசம்.
100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு அது இலவசம். கட்டணம் செலுத்த வேண்டாம். மடிக் கணினி இதுவரை தந்துவருகிறோம். இனி கட்டணம் இல்லா இணையத்தள வசதியும் தரப்படும். பொங்கல் தினத்தன்று கோ-ஆப்டெக்ஸில் இருந்து துணிகள் வாங்கிக்கொள்ள, 500 ரூபாய்க்கு கிஃப்ட் கூப்பன் தரப்படும்' - இப்படிப் போய்க்கொண்டிருக்கிறது ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கை.
இவ்வளவையும் சொல்லிய ஜெயலலிதா, ‘தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் - 2023’-ன் கீழ் கண்டறியப்பட்டுள்ள திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு நிறைந்த பொருளாதார வளர்ச்சி எய்தப்படும்’ என்றும் கனவுகண்டுள்ளார். ஜெயலலிதா அறிவித்துள்ள இலவசங்களால் தமிழ்நாட்டின் கடன் அதிகம் ஆகுமே தவிர, பொருளாதார வளர்ச்சிக் கனவு நிச்சயம் நிறைவேறாது. ஆக்கபூர்வமான எந்த வேலையும் செய்யாமல் இலவசங்களை அள்ளிவிட்டு ஓட்டுகளை அறுவடைசெய்தால் நாடு ஓட்டாண்டி ஆகுமே தவிர, உயர்வைத் தொடாது.
தேர்தலைச் சந்திக்கும் ஓர் அரசியல் கட்சி, நாங்கள் வந்தால் என்னென்ன செய்வோம் எனச் சொல்லி மக்களை ஈர்க்கும். ஆளும் கட்சிக்கு அந்தத் துன்பம் இல்லை. என்னென்ன சாதனைகளைச் செய்தோம் என்பதைச் சொல்லி மக்களைச் சந்திக்க வேண்டும். எவ்வளவு எளிதாகச் செய்திருக்கலாம் ஜெயலலிதா... செய்தாரா?
தமிழ்நாட்டு மக்கள் தேர்தல் நேரத்தில் இலவசங்களை அள்ளி இறைத்தால் மயங்கிவிடுவார்கள் என ஜெயலலிதா நினைப்பது, முழித்துக்கொண்டே செய்யும் முழுத் துரோகம். அவர் கையில் தமிழ்நாட்டு மக்கள் வழங்கியது மிகமிக அதிகாரம் பொருந்திய அரசு. முந்தைய தி.மு.க அரசைப்போல மைனாரிட்டி அரசு அல்ல. காங்கிரஸின் தயவை நம்பி ஆட்சி நடத்தவேண்டிய நெருக்கடி கருணாநிதிக்கு இருந்தது. ஆனால், ஜெயலலிதாவுக்கு அப்படி எந்த நெருக்கடியும் இல்லை. அசுர பலம் இருந்தது. இதை ஆக்கபூர்வ விஷயங்களுக்குப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகளாவது வலிமையாக இருந்தார்களா என்றால் இல்லை. முந்தைய தி.மு.க ஆட்சியின்போது 68 உறுப்பினர்களுடன் பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக அ.தி.மு.க இருந்தது. இந்தத் துன்பமும் ஜெயலலிதாவுக்கு இல்லை. முக்கியக் கட்சியான தி.மு.க எதிர்க்கட்சி அந்தஸ்தையே பெறவில்லை. எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்ற தே.மு.தி.க சட்டமன்றத்தில் ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாகவும் செயல்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் சட்டமன்றத்துக்கே வரவில்லை. கருணாநிதி இல்லாத, விஜயகாந்த் வராத, ஸ்டாலின் பங்கேற்காத சபை அது. துரைமுருகன் துள்ளுவார்; சௌந்தர்ராஜன் சத்தம் போடுவார்; பாலபாரதி பாய்வார்; கிருஷ்ணசாமி கிடுகிடுப்பார்; ஜவாஹிருல்லாஹ் ஏதாவது சொல்வார். இவர்களைத் தவிர எந்தத் தொந்தரவும் இல்லாத சபை. இதை அறிவுப்பூர்வமாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
கருணாநிதியாவது முகஸ்துதிக்கு மயங்குவார். ஜெயலலிதா அடுத்தவர் முகம் பார்ப்பதே இல்லை. கருணாநிதியை சில அதிகாரிகள் ஒரு வட்டம் போட்டுக் கொண்டார்கள். ஜெயலலிதாவுக்கு ஷீலா பாலகிருஷ்ணன் மட்டும்தான். தி.மு.க ஆட்சியை தி.மு.க போலீஸ் ரவுண்டு கட்டி நின்றது. ஆனால் ஜெயலலிதாவுக்கு ராமானுஜம் மட்டும்தான். (அவரும் ‘பழைய’ தி.மு.க போலீஸ்!) கருணாநிதி வரச்சொன்னால், ஒரு மணி நேரம்கூடத் தாமதமாக பொன்முடி போகலாம். ஜெயலலிதா வரச் சொன்ன நேரத்துக்கு பல மணி நேரத்துக்கு முன்னதாக மந்திரிகள் கார்டன் கேரிடாருக்குப் போய்விடுகிறார்கள். இல்லாவிட்டால், மணிமுடி போய்விடும். பிரதமர் மோடி தொடங்கி மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், வெங்கய்ய நாயுடு, ரவிசங்கர் பிரசாத் வரை போயஸ் கார்டனுக்கு எப்போதும் வரத் தயாராக இருப்பவர்கள்.
எப்படிப்பட்ட அதிகாரம் ஜெயலலிதாவுக்கு இருந்தது? ஒரே கையெழுத்தில் பல்லாயிரக்கணக்கான டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடியிருக்கலாம்; ஒரே உத்தரவில் மணல் கொள்ளையைத் தடுத்திருக்கலாம்; பல லட்சம் கோடி கிரானைட் அபகரிப்பையும், பலகோடி கோடி கார்னைட் கபளீகரத்தையும் தடுத்திருக்கலாம்; ம்ஹூம் அது எதுவுமே செய்யாமல்...
‘அம்மா என்றால் அன்பு’ எனப் பாட்டுப் பாடுவதைப்போல... ‘மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும்’ என ராகம் பாடுகிறார். முதலில் டாஸ்மாக் கடையின் நேரத்தைக் குறைப்பாராம். அடுத்து பார்களை மூடுவாராம். அடுத்து குடி நோயாளிகளுக்கான மீட்பு நிலையம் அமைப்பாராம். அப்புறம் ஒவ்வொரு குடிகாரரையும் மீட்பாராம். இதன் பிறகு பூரண மதுவிலக்கு லட்சியத்தை அடைவாராம். பஜனை பாடுவதுபோலவே இருக்கிறது. இதை ஏன் சசிபெருமாள் செத்தபோது சொல்லவில்லை? படிப்படியாக நேரத்தைக் குறைத்து, பார்களை மூடி, மீட்பு நிலையங்களை இந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்படுத்தியிருக்கலாமே... ஏன் செய்யவில்லை? டாஸ்மாக்கை மூடவிடாமல் மிடாஸ் தடுக்கிறது. மிடாஸ் நிரந்தரம். முதலமைச்சர் நாற்காலி நிரந்தரம் அல்ல என்பதாலா?
கிரானைட் கொள்ளையைத் தடுக்க சகாயம் தலைமையில் விசாரணை ஆணையத்தை சென்னை உயர் நீதிமன்றம் தான் அமைத்தது. அதற்கு இடைஞ்சலாக கடந்த இரண்டு ஆண்டுகளில் எல்லா பகீரதப்பிரயத்தனங்களையும் செய்துவிட்டு, இன்று, ‘புதிய கிரானைட் கொள்கை வகுக்கப்படும்’ என ஜெயலலிதா சொல்கிறார். ‘கள்ளத்தனமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்தது தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் வசூலிக்கப் படும்’ என்ற அறிக்கை வரிகளைப் படித்தால், சிரிப்புத்தான் வருகிறது. மதுரையில் நடப்பதற்குப் பெயர் வழக்கா? இந்த வழக்கை ‘விசாரித்து’ பி.ஆர்.பழனிச்சாமியை ‘நிரபராதி’ என விடுவித்த மாஜிஸ்திரேட்டை மண்டையில் கொட்டி, உயர் நீதிமன்றம் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது என்றால், எந்த லட்சணத்தில் வழக்கு நடத்தியிருப்பார்கள் சம்பந்தப்பட்டவர்கள்?
இதேபோல்தான் தென்மாவட்டங்களில் நடந்த தாது மணல் கொள்ளை. அரசாங்கத்தின் வளத்தை தனிமனிதர் களுக்குத் தாரைவார்த்து, கடந்த 20 ஆண்டு களாகத் தண்டல் வசூலித்தவர்கள்தான் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும். ஜெயலலிதா இப்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்கிறார்... ‘அரசே தாதுமணல் எடுத்து விற்பனை செய்யும் பணியை மேற்கொள்ளும்’ என்று. மக்களின் மறதி மீது வீடு கட்டுவது என்பது இதுதான். கஹன்தீப் சிங் பேடி தலைமையில் தாதுமணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்தப்பட்டதே... அது என்ன ஆனது? அவர் விசாரணை நடத்தி அறிக்கைகொடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதே... அது எங்கே? கிடப்பில் போடப்பட்டது ஏன்? நடவடிக்கை எடுக்கப்படாததற்கு என்ன காரணம்? திடீரென இயற்கைவளத்தின் மீது என்ன பாசம்? அல்லது வைகுண்டராஜன் மீது என்ன கோபம்?
‘தி.மு.க-வின் ஒரே குறிக்கோள் மக்களை ஏமாற்றி வாக்குகளை அபகரிப்பதுதான். என்னைப் பொறுத்தவரை மக்களுக்காகத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். என்னால் நிறைவேற்ற முடியும் என்றால்தான் வாக்குறுதிகளை அளிப்பேன்’ என்று தஞ்சை பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா சொன்னார். 2011-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் `மோனோ ரயில்’ என்றார்.
`3,000 மெகாவாட் சூரிய மின்சாரம்’ என்றார். `கச்சத்தீவு மீட்பு’ என்றார். `நதிநீர் இணைப்பு’ என்றார். அதையே திரும்ப இப்போதும் சொல்கிறார்.
இலவசத் திட்டங்களும் கவர்ச்சிகர அறிவிப்புகளும், இறுதிச்சுற்றில் தனக்குக் கைகொடுக்கும் என்று நினைத்ததால்தான் இறுதிக்கட்டதை நெருங்கும் வரை, தேர்தல் அறிக்கையை ரகசியமாக வைத்திருந்தார் ஜெயலலிதா. இந்த ரகசியத்துக்கு ஓட்டு கிடைக்குமா என்ற ரகசியம் அவிழும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. மக்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை ஜெயலலிதா சொல்லிவிட்டார். ஜெயலலிதாவுக்கு என்ன கிடைக்கும்? காத்திருப்போம் மே 19-ம் தேதிக்கு!
ப.திருமாவேலன், படங்கள்: எம்.விஜயகுமார், ஆ.முத்துக்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக