செவ்வாய், 17 மே, 2016

570 கோடி ரூபாய் பணத்துடன் 3 லாரிகள் பலத்த பாதுகாப்புடன் கோவை கொண்டு செல்லப்பட்டது

கடந்த 13ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் செங்கப்பள்ளியிலிருந்து குன்னத்தூர் செல்லும் பாதையில் சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற அந்த லாரிகள் நிறுத்தி சோதனையிடப்பட்டது. லாரிகள் வந்த விதம், ஆவணங்கள் இல்லாதது, லாரிகளில் இருந்தவர்களின் நடவடிக்கைகள், பதிலில் சந்தேகம் இருந்ததால் 3 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. 3 லாரிகளும் கடந்த  3 நாட்களாக திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்தப் பணமானது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமானது என்று அதிகாரிகள் கூறினர். எனினும் தேர்தல் நடைமுறை அறிவிக்கப்பட்டு அமலில் உள்ள தமிழகத்தில் இருந்து இவ்வளவு பெரும் தொகையை கொண்டு சென்றது ஏன் என்கிற சர்ச்சை உண்டானது.


இதனிடையே அந்த லாரிகளில் 570 கோடிதான் இருந்ததா இல்லை அதற்கு மேலும் இருக்கிறதா என்ற சர்ச்சை எழுந்தது. அந்தப் பணத்தை எண்ணுவதற்கு திருப்பூர் கலெக்டர் அலுவலகம் உகந்த இடம் கிடையாது. அந்த லாரிகளை கோவை எஸ்.பி.ஐ. வங்கிக்கு கொண்டு சென்று அங்கு அந்த பணத்தை எண்ணுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாவட்டத்தினுடைய வருமான வரித்துறை இணை இயக்குநர் அருண், தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். இந்த நிலையில் 3 லாரிகளும் செவ்வாய்க்கிழமை காலை திருப்பூரில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கோவை பாரத ஸ்டேட் பாங்க் கருவூலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்று அந்த 3 லாரிகளிலும் இருக்கக் கூடிய பணத்தை எண்ணும் பணி நடைபெறும் என்று கூறப்படுகிறது. 3 லாரிகளும் 195 பெட்டிகளில் 100, 500, 1000 ரூபாய் என பணம் வைக்கப்பட்டுள்ளது. வருமனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் முழு சோதனை செய்யப்பட்ட பிறகே இதன் உண்மைத்தன்மை தெரியவரும் என்று ஒரு பக்கமும் மேல் மட்ட அளவில் இந்த விவகாரத்தை மூடி மறைப்பதற்காகவே கால அவகாசத்தை எடுத்துக்கொள்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. பணம் கொண்டு வரப்பட்டுள்ளதை அடுத்து வங்கியை சுற்றிலும் தமிழக போலிசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: