தவறான திசையில் இழுத்துச் சென்றவர் வைகோ: கி.வீரமணி.மக்கள் நலக் கூட்டணியை தவறான திசையில் இழுத்துச் சென்றவர் வைகோ என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழ்நாட்டின்
15ஆவது சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. அ.இ.அ.தி.மு.க
மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு வலுவான
எண்ணிக்கையில் திமுக எதிர்க்கட்சிப் பாத்திரத்தை வகிக்கிறது.நமது அன்பார்ந்த வாழ்த்துக்கள்!வெற்றி
பெற்றுள்ள அனைத்துக்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் திராவிடர்
கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக
ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அஇஅதிமுகவுக்கு அதன் பொதுச்செயலாளருக்கு
அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பெரும்பான்மை இடத்தை
பெற்றவர் என்ற முறையில் மக்களுக்கு நன்றி தெரிவித்தும், தேர்தல்
வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்றும் முதல் அமைச்சர் அவர்கள் கூறி
இருப்பது வரவேற்கத்தக்கது.
முதிர்ச்சி மிகுந்த தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் கருத்து
மக்கள்
தீர்ப்பை மதிப்பதாகவும், பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக திமுக செயல்படும்
என்று திமுக பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்றே (19.5.2016)
தெரிவித்திருப்பது அவரது முதிர்ச்சியினையும், அரசியல் பண்பாட்டையும்
காட்டுகிறது.
இந்தத்
தேர்தல் முடிவு பல உண்மைகளை வெளிப்படுத்தி இருக்கிறது. கொஞ்சகாலமாக
திராவிட இயக்க ஆட்சிகளுக்கு மாற்று அணி என்ற ஒரு முழக்கம் பெரிய அளவில்
தமிழ்நாட்டில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. அது வெற்று ஒலி என்று தேர்தல்
முடிவுகள் தெரிவித்துவிட்டன.
மக்கள்
நலக் கூட்டணி என்ற நான்கு கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்க இருந்தது;
அதற்குப் பின் தேமுதிக, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிகளும், விஜயகாந்த்
அவர்கள் தலைமையில் இணைந்து ஓரணியாக தேர்தல் களத்தில் நின்றன.
திராவிட கட்சிகளுக்கு மாற்று என்பது பொய்த்து விட்டது!
வெளிவந்திருக்கின்ற
தேர்தல் முடிவுகள் திராவிட இயக்கத்துக்கு மாற்று என்பது தமிழ்நாட்டில்
கிடையாது என்பது நிரூபணமாகிவிட்டது. இதற்குப் பிறகாவது இந்தப்போலி
கூக்குரலை சம்பந்தப்பட்டவர்கள் கைவிடுவது நல்லது- இது பா.ம.கவுக்கும்
சேர்த்துதான்!
இந்த
கூட்டணி ஓர் இடத்தைக் கூட பிடிக்கவில்லை; குறிப்பாக கூட்டணியின் தலைவர்
திரு.விஜயகாந்த் அவர்களே கூட டெபாசிட்டை இழக்கும் அளவுக்கு தமிழ்நாட்டு
மக்கள் பெரும் தோல்வியைத் தந்துவிட்டனர். கணிசமான எண்ணிக்கையில் இந்தக்
கூட்டணியின் வேட்பாளர்கள் டெபாசிட்டையும் இழந்துள்ளனர்!
மக்கள் நலக் கூட்டணியின் தவறு!
அய்ந்தாண்டு
காலம் நல்லாட்சியைத் தரத் தவறிய ஓர் ஆட்சியை வீழ்த்தவேண்டும் என்ற
நல்லெண்ணம் பொதுக்கருத்து இருந்திருக்குமேயானால், இவர்கள் என்ன
செய்திருக்க வேண்டும்? ஆளுங்கட்சியை வீழ்த்தும் வல்லமை - சக்தி யாருக்கு
இருக்கிறது - எந்த கட்சிக்கு இருக்கிறது என்று பகுத்தறிவின் அடிப்படையில்
ஆய்ந்து செயல்பட்டிருக்க வேண்டும். இடது சாரிகளும் இணைந்த இந்தக் கூட்டணி
எப்படிப்பட்ட தவறினைச் செய்திருக்கிறது? 232 இடங்களில் ஓரிடத்தில் கூட
வெற்றி பெறாததிலிருந்தே அவர்கள் எடுத்த முடிவு எவ்வளவு பெரிய தவறு என்பது
சொல்லாமலே விளங்கும்!
இடதுசாரிகளின் பரிதாப நிலை!
தமிழ்நாட்டு
சட்டமன்ற வரலாற்றிலேயே கம்யூனிஸ்டுகள் அறவே இல்லாத சட்டமன்றம் என்ற நிலை -
இடது சாரிகளுக்கு மரியாதை சேர்ப்பதாகுமா? இந்த நிலைக்குக் காரணம் இடது
சாரிகள் எடுத்த மிகப்பெரிய தவறான முடிவாகும். (வழக்கம்போல சடங்காச்சாரமாக
கமிட்டிப்போட்டு 10 நாள் விவாதித்து ஆராய்ச்சி செய்து சமாதானம் அடைந்து
விடுவார்கள் - அவ்வளவே!)
தவறான திசையில் இழுத்துச் சென்றவர் வைகோ
இந்த அணியைத் தவறான திசைக்கு அழைத்துச் சென்றவர் ஒருவர் உண்டென்றால், அவர் பரிதாபத்திற்குரிய சகோதரர் வைகோ அவர்கள்தான்!
யார்
மீதோ உள்ள கோபத்திலோ, அவசர ஆத்திரக்கோலத்தை அள்ளித் தெளித்து விட்டார்.
விளைவினையும் அனுபவிக்க அவர் நேர்ந்துவிட்டது. மதிமுகவில் உள்ள
பொறுப்பாளர்களின் கருத்துக்கு விரோதமாக அவர் நடந்து கொண்டது பற்றி
மதிமுகவின் பொறுப்பான இடத்தில் அங்கம் வகித்தவர்கள் கூறியதை சகோதரர்
காலந்தாழ்ந்தாவது எண்ணிப் பார்ப்பாராக! அவர்கள் சொன்னதுதானே
நடந்திருக்கிறது. நாம் அவரது மாநாட்டிலே தெரிவித்ததையும், அப்போதே
அலட்சியப்படுத்தி, ‘பந்தயம் கட்டி கெட்டுப் போக’ முடிவு எடுத்து விட்டாரே -
நாம் என்ன செய்ய! இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னனைப் பற்றி அறியாதவரா வைகோ
அவர்கள்?
தேமுதிகவிலும்
கூட இதேநிலைதான்! கட்சிக்காரர்களின் உணர்வுகளை மதிக்காமல் தவறாக
வழிகாட்டியவர்கள் பின்னால் நடந்து சென்றதால், அவர் தலைமை தாங்கிய அணிக்கு
ஓரிடம்கூட கிடைக்கவில்லை; அவரே டெபாசிட்டை இழக்கும் அளவுக்குப்
பெருந்தோல்வியை சுமக்க நேர்ந்தது. நமது வேதனையும், வருத்தமும் விடுதலைச்
சிறுத்தைகள் பற்றிதான்; கூட்டாட்சிக்கு ஒப்புக் கொள்ளும் கட்சியோடுதான்
கூட்டணி என்று கூறிய எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்கள், அதற்கான
சாத்தியக் கூறு என்ன என்பதை நடைமுறைக் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டாமா?
இந்தக்
கடும் தோல்விக்கு பிறகு கட்சியை நிமிர்த்தி செயல்பட வைப்பது என்ன சாதாரண
காரியமா? ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உரத்த குரல் கொடுத்துப் பாடுபட வேண்டிய
அமைப்பாயிற்றே! பொருளும், உழைப்பும் விழலுக்கு பாய்ச்சிய நீராகலாமா?
எழுச்சித் தமிழர் சகோதரர் திருமாவளவன் நிதானமாகச் சிந்திப்பாராக!
பா.ம.க. பாடம் கற்குமா?
அடுத்த
முதல்அமைச்சர் டாக்டர் அன்புமணி என்ற முழக்கத்தோடு புறப்பட்ட பாட்டாளி
மக்கள் கட்சி, 232 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டும் முடிவு என்ன? முதல்
அமைச்சர் வேட்பாளர் உட்பட 232 இடங்களிலும் படுதோல்விதானே!
ஜாதி
கட்சிகளை ஒருங்கிணைத்து தலித்- தலித் அல்லாதார் என்று ஓர் அணியை உருவாக்க
முயன்றவருக்கு தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் சரியான பாடத்தைக் கற்றுக்
கொடுத்துவிட்டது - பாடம் கற்பார்களா? எங்கே பார்ப்போம்!
இவ்வளவு
கெடுதலிலும் நல்லது ஒன்று நடந்திருக்கிறது. தந்தை பெரியாரையும், திராவிட
இயக்கத்தையும், கொச்சைப்படுத்தி எதிரிகளின் கால்களைத் தேடும் ஒரு கட்சி 232
இடங்களில் போட்டியிட்டு கணக்குத் திறக்கப்பட முடியாமலேயே - அடையாளம்
தெரியாமலேயே புதைக்கப்பட்டுவிட்டது! அத்தனை பேரும் டெபாசிட் இழந்தனர் அதன்
அமைப்பாளர் உட்பட!
பிஜேபி தெரிந்து கொள்ளட்டும் - இது பெரியார் மண்!
கெடுதலிலும்
மற்றொரு நல்ல முடிவு ஒன்று உண்டு. அதுதான்- 163 இடங்களில் போட்டியிட்ட
பிஜேபி மற்ற இடங்களில் அதோடு கூட்டு சேர்ந்த கட்சிகள் கூண்டோடு தமிழ்நாட்டு
மக்களால் விரட்டியடிக்கப்பட்டன. மூன்று இடங்களைத் தவிர மீதி அத்தனை
இடங்களிலும் (மாநிலக் கட்சித் தலைவர் உட்பட) டெபாசிட் காலி அத்தனையும் என்ற
புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளனர். பிரதமர் 2 முறையும், மத்திய
அமைச்சர்களும் படை எடுத்து பிரச்சாரம் செய்தும் ‘பிள்ளை பிழைக்கவில்லையே -
வெறும் எண்ணெய் செலவுதான்!
இது பெரியார் மண்! இங்கு இந்துத்துவா சக்திகளுக்கு இடமில்லை என்பதை மீண்டும் பறையடித்துச் சொல்லிவிட்டது தமிழ்மண்.
மதவாத கட்சி, ஜாதிய வாத கட்சிகளுக்குப் பெரியார் மண் மரண அடி கொடுத்து விட்டது.
மிகப் பெரிய வெற்றியல்ல!
அ.இ.அ.தி.மு.க
வெற்றி பெற்றுள்ளது என்றாலும் கடந்த கால சாதனைகளின் அடிப்படையில் என்று
சொல்லிக் கொள்வதற்குக் குறிப்பிடத்தக்கவை ஏதுமில்லை. பலவகைகளிலும்
ஜனநாயகப்படி நல்லாட்சி தர தவறியிருக்கிறது. இயற்கைப் பேரிடர் ஏற்பட்ட
காலத்தில் கூட உரிய வகையில் அது செயல்படவில்லைதான். காழ்ப்புணர்ச்சியுடன்
முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டவைகளை சிதைக்கும் வேலையில்
ஈடுபட்டதுண்டு.
ஆனாலும்
வெற்றி பெற்றது அதிசயம்தான். மக்கள் நலனுக்கும், மக்களாட்சிக்கும்
விரோதமான ஆட்சியை வீழ்த்தும் நோக்கத்தில் எதிர்கட்சிகள் ஒன்றிணையவில்லை.
வாக்குகள் சிதறியது வாய்ப்பாக அமைந்துவிட்டது. வாக்கு வித்தியாசங்களைக்
கவனித்தால் இந்த உண்மை எளிதில் விளங்கும். திமுக கூட்டணிக்கும் அஇஅதிமுக
கூட்டணிக்குமிடையே உள்ள வாக்கு சதவீத வித்தியாசம் என்பது வெறும் 1.2
சதவீதமே!
அ.இ.அ.தி.மு.கவிற்கு
வாய்ப்பு குறைவு என்று கருத்துக்கணிப்பு வெளிவந்த நிலையில், அந்தத்
தொகுதிகள் மீது தனி கவனம் செலுத்தி, “கவனிக்க வேண்டிய முறையில் கவனித்து”
அதை சரி செய்து விட்டனர் போலும்!
வெற்றி
பெற்றுவிடுவோம் என்ற நிலையில் இருந்தவர்கள் இந்த இடத்தைக் கோட்டை
விட்டுவிட்டார்கள் என்று நினைக்க இடம் உண்டு. பிரச்சார பலமும் போதாது.
இந்த
நாட்டின் ஊடகங்களும் அஇஅதிமுகவின் வெற்றிக்கு முக்கியமான காரணம் என்பதில்
அய்யமில்லை. ஆட்சி தவறு செய்தாலும் அதனைக் கண்டுகொள்ளமாட்டார்கள்! -
இருட்டடிக்கும்போக்கு தாராளமாகவே உண்டு. கட்சி சார்பற்றவை என்று சொல்லிக்
கொள்ளும் சில ஏடுகள் அதிகார பூர்வமற்ற அதிமுகவின் ஏடுகளாகவே நடந்து கொண்டன.
தொலைக்காட்சிகளின் பங்கும் குறைவானதல்ல.
இவற்றோடு அதிகாரபலமும், பணபலமும் சேர்ந்து கொண்டால் என்ன நடக்குமோ அது நடந்திருக்கிறது என்றே கூறவேண்டும்.
திமுகவைப்
பொறுத்தவரை வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை சற்று அதிகமாகப்
போய்விட்டதோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. நம் கையில் இருக்கும்
ஆயுதத்தை எதிரி தீர்மானிக்கிறான் என்ற இடத்தில் திமுக பின்தங்கி விட்டதாகக்
கூட சொல்லலாம்.
மகத்தான சாதனை படைத்து விட்டார் கலைஞர்
93
வயதிலும் கொளுத்தும் வெயிலிலும் தமிழ்நாட்டின் மூத்த தலைவர் மானமிகு
கலைஞர் அவர்கள் ஆற்றிய பணி சாதாரணமானதல்ல. அதே நேரத்தில் அவர் போட்டியிட்ட
அத்தனைத் தேர்தல்களிலும் 13முறை வெற்றி வாகை சூடிய சரித்திரம் வேறு
யாருக்கும் கிடையாது - கிடையவே கிடையாது! இந்த முறைகூட 68 ஆயிரத்திற்கும்
மேல் வாக்கு வித்தியாசத்தோடு வெற்றி பெற்றதும் கலைஞர் அவர்கள் மட்டுமே!
அதேபோல தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் முனைப்பும் உழைப்பும் எதிரிகளையே கூட
கதி கலங்கடித்தது என்பதில் அய்யமில்லை.
இப்பொழுது
ஏற்பட்டுள்ள தோல்வி என்பது பரிதாபத்திற்குரியதல்ல- கம்பீரமான தோல்வி என்றே
சொல்ல வேண்டும். இதுவரை இதுபோன்ற வலிமையான எதிர்க்கட்சியை தமிழ்நாடு
சட்டமன்றம் கண்டதில்லை; திமுக “விஸ்வரூபம்” (பேருரு) எடுத்துள்ளது!
திமுக
- அஇஅதிமுக நேரடிப்போட்டிகளில் திமுக கணிசமாகவே வென்றாலும் திமுக
கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகள் போட்டியிட்ட இடங்களில் அஇஅதிமுக எளிதாகவே
வென்றுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும்.
திமுக கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் தோல்வி
காங்கிரஸ்
41 இடங்களில் போட்டியிட்டு வெறும் 8 இடங்களில் மட்டுமே வெற்றி
பெற்றுள்ளது. சமூகநீதி, மதச்சார்பின்மை என்ற கண்ணோட்டத்தில் இன்றைய கால
கட்டத்தில் அகில இந்திய அளவில் காங்கிரசோடு கூட்டணி என்பது தவிர்க்கப்பட
முடியாததே. ஆனால், அதே நேரத்தில் ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழ்நாட்டு
மக்களுக்கு காங்கிரசின் மீதுள்ள கோபம் இன்னும் தணிந்து விடவில்லை
என்பதையும் அலட்சியப்படுத்திட முடியாது. ஒன்றைப் பெற இன்னொரு விலை என்பது
அரசியலில் தவிர்க்க முடியாததே!
மற்ற தோழமைக் கட்சிகளுக்கும் காட்டிய தாராளம் - தி.மு.க. கூட்டணிக்குப் பயன் தரவில்லை!
234 சட்டமன்ற உறுப்பினர்களுள் பெண்கள் வெறும் 21 என்பது பெருமைக்குரியதல்ல என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
வெற்றி பெருமிதத்தில் உள்ள ஆளுங்கட்சி (அதிமுக) ஒன்றை மறந்துவிடக் கூடாது.
சென்ற முறை பெற்று இருந்த இடங்கள் 148 (160 போட்டியிட்டு) இம்முறை அது குறைந்து 134 இடங்களே!
2014ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. பெற்ற வாக்கு சதவிகிதம் 44. இப்போது அது குறைந்து 41 ஆகி உள்ளது!
எதிர்க்கட்சி தி.மு.க.வோ 23 இடங்களிலிருந்து நான்கு மடங்கு அதிகமாகி 98 பெற்றுள்ளது!.
தலைநகரம் சென்னை தொடங்கி, குமரி வரை (அனைத்து தொகுதிகளிலும்) கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளது - கொங்கு மண்டலம் தவிர!
இந்நிலையில் உண்மையான ஜனநாயக ஆட்சியாக நடத்திடும் பொறுப்பும், கடமையும் அரசுக்கு உண்டு!
தமிழக அரசுக்கு நமது வேண்டுகோள்
அனைத்து
ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை, மதுவிலக்கு, சமூகநீதி, மதச்சார்பின்மை,
மக்கள் நல திட்டங்கள், ஜனநாயக முறையில் சட்டமன்றத்தை நடத்துதல் உள்ளிட்ட
பிரச்சினைகளில் அஇஅதிமுக ஆட்சி சிறந்த முறையில் செயல்பட வேண்டும் என்பதே
நமது வேண்டுகோள்- மீண்டும் வாழ்த்துகள்!
நக்கீரன்,in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக