திங்கள், 16 மே, 2016

தபால் வாக்கு நிலவரத்தால் கலவரமானதா ஆளுங்கட்சி.......இது காவல்துறை கலகம்

தமிழகத்தில், சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், போலீஸ் உயரதிகாரி ஒருவர் போட்ட ஒரு உத்தரவும், அதே உத்தரவை அவரே கேன்சல் செய்ததும் காவல்துறை வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தேர்தல் முடிவுகளை பொறுத்து இது பெரியளவில் எதிரொலிக்கும் என்று போலீஸ் வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பேசப்படுகிறது.
தமிழகக் காவல்துறை அதிகாரிகளில் சிலரை எதிர்க்கட்சியினர் பணியிடம் மாற்றக் கோரி, தேர்தல் ஆணையத்திடம் சமீபத்தில் புகார் அளித்து இருந்தனர். அதில், சென்னையில் முக்கியப் பொறுப்பிலிருந்த ஒருவரும் அடக்கம். இதையடுத்து இடமாற்ற வேலையை தேர்தல் ஆணையம் தொடங்கியது. அதில் அந்த உயரதிகாரி மீது தேர்தல் ஆணையம், நேரடியாக இல்லாமல் மறைமுகமாக நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, தேர்தல் முடியும் வரை, தேர்தல் தொடர்பான புகார்கள், விசாரணைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டம் ஒழுங்கு நிர்வாகம் அனைத்திற்கும் கூடுதல் டி.ஜி.பி.யான மகேந்திரனே பொறுப்பு என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அந்த உயரதிகாரியின் கையிலிருந்த அதிகாரம், மகேந்திரன் வசம் சென்றது. தேர்தல் குறித்த எந்தவொரு நடவடிக்கையையும் மகேந்திரனே மேற்கொள்ள வேண்டும் என்ற நிலை சட்டப்பூர்வமாக தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த உயரதிகாரி, காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு தகவல் அனுப்பினார். அதில், 'காவல் துறையின் முக்கிய துறைகளிலுள்ள பிரதான அதிகாரிகள், யூனிஃபார்முடன் 16.5.16 காலை 6 மணிக்கு தன் அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும்’ என்று இருந்திருக்கிறது. ஆனால், நேற்றிரவு திடீரென அந்த உத்தரவை ’தானே ரத்து செய்கிறேன்’ என்று சொல்லி ரத்து செய்திருக்கிறார். இந்த விவகாரம்தான் தற்போது காவல்துறை வட்டாரத்தில் காட்டுத் தீயாய் பற்றி எரிகிறது.

அந்த உயரதிகாரி, தான் போட்ட உத்தரவை தானே ரத்து செய்தது ஏன்... அதன் பின்னணி என்ன? என்று காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ''காவல்துறையினரின் தபால் ஓட்டுக்கள் ஆளுங்கட்சிக்கு சாதகமில்லாமல் பதிவானதாக ஒரு தகவல். இந்த விபரம் அந்த அதிகாரிக்குத் தெரியவந்தது. அதே நேரம் இந்த விவகாரம் தற்போதைய ஆளுங்கட்சி விசுவாசிகள் சிலருக்கும் எட்ட, அந்த அதிகாரிக்கு சில கெடுபிடி உத்தரவுகள் பறந்திருக்கிறது. இதில் அதிர்ச்சி அடைந்தவர், காவல்துறையினரின் குடும்பங்களாவது தங்கள் வாக்குகளை மாற்றிப் போடுவதற்கு என்ன வழி, மற்றும் வாக்குப்பதிவு அன்று காவல்துறையினர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் ஆலோசிக்கவே அழைத்திருக்கிறார். இது எப்படியோ தி.மு.க. தரப்புக்குச் செல்ல, அவர்கள் தமிழகத் தேர்தல் ஆணையர் முதல் இந்தியத் தேர்தல் ஆணையம் வரை இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றிருக்கின்றனர். அதன்பின் அங்கிருந்து வந்த பிரஷர் காரணமாகவே வேறு வழி இல்லாமல் தான் போட்ட உத்தரவை தானே ரத்து செய்திருக்கிறார்" என்கிறார்கள்.

 - ந.பா.சேதுராமன்   vikatan.com 

கருத்துகள் இல்லை: