ஞாயிறு, 15 மே, 2016

சவுக்கு :பல்முனை போட்டி,.....மே 19ல் தெள்ளத் தெளிவான முடிவு காத்திருக்கிறது.

இன்றோடு பிரச்சாரம் நிறைவடைந்தது.   பெரும் புயலடித்து ஓய்ந்தது போலிருக்கிறது.    இது வரை இருந்த தேர்தல்களை விட இந்தத் தேர்தலில் இரைச்சல் அதிகமாகவே இருந்தது.    வழக்கமான இரு அணிகளுக்கிடையேயான தேர்தலாக அல்லாமல் இம்முறை பல முனை போட்டி இருந்ததே இதற்கு காரணம்.  போதாத குறைக்கு, திசைக்கு ஒரு புறம் இழுத்துச் செல்லும் பல்வேறு கருத்துக் கணிப்புகளும் குழப்பத்தை அதிகரித்துள்ளன.
ஒரு தேர்தலில் மக்களின் முன் உள்ள முக்கிய விஷயம்  இது வரை இருந்த ஆட்சிக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கலாமா என்பதே.    1991 மற்றும் 2001 ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம் இப்போதைய ஆட்சி அளவுக்கு இல்லை  என்றாலும், அப்போதும் மோசமாகத்தான் இருந்தது.   மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கத்தின் பிடியில்தான் ஜெயலலிதா அப்போதும் இருந்தார்.
பெயரளவில் ஜெயலலிதா முதல்வராக இருந்தாலும், அமைச்சர் நியமனம் முதல், அதிகாரிகள் மாற்றம் வரை, கான்ட்ராக்டுகள், திட்டங்கள், என்று அத்தனை விவகாரங்களிலும் மன்னார்குடியின் ஆதிக்கம்தான் ஓங்கி இருந்தது.    ஜெயலலிதாவோ தன் பங்குக்கு எதிர்ப்பவர்களை சிறையில் அடிப்பது, ஆசிட் அடிப்பது என்று ஆணவ ராணியாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்.      ஆனால் அப்போதைய ஆட்சிக்கும், தற்போதைய ஆட்சிக்கும் உள்ள பெரும் வேறுபாடு….  ஊடகங்கள்.   1991 மற்றும் 2001 காலகட்டத்தில், ஊடகங்கள் மிக மிக செழுமையாக செயல்பட்டன.  ஆட்சியில் உள்ள ஊழல்களை அம்பலப்படுத்தவதாகட்டும், அராஜகங்களுக்கு எதிராக எதிர்த்து போராடுவதாகட்டும், ஜெயலலிதாவின் ஆட்சியை பாரபட்சம் பாராமல் விமர்சனம் செய்தன.
ஒவ்வொரு ஊடகமும் போட்டி போட்டுக் கொண்டு, ஜெயலலிதாவின் அராஜகங்களை அம்பலப்படுத்திக் கொண்டிருந்தன.   ஆனால், 2011 ஆட்சிக் காலத்தில் இந்த ஊடகங்கள் ஏறக்குறைய மரணித்துப் போயின என்பதுதான் மிகவும் வேதனையளிக்கும் விஷயம்.
2011 ஜெயலலிதா ஆட்சி எப்படி இருந்தது என்பதை சுருக்கமாக பார்ப்போம்.
பதவியேற்ற முதல் நாளில் இருந்தே தமிழகத்தை அழிவுப் பாதையை நோக்கி அழைத்துச் செல்லும் பணியைத்தான் ஜெயலலிதா செய்தார்.   ஏற்கனவே தமிழகத்தில் இரு முறை கொடுங்கோல் ஆட்சியியை நடத்தியிருந்தாலும், மீண்டும் ஒரு முறை 2011ல் ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் வாக்களித்தனர்.   ஆனால் மக்கள் அளித்த பதவியை, தமிழகத்தை சீரழிக்கவே ஜெயலலிதா பயன்படுத்தினார்.
மதுரவாயல் பறக்கும் சாலை
சென்னை துறைமுகத்துக்கு செல்லும் லாரிகள் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை மட்டுமே நகரத்துக்குள் நுழைய முடியும்.    இதன் காரணமாக சென்னை துறைமுகத்தில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது.    ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் தங்கள் பொருட்களை சென்னை துறைமுகம் மூலமாக பிற இடங்களுக்கு அனுப்புகிறார்கள்.     இந்த நெரிசல் காரணமாக, பல்வேறு தொழில் நிறுவனங்கள், சென்னை துறைமுகத்துக்கு பதிலாக, விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் துறைமுகத்துக்கு இடம் பெயர்ந்து சென்றன.  இதன் காரணமாக, தமிழகத்துக்கு வரவேண்டிய பெரும் வருவாய் ஆந்திராவுக்கு சென்றது.     இந்நிலையை சீர்படுத்துவதற்காக, கலைஞர் பறக்கும் சாலை கட்டப்பட வேண்டும் என்று மத்திய  அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.     பறக்கும் சாலை கட்டப்பட்டால், லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள், சென்னை நகருக்குள் நுழையாமலேயே நேரடியாக துறைமுகம் செல்ல இயலும்.  இரவு நேரம் மட்டுமன்றி பகல் நேரத்திலும் துறைமுகத்துக்கு செல்ல இயலும்.
மத்திய அரசு இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது.   விரைவாக பணிகள் தொடங்கப்பட்டு, தூண்கள் கட்டும் பணி நிறைவடைந்த சமயத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றார் ஜெயலலிதா.    இந்த கட்டுமான நிறுவனத்திடம் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் கட்சி நிதி கேட்டு பேசியதாக தகவல்கள் கூறுகின்றன.      சம்பந்தப்பட்ட நிறுவனம் நிதியளிக்க மறுத்தது.   இதையடுத்து, உடனடியாக பறக்கும் சாலை திட்டத்துக்கு தடை விதித்தார் ஜெயலலிதா.      இந்த தடை உத்தரவு காரணமாக 2012ல் முடிக்கப்பட்டிருக்க வேண்டிய திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவடைந்திருந்தால், தமிழகத்துக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும்.     ஆனால் ஜெயலலிதாவின் பிடிவாதம் காரணமாக இத்திட்டம் முடக்கப்பட்டது.
அண்ணா நூற்றாண்டு நூலகம்
ஆசியாவிலேயே பெரியதும், மிகச் சிறப்பானதுமான ஒரு உலகத்தரம் வாய்ந்த நூலகத்தை உருவாக்க வேண்டும் என்பது கலைஞர் அவர்களின் திட்டம்.    இந்த நூலகத்தை கட்ட, சென்னை கோட்டூர்புரத்தில் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, வெகு நேர்த்தியாக நூலகம் உருவாக்கப்பட்டது.    உலகின் தலைச்சிறந்த நூல்கள் அனைத்தும் வரவழைக்கப்பட்டு, ஒரு அற்புதமான நூலகமாக அது உருவானது.   இப்படிப்பட்ட ஒரு நூலகம் கலைஞரின் கைவண்ணத்தால் உருவாகியிருந்தால்  பொறுப்பாரா ஜெயலலிதா.   உடனடியாக அந்த நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்ற உத்தரவிட்டார்.
திமுக சார்பாகவும், இதர பொதுமக்கள் சார்பாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் நூலகத்தை மாற்றுவதற்கு எதிராக பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.    உயர்நீதிமன்றம் நூலகத்தை மாற்றம் திட்டத்துக்கு உடனடியாக தடை விதித்தது.   அந்த வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி இக்பால், “அந்த அற்புதமான நூலகம் உங்களுக்கு என்ன பாவம் செய்தது ?   ஏன் அதை அழிக்கத் துடிக்கிறீர்கள்” என்று வெளிப்படையாகவே கேள்வி எழுப்பினார்.
நூலகத்தை மருத்துவமனையாக மாற்றும் ஜெயலலிதாவின் எண்ணம் பலிக்காவிட்டாலும் கூட, அந்த நூலகத்தை பராமதிப்பின்றி சீரழிக்கத் தொடங்கியது ஜெயலலிதா அரசு.   நூலகத்தில் திருமணம் நடத்துவதற்காகவெல்லாம் அனுமதி வழங்கப்பட்டது.   நூலகம் சரியாக பராமரிக்க வேண்டும் என்று மீண்டும் உயர்நீதிமன்றம் வழக்கு தொடுக்கப்பட்டது. நூலகம் சரியாக பராமரிக்கப்படுகிறதா இல்லையா என்பதை ஆராய சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வழக்கறிஞர் குழுவை நியமித்தது.   நூலகத்தை சரியாக பராமரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்ட பின்னரும், தற்போது வரை இந்த நூலகம் சரியாக பராமரிக்கப்படாமல்தான் உள்ளது.   கலைஞர் அரசு திறந்த நூலகம் என்ற ஒரே காரணத்துக்காக இன்று வரை இந்த நூலகத்தை சரியாக பராமரிக்காமல் வைத்துள்ளார் ஜெயலலிதா.
சமச்சீர் கல்வி
கல்வியாளர்கள், நிபுணர்கள் என்று பலர் கொண்ட குழுவை அமைத்து, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நீண்ட ஆய்வுக்கு பின்னர் திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது சமச்சீர் கல்வி.
ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல் வேலையாக சமச்சீர் கல்வியை ரத்து செய்தார் ஜெயலலிதா. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.  ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்னதாகவே புதிதாக பாடப்புத்தகங்களை அச்சடிக்க உத்தரவிட்டார் ஜெயலலிதா.
இதன் காரணமாக பள்ளி திறந்தும் இரண்டு மாதத்துக்கு மேல் எந்தப் பாடப்புத்தகங்களை படிப்பது என்று மாணவர்களும் ஆசிரியர்களும் குழப்பத்தில் இருந்தனர்.   புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடுவதில் ஊழல் என்று அப்போதே ஊழல் புகார் கிளம்பியது.    சிங்கிள் கலரில் ஏ4 அளவில் அச்சடிக்க அரசு வழங்கி வந்தது ரூபாய் 34.  ஜெயலிதா அரசு பொறுப்பேற்றதும், இந்தத் தொகை ரூபாய் 70ஆக உயர்த்தப்பட்டது.     பைண்டிங் செய்ய வழங்கப்பட்டு வந்த ரூபாய் 24 உயர்த்தப்பட்டு 40 ஆகியது.      இப்படி புதிய புத்தகங்கள் அச்சடிப்பதால் அரசுக்கு ஏற்படும் தேவையற்ற பண விரயத்தைப் பற்றி ஜெயலலிதா துளியும் கவலைப்படவில்லை.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து ஆராய்ந்து ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.    அந்தக் குழு அம்மாவின் மனம் கோணாமல் நடந்து கொள்ளும் சொம்பு ஐஏஎஸ் அதிகாரிகளால் நிரப்பப்பட்டு, சமச்சீர் கல்வித் திட்டம் முழுக்க முழுக்க குறைபாடுகள் நிரம்பியது என்று பரிந்துரை செய்தது.  ஆனால் சென்னை உயர்நீதிமன்றம், இந்தப் பரிந்துரையை ஏற்காமல், சமச்சீர் கல்வியை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.   இதையும் ஏற்றுக் கொள்ளாமல், உச்சநீதிமன்றம் சென்றார் ஜெயலலிதா.
உச்சநீதிமன்றமும், ஜெயலலிதா அரசின் மேல் முறையிட்டு மனுவை நிராகரித்தது.  “புதிதாக ஒரு அரசு பொறுப்பேற்றுள்ளது என்ற ஒரே காரணத்துக்காக முந்தைய அரசின் திட்டங்களை அப்படியே நிராகரிக்க முடியாது.    முந்தைய அரசு ஒரு அரசியல் தலைவர் எழுதிய பாடலை பாடத்திட்டத்தில் வைத்திருப்பது ஆட்சேபகரமானது என்றால், அந்தப் பாடலை நீக்கியிருக்கலாம்.  அதற்கு பதிலாக, சட்டத் திருத்தம் கொண்டு வந்து, பாடத்திட்டத்தையே நீக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்புக்கு பிறகு மேல்முறையீடு செய்ய வேறு வழியில்லை என்ற காரணத்தால், அமைதியானார் ஜெயலலிதா.      ஜெயலலிதாவின் இந்த அரசியல் விளையாட்டு, லட்சக்கணக்கான மாணவர்களை பாதிக்கிறது என்ற எண்ணத்தை விட, திமுகவின் திட்டங்களை நீக்க வேண்டும் என்ற பழிவாங்கும் உணர்ச்சியே ஜெயலலிதாவிடம் மேலோங்கி காணப்பட்டது.
தொழில் துறை
தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக ஆக்குவேன் என்ற வாக்குறுதியோடு ஆட்சிப் பொறுப்பேற்றார் ஜெயலலிதா.  ஆனால் 2011 முதல் இன்று வரை, ஒரே ஒரு புதிய தொழிற்சாலை கூட தமிழகத்தில் தொடங்கப்படவில்லை.   தென்னிந்தியாவில் உள்ள இதர மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் தொழில் தொடங்க பல்வேறு தொழிலதிபர்கள் முன்வந்த நிலை அடியோடு மாறி, தமிழகத்தில் இருந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டு, அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என்று இடம் பெயர்தலுக்கே ஜெயலலிதாவின் அரசு வழி வகுத்தது.
கர்நாடக முதல்வர் சித்தாராமையா, தமிழகம் வந்து, இங்குள்ள தொழிலதிபர்களை அவர் மாநிலத்துக்கு அழைக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது.    ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிக் கொண்டிருந்த நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டது.   பல்வேறு தொழில் நிறுவனங்கள், தங்களின் விரிவாக்கத் திட்டத்தை, குஜராத், ஆந்திரா என்று வேறு மாநிலங்களுக்கு மாற்றினர்.
அண்டை மாநிலங்களின் முதல்வர்கள் முதலீடு செய்யும் தொழிலதிபர்களை எந்த நேரத்திலும் வரவேற்க தயாராக இருந்தனர்.  அவர்களை எளிதில் அணுக முடிந்தது.  ஆனால் தமிழகத்தில் முதல்வரை அணுக முடியாத சூழல் இன்று வரை நிலவி வருகிறது.  தமிழகம் தொடர்ந்து தொழில்துறையில் பின் தங்கி இருக்கிறது என்று எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து ஆட்சியின் இறுதிக் காலத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றை நடத்தினார் ஜெயலலிதா.    அந்த மாநாட்டில் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடு வந்துள்ளது என்று அதிமுக அரசால் தம்பட்டம் அடிக்கப்பட்டது.   அந்த 2 லட்சத்து 42 ஆயிரம் என்ற எண், ஜெயலலிதாவின் பிறந்த நாளான 24 பிப்ரவரியை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட எண் என்பது ஒரு சில நாட்களிலேயே ஊடகங்களில் அம்பலமானது.
திமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டன.  மகிந்திரா, பிஎம்டபிள்யு, உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்கள் விரிவாக்கத் திட்டங்களை பிற மாநிலங்களுக்கு எடுத்துச் சென்றன. 2011ம் ஆண்டில் தமிழகத்தில் 73,348 கோடியாக இருந்த முதலீடு, 2015ம் ஆண்டின் இறுதியில், 14,349 கோடியாக அதள பாதாளத்துக்கு வீழ்ந்ததுதான் ஜெயலலிதாவின் சாதனை.
தமிழக நிதி நிலை
2011ல் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, ஜெயலலிதா, தமிழகத்தை மீளாத கடன் சுமையில் திமுக ஆட்சி விட்டுச் சென்றிருப்பதாக பறை சாற்றினார்.    ஆனால் 2011ல் ஒரு லட்சம் கோடியாக இருந்த தமிழக கடன் மார்ச் 2016 உள்ளபடி 2 லட்சத்து 20 ஆயிரம் கோடியாக உயர்ந்ததுதான் ஜெயலலிதாவின் சாதனை.
டாஸ்மாக்
மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் குரல் எழுப்பியபோது, தமிழக கலால் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தமிழகத்தில் மதுவிலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.   மதுவால் தமிழகமே சீரழிகிறது என்று போராட்டங்கள் வலுத்த நிலையிலும் கூட, மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு மறுத்தது.
இதன் முக்கியமான பின்னணி, ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள் நடத்தும் மிடாஸ் மதுபான ஆலைதான்.   மது விற்பனையை தமிழக அரசு கையகப்படுத்திய 2002ம் ஆண்டில்தான் மிடாஸ் மதுபான ஆலையும் தொடங்கப்பட்டது.  ஜெயலலிதா ஆட்சியில் இருந்த சமயத்தில் எல்லாம் மிடாஸில் இருந்து அரசு கொள்முதல் செய்யும் அளவு அதிகரித்தது.  மிடாஸ் ஆலையில், ஹாட் வீல்ஸ் என்ற நிறுவனம் 48 சதவிகித பங்குகளை வைத்துள்ளது.  இந்த ஹாட் வீல்ஸ் நிறுவனத்தில் 10 சதவிகித பங்குகளை சசிகலாவும், 49 சதவிகித பங்குகளை ஜெயா பைனான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனமும் வைத்துள்ளது.
டிசம்பர் 2011ல் சசிகலா உள்ளிட்ட மன்னார்குடி வகையறாக்கள் கார்டனை விட்டு வெளியேற்றப்பட்ட போது, மிடாஸ் நிறுவனத்தில் இருந்தும் வெளியேற்றப்பட்டார்கள்.  அப்போது மிடாஸ் நிறுவனத்தில் இயக்குநராக பொறுப்பேற்றவர் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி.   சசிகலா மீண்டும் தோட்டத்தில் இணைந்தபின், மீண்டும் சசிகலாவின் உறவினர்கள் மிடாஸ் நிறுவனத்தின் பொறுப்பேற்றனர்.   2011-12ல் மிடாஸில் தமிழக அரசு செய்த கொள்முதல் அளவு 1404 கோடி.   2012-13ல் 1729 கோடி.  2013-14ல் 2280 கோடி.  2014-15ல் 2736 கோடி.  2015-16ல் மிடாஸில் தமிழக அரசு வாங்கிய மதுவின் மதிப்பு 3283 கோடி.   இப்பாது ஏன் மதுவிலக்கை ஜெயலலிதா அமல்படுத்த மறுக்கிறார் என்பது புரிகிறதா ?
இந்த காரணத்துக்காகத்தான், மதுவிலக்கை எதிர்த்து பாடல் இயற்றிய கோவன் என்ற பாடகரை, தேச விரோத வழக்கில் ஜெயலலிதா கைது செய்தார்.
மின் வெட்டு
ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக ஆக்குவேன் என்று சூளுரைத்தார் ஜெயலலிதா. ஆனால் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் தமிழகத்தில் ஒரே ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் புதிய திட்டம் கூட உருவாக்கப்பட வில்லை என்பதே யதார்த்தம்.   புதிய திட்டங்கள் உருவாக்கப்படாதது ஒரு புறம் இருக்க, திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட பல்வேறு திட்டங்களும் பல்வேறு குளறுபடிகளுக்கு ஆளாகி நிறுத்தப்பட்டன.  வடசென்னை, உடன்குடி போன்ற திமுக காலத்தில் உருவாக்கப்பட்ட திட்டங்கள், தவறான டெண்டர்கள் மற்றும் ஊழல் காரணமாக நீதிமன்ற வழக்குகளில்  சிக்கியுள்ளன.    மின்வெட்டை சரி செய்வதற்காக, தனியார் மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு யூனிட் ரூபாய் 9 முதல் 13 வரை கூடுதல் விலை கொடுத்து வாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.     இந்த தனியார் மின் கொள்முதலில் மின் துறை அமைச்சருக்கும் ஆளுங்கட்சிக்கும் பெருமளவில் கமிஷன் செல்வதாக தகவல்கள் கூறுகின்றன. ஜெயலலிதா பொறுப்பேற்றபின், தமிழகத்தில் மின் கட்டணம் 37 சதவிகிதம் உயர்த்தப்பட்டது.  இத்தகைய கடுமையான கட்டண உயர்வுக்குப் பின்னரும், தமிழக மின் வாரியத்தின் கடன் 1 லட்சத்து 20 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. அதிமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டுக்கு தமிழக மின்வாரியம் ஒரு சிறந்த உதாரணம்.
மின் வாரியத்தின் மின் நிலையங்கள் ஒரு யூனிட் 3 ரூபாய்க்கு மின்சாரம் உற்பத்தி செய்கின்றன.   அப்படி செய்யும் நிலையங்களை முடக்கி விட்டு, ஒரு யூனிட் 13 ரூபாய்க்கு தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கும் அரசை எங்காவது பார்த்திருக்கிறீர்களா ?   இதே போலத்தான் அடானியோடு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட சூரிய ஒளி மின்சாரமும்.  மத்தியப் பிரதேசம் ஒரு யூனிட் 5 ரூபாய்க்கு வாங்குகையில், ஒரு யூனிட் 7 ரூபாய்க்கு 25 ஆண்டுகளுக்கு அடானியிடமிருந்து 948 மெகா வாட் மின்சாரம் வாங்கும் ஒரு அடாவடி அரசு எப்படிப்பட்ட அரசு ?
ஊழல்
அதிமுக ஆட்சியில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பது அன்றாட வாடிக்கையாகி விட்டது.  அனைத்து காண்ட்ராக்ட்களிலும் 40 சதவிகித கமிஷன் என்பது எழுதப்படாத விதியாகி விட்டது.   இந்த 40 சதவிகித கமிஷன் காரணமாகவே, தமிழகத்தில் தொழில் தொடங்க எந்தத் தொழிலதிபரும் முன்வராமல் இருக்கின்றனர்.
ஆளுங்கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய பழ.கருப்பையா, ஐஏஎஸ் அதிகாரிகளும், அமைச்சர்களும் போட்டி போட்டுக் கொண்டு ஊழல் புரிகிறார்கள் என்று கூறியுள்ளது இதற்கு முக்கியமான சான்று.
வெளிச் சந்தையில் முட்டையின் விலை 3.70 முதல் 3.90 ஆக இருக்கையில், சத்துணவுக்கான முட்டைகளை ரூபாய் 4.51 கொடுத்து அதிமுக அரசு வாங்கி வருகிறது.   இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டன.  அனைத்து அரசியல் கட்சிகளும் முட்டை ஊழல் குறித்து வெளிப்படையாக குற்றம் சாட்டிய பிறகும் கூட, அதிமுக அரசு தொடர்ந்து கூடுதல் விலைக்கே முட்டைகளை வாங்கி வருகிறது.  இதே போல பருப்பு கொள்முதலிலும் பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த இரு ஆட்சிக் காலத்திலும் இதே அளவு ஊழல் இருந்தாலும் கூட, அனுபவின்மை காரணமாக வெளிப்படையாக பல்வேறு தவறுகளை செய்து அம்பலப்பட்டனர்.  ஆனால் பல்வேறு வழக்குகள் கொடுத்த அனுபவத்தின் காரணமாக, மிக மிக நூதனமாக ஊழலில் ஈடுபட்டுள்ளார் ஜெயலலிதா.   ஜெயலலிதாவின் அமைச்சர்களான நத்தம் விஸ்வநாதன் போன்வர்களே ஊழல் பணத்தை வெளிநாடுகளில் பதுக்குகையில் ஜெயலலிதா போன்றவர்களுக்கு சொல்லித் தர வேண்டியதில்லை.
ஜாஸ் சினிமாஸ்
2014ம் ஆண்டு பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளிவர ஒரு சில வாரங்கள் இருந்த நிலையில், சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் இருக்கும் 11 தியேட்டர்களை விலைக்கு வாங்கும் ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தின் கூட்டத்தில் சசிகலா பங்கேற்றார்.    விலைக்கு வாங்கப்பட்ட பின்னர் தியேட்டரின் பெயர் ஜாஸ் சினிமாஸ் என்று மாற்றம் செய்யப்பட்டது. இந்த விபரம் முதன் முதலாக சவுக்கு தளத்தால் அம்பலப்படுத்தப்பட்டது.   ஏற்கனவே சொத்துக் குவிப்பு வழக்குக்காக நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருந்தாலும், ஜெயலலிதா மற்றும் மன்னார்குடி மாபியாவின் சொத்து வெறி அடங்கவில்லை என்பதையே ஜாஸ் சினிமாஸ் பரிமாற்றம் உணர்த்துகிறது.
ஜாஸ் சினிமாஸ் என்பது ஒரு சிறு துளி மட்டுமே.   மன்னார்குடி மாபியாவின் பெயரில் உருவாக்கப்பட்ட பல நிறுவனங்களின் பெயர்களில் தமிழகம் முழுக்க சொத்துக்கள் குவிக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை.
சட்டப்பேரவை
விவாதங்களுக்கான சட்டப்பேரவையை வெறும் அறிக்கை படிக்கும் மன்றமாக மாற்றிய பெருமை ஜெயலலிதாவையே சாரும்.     சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை வாழ்த்துப் பாடும் துதிகளுக்கு மட்டுமே இடம் என்பது எழுதப்படாத விதியாக மாறிப் போனது.     ஜெலலிதாவை வாழ்த்திப் பேசும் எம்எல்ஏக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.    அனைத்து அறிவிப்புகளும் எவ்விதமான விவாதமும் இன்றி விதி 110ன் கீழ் படிக்கப்பட்டன.  விவாதம் கோரி குரல் எழுப்பும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தயவு தாட்சண்யமில்லாமல் வெளியேற்றப்பட்டனர்.   சட்டப்பேரவை நடவடிக்கைகள் என்பது, அதிமுகவினரின் அவைக் கூட்டம் போலவே நடைபெற்றது.
அமைச்சரவை மாற்றம்
அமைச்சரவையை மாற்றியமைப்பது எந்த ஒரு முதலமைச்சருக்கும் உண்டான பிரத்யேகமான உரிமைதான் என்றாலும், ஜெயலலிதா இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இசை நாற்காலிப் போட்டி நடத்துவது போல அமைச்சரவையை மாற்றியமைத்துக் கொண்டிருந்தார்.    அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, தங்கள் பணிகளை தொடங்குவதற்கு முன்னதாகவே மாற்றப்பட்ட வரலாறு தமிழகத்தில் உண்டு.   அமைச்சர்கள் எதற்காக நியமிக்கப்படுகிறார்கள், எதற்காக மாற்றப்படுகிறார்கள் என்று எவ்விதமான விபரங்களும் மக்களுக்கு தெரியப்படுத்தப்படுவதில்லை.  ஆனால் இரு மாதங்களுக்கு ஒரு முறை அமைச்சரவை மாற்றத்தை மட்டும் தவறாமல் செய்து வந்தார் ஜெயலலிதா.
மழை வெள்ளம்
சென்னை நகரை வரலாறு காணாத வெள்ளம் தாக்கியபோது, செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்து விடலாமா வேண்டாமா என்று முதல்வரின் உத்தரவுக்காக காத்திருந்தார் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன்.    இறுதி நேரம் வரை உத்தரவு வராத காரணத்தால், ஏரி உடையும் சூழலில் மொத்த தண்ணீரும் திறந்து விடப்பட்டு, சென்னை நகர் முழுக்க வெள்ளத்தில் மூழ்கியது.  தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு, சென்னை நகர மக்கள் தத்தளித்தபோது கூட போயஸ் தோட்டத்தை விட்டு வெளியே வர ஜெயலலிதா மறுத்தார்.  மூன்று நாட்கள் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து, உணவின்றி, உடையின்றி மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.   90 வயதில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் இதர கட்சித் தலைவர்கள் நேரடியாக வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்த பின்னரே வேறு வழியின்றி, மக்களை சந்தித்தார் ஜெயலலிதா.  அதுவும் அவரது தொகுதியான ஆர்.கே நகருக்கு சென்று, வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த மக்களை “வாக்காள பெருமக்களே” என்று அழைத்து தன் சுயநலத்தை வெளிப்படுத்தினார்.
கொடநாடு
முதல்வர் பதவியில் இருப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான பணிகள் இருக்கும்.   ஆனால் எந்தப் பணிகளையும் பற்றி கவலைப்படாமல் ஒரு நாளைக்கு தலைமைச் செயலகத்தில் அரை மணி நேரம் மட்டுமே செலவழித்தார் ஜெயலலிதா.   சென்னையில் இருக்கையில்தான் தலைமைச் செயலகம் செல்வதில்லை என்றால், வருடத்தில் இருமுறை அரசு செலவில் கொடநாட்டில் சென்று ஓய்வெடுத்தார்.   அவர் ஓய்வெடுக்கையில், தினந்தோறும் விமானத்தில் அதிகாரிகள் சென்று அவரை சந்தித்தனர்.       இப்படி கொடநாட்டுக்கு ஜெயலலிதா மற்றும் அதிகாரிகள் செல்வதால் மட்டும் கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணம் வீணானது.     இப்படி அரசு செலவில் அதிகாரிகளும் முதல்வரும் கொடநாட்டுக்கு உல்லாச பயணம் செல்வதற்கா ஜெயலலிதாவை தேர்ந்தெடுத்தார்கள் ?
பத்திரிக்கை சுதந்திரம்
தன்னை எதிர்த்து ஒரே ஒரு வரி எழுதினால் கூட அந்த பத்திரிக்கையின் மீது அவதூறு வழக்கு தொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் ஜெயலலிதா.    ஒவ்வொரு ஆட்சியிலும், ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் இந்த அவதூறு வழக்குகள் வாபஸ் வாங்கப்படும்.  ஆனால் இந்த முறை போடப்பட்ட 130க்கும் அதிகமான வழக்குகள் இது வரை வாபஸ் வாங்கப்படவில்லை.    இந்த ஊடகங்கள் நம்மை எதிர்க்காது என்பதை உறுதியாக தெரிந்த காரணத்தினால்தான் ஜெயலலிதா வழக்குகளை வாபஸ் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சியில் நகைச்சுவையாக வரும் சைரஸ் ப்ரோச்சாவின் நிகழ்ச்சியில் ஜெயலலிதாவை கிண்டல் செய்துவிட்டார்கள் என்பதற்காகக் கூட ஒரு அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது.
ஜனநாயகத்தின் முக்கியத் தூணான ஊடகங்களை இப்படி முடக்கும் ஆட்சி, ஜனநாயகத்தின் அடிப்படையே கேள்விக்குள்ளாக்கும் மிக மிக ஆபத்தான ஆட்சி.    வலிமையான ஊடகங்களே ஜனநாயகத்தின் அடிப்படை.   அந்த அடிப்படையை ஆபத்துக்குள்ளாக்கும் ஆட்சி ஜனநாயக விரோத ஆட்சி.
இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியுமா என்ன ?.    அது நடக்குமா நடக்காதா என்பதற்கான விடையைத்தான் மக்கள் மே 19ல் அளிக்க காத்திருக்கிறார்கள்.
வழக்கமாக இரு அணித் தேர்தலாக இருக்கும் தமிழகத்தில் இம்முறை தேமுதிக, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டணி போட்டியிடுகிறது.    பாட்டாளி மக்கள் கட்சி தனியாக முதல்வர் வேட்பாளரை அறிவித்துப் போட்டியிடுகிறது.   நாம் தமிழர் கட்சி தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
இந்த மூன்று அணிகளில் எந்த அணியால் ஜெயலலிதா ஆட்சியை அகற்ற முடியும் என்ற கேள்விக்கு உறுதியான பதில் இல்லை.  இடதுசாரிகள் உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணி இரு திராவிடக் கட்சிகளுக்கு சரியான மாற்று அணிதான் என்றாலும், இந்த இரு கட்சிகளை எதிர்த்துப் போராடக் கூடிய வலு இவர்களிடத்தில் இல்லை என்பதே உண்மை.    ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் மாற்று விஜயகாந்த் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.   அவர் சிறந்த பேச்சாளராக இல்லாதது கூட குறையில்லை.    ஆனால் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பேன், டோல் வரியை ரத்து செய்வேன் என்று நகைக்கக் கூடிய வாக்குறுதிகளை அளிக்கும் ஒரு தலைவரை கோமாளி என்று சொல்லாமல் எப்படிச் சொல்வது ?    திமுக, பிஜேபி எந்த அணியோடும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று மனைவி பிரேமலதா கூறி வந்தார்.  ஆனால் நேற்று பேட்டியளித்த விஜயகாந்த், கூட்டணியில் சேர்வதற்கு, திமுக பிஜேபி இரு அணிகளும் பணம் தர முன் வந்தன என்று கூறுகிறார்.
இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் தவிர்த்து மக்கள் நலக்கூட்டணியில் உள்ள எந்தக் கட்சிக்கும் திமுக அதிமுகவுக்கு மாற்று அணியாக உருவாக வேண்டும் என்ற எண்ணமே இல்லை என்பதே உண்மை.    அதிமுக தோற்க வேண்டும் என்பதை விட, திமுக ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதே வைகோவின் பிரதான நோக்கமாக இருக்கிறது.    தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஜோயல் உள்ளிட்ட தன்னுடைய கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு சென்றபோதெல்லாம் அமைதியாக இருந்த வைகோ, தேமுதிகவிலிருந்து சந்திரக்குமாரும் பார்த்திபனும் விலகியதைக் கண்டு கொதிக்கிறார், கொந்தளிக்கிறார், துடிக்கிறார்.   சொல்லக் கூடாத அவதூறான வார்த்தைகளை அள்ளி வீசுகிறார்.     இந்த கோபமும் கொதிப்பும் அவரது அதிமுக விசுவாசத்தின் காரணமாகத்தானே தவிரே வேறு அல்ல.  இதே போல முதலில் தந்தி டிவி அதிமுக வெல்லப் போகிறது என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டபோது கருத்து தெரிவிக்காத வைகோ, நியூஸ்7 திமுக வெற்றி என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டதும் கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.   திமுக வின் குடும்ப அரசியல் குறித்து விமர்சனம் செய்யும் வைகோ, தேமுதிக கட்சி தொடங்கியதிலிருந்தே குடும்ப கட்சியாகத்தான் இருந்து வருகிறது என்பதை வசதியாக மறந்து விட்டு, விஜயகாந்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார். ஏறக்குறைய இந்தத் தேர்தலின் நம்பர் 1 கோமாளியாக வைகோ மாறி விட்டார் என்றால் அது மிகையாகாது.   கடந்த தேர்தலில் வடிவேலு பேசியதை எப்படி மக்கள் ரசித்தார்களோ அப்படித்தான் வைகோவின் நகைச்சுவையையும் ரசிக்கிறார்கள்.
கடைசியாக அவர் தேர்தலில் போட்டியிட மறுத்து கூறிய காரணம் மக்கள் நலக் கூட்டணியின் மீது மக்கள் வைத்திருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் சிதைத்தது.
இரு திராவிடக் கட்சிகளுக்குமான ஒரு வலுவான மாற்று அவசியம் என்பது உண்மையே.    ஆனால், முரண்பட்ட கொள்கைகளுடன் கூடிய, இரு திராவிடக் கட்சிகளோடும் பல முறை கூட்டணி வைத்த, கூட்டணி வைக்க வாய்ப்பு கேட்டு கெஞ்சி முடியாமல் போன கட்சிகளை இணைத்து, தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் அணியாக அமைத்து, நாங்கள்தான் இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்று என்று கூறுவதை மக்கள் ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை.
பல்முனை போட்டி, வெற்றி யாருக்கு என்பதை கணிக்க முடியவில்லை என்பது போல பல்வேறு விவகாரங்கள் கூறப்பட்டாலும், மக்கள் தெளிவாகவே வாக்களிக்கக் காத்திருக்கிறார்கள். மே 19ல் தெள்ளத் தெளிவான முடிவு காத்திருக்கிறது. savukkuonline.com






கருத்துகள் இல்லை: