வினவு.com
முருகப்பா குழுமத்தை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
இருபத்து எட்டு துறைகளில் இந்தியாவின் பதிமூன்று மாநிலங்களில் இந்நிறுவனம்
தனது தொழிற்சாலைகளையும் அலுவலகங்களையும் நிறுவியுள்ள ஒரு ’தமிழ் முதலாளி’
கம்பெனி.
24-ம் தேதி இரவு ஏழு மணி. ஆவடியிலுள்ள டி.ஐ
மெட்டல் ஃபார்ம்மிங் (காருக்கு கதவுகள் தயாரிக்கும் தொழிற்சாலை) ஆலையின்
வாசலை கடந்து சர் சர் என்று பாய்ந்து கொண்டு வந்த ஆறு ஏழு உயர்ரக கார்கள்
சடன் பிரேக் அடித்து நின்றன. கார்களிலிருந்து ஆலையின் மேலாளர்கள், உயர்
அதிகாரிகள், மொத்த முருகப்பா குழுமத்தின் மிக உயர்மட்டத்திலுள்ள மூன்றாம்
கட்ட, நான்காம் கட்ட அதிகாரிகள் என்று இருபதுக்கும் மேற்பட்டவர்கள்
பதட்டத்துடன் இறங்கி ஆலைக்குள் ஓடினர்.மாலை நாலரை மணிக்கு ஷிப்ட் முடியும் தருவாயில் அடுத்த ஷிப்ட்டுக்காக வந்த தொழிலாளர்களும் ஷிப்டில் இருந்தவர்களும் இணைந்து ஆலையின் உற்பத்தியை திடீரென்று நிறுத்தினர். கேந்திரமான உற்பத்தி பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்டவை அனைத்தும் ஆலையிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில் திங்கட்கிழமை சப்ளைக்காக உடனடியாக உற்பத்தியை துவங்க வேண்டிய நெருக்கடி நிலையில் தான் தொழிலாளர்கள் உற்பத்தியை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து ஆலைக்குள் உள்ளிருப்பு போராட்டத்தை அறிவித்தனர்.
முருகப்பா குழுமத்தை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இக்குழுமத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. பாரிஸ், ஈ.ஐ.டி பாரி, பாரி அக்ரோ, டி.ஐ சைக்கிள்ஸ், டி.ஐ.டி.சி , டி.ஐ மெட்டல் பார்ம்மிங், பி.எஸ்.ஏ மோட்டார்ஸ், கோரமண்டல் இண்டர்நேஷ்னல், சோழமண்டலம் பைனான்ஸ் என்று இருபத்து எட்டு துறைகளில் இந்தியாவின் பதிமூன்று மாநிலங்களில் இந்நிறுவனம் தனது தொழிற்சாலைகளையும் அலுவலகங்களையும் நிறுவியுள்ளது.
இவ்வாறு நாடு முழுவதும் கிளை பரப்பியுள்ள இந்நிறுவனம் ஒரு ’தமிழ் முதலாளி’ கம்பெனி. அதாவது செட்டியார் குடும்பத்தைச் சேர்ந்த தரகு முதலாளித்துவ கம்பெனி.
இக்குழுமத்திலுள்ள டி.ஐ மெட்டல் ஃபார்ம்மிங் நிறுவனம் ஜி.எம், மாருதி சுசுகி, ஹூண்டாய், ரெனால்ட் நிசான், டொயோட்டா போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கும் டாடா, மகேந்திரா போன்ற சில தரகு முதலாளித்துவ கார் தொழிற்சாலைகளுக்கும் இந்திய ரயில்வேவுக்கும் கதவுகளை தயாரித்து கொடுக்கிறது. சென்னையில் இரண்டு ஆலைகளும் குஜராத், அரியானா, மகாராஷ்ட்ராவில் ஒரு ஆலையும் இயங்கி வருகிறது. உத்திரகாண்ட்டில் ஒரு புதிய ஆலை கட்டப்பட்டு வருகிறது.
முருகப்பா ‘முறுக்கு’ கம்பெனி!
தற்போது ஆவடிக்கு அருகிலுள்ள நெமிலிச்சேரியிலுள்ள ஆலையில் தான் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளிருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை கடந்த பதினைந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு பிரதானமாக ஹூண்டாய் மற்றும் ரெணால்ட் நிசான் கார்களுக்கான கதவுகள் தயாரிக்கப்படுகின்றன.மொத்தம் தொள்ளாயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் வெறும் அறுபத்து எட்டு பேர் மட்டுமே நிரந்தரத் தொழிலாளிகள். இந்திய தன்மைக்கேற்ப பண்ணையார் பானியில் கம்பெனி நடத்தும் இக்குழுமம். தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கும் முறையே வித்தியாசமானது. தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களுக்கும், நெல்லை, கன்னியாகுமரி போன்ற எல்லையோர மாவட்டங்களுக்கும் சென்று வேன்களில் முருகப்பா குரூப் என்கிற பதாகையை மாட்டிக்கொண்டு ஆள் எடுப்பு முகாம் என்று பிரச்சாரம் செய்கின்றனர்.
முருகப்பா குரூப் மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனி, இந்நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. இந்த வேலை உங்களுடைய எதிர்காலத்தை மாற்றும் என்று முறுக்கு கம்பெனிக்கு ஆள் எடுப்பதை போல தனக்கு தேவையானவர்களை பொறுக்கி எடுத்துக்கொண்டு வருகிறது. தற்போது அதிகமான அளவில் வடமாநிலங்களிருந்து சட்டவிரோதமான முறையில் ஒப்பந்ததாரார்கள் மூலம் தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்படுகிறார்கள். தொழிலாளர்களில் பெரும்பான்மையினரான வடமாநில ஒப்பந்தத் தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனினும் ஆதரிக்கின்றனர்.
பு.ஜ.தொ.மு உதயம்!
இங்கு பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்கள் அனைவரும் ‘புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி’ யில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இணைந்துள்ளனர்.முருகப்பா குழுமத்தின் ஒட்டுமொத்த மனிதவள மேம்பாட்டு அதிகாரிகளுக்கெல்லாம் தலைமை அதிகாரியாக இருப்பவர் திருவாளர் பிரசாத். உங்களுக்கு நினைவிருக்கலாம், சில மாதங்களுக்கு முன்பு பு.ஜ.தொ.மு வை தடை செய்ய வேண்டும் என்று முதலாளிகள் மீது கருணை மழை பொழியும் அம்மாவுக்கு கோரிக்கை வைத்தார்களே முதலாளிகள், அந்த முதலாளிகள் சங்கத்தின் துணைச் செயலாளர் இந்த பிரசாத் தான்.
எனவே பு.ஜ.தொ.மு வின் கீழ் தொழிலாளர்கள் சங்கமாக இணைந்ததை நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்படியாவது சங்கத்தை உடைக்க வேண்டும் என்று முயற்சித்தனர். யாரும் சோரம் போகும் நிலையில் இல்லாததால் தொழிலாளர்கள் மத்தியில் பல்வேறு அவதூறுகளை கிளப்பிவிட்டனர்.
இவர்கள் நக்சலைட் தீவிரவாதிகள், ஏற்கெனவே பல இடங்களில் நிர்வாகத்திடம் காசு வாங்கிக் கொண்டு ஓடிப் போனவர்கள் என்றும் இன்னும் பலவாறாகவும் பிரச்சாரம் செய்தனர். ஆனால் தொழிலாளர்கள் நிர்வாகம் எதை செய்யக்கூடாது என்று சொல்கிறதோ அதை தான் இன்னும் தீவிரமாக செய்தனர். முன்பு நிர்வாகத்திலுள்ள கீழ்மட்ட அதிகாரிகளை பார்த்தால் கூட பணிந்து போகும் தொழிலாளிகள் இப்போதெல்லாம் உயர்மட்ட அதிகாரிகளின் அடாவடிகளுக்கு கட்டுப்படுவதில்லை. எனவே நிர்வாகத்தின் விருப்பத்திற்கு மாறாக பு.ஜ.தொ.மு வில் தான் இணைவோம் என்று இணைந்தனர்.
தொழிலாளர்களை கங்காணிகளாக்கிய முருகப்பா!
தொழிலாளர்கள் சங்கத்தில் உறுதியடைய துவங்கியதும் நிர்வாகம் தனது வேலைகளை காட்டத் துவங்கியது. தொழிலாளர்களை தொழிலாளர்களாகவே வைத்திருந்தால் சட்டப்படி பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டியிருக்கும் என்பதால் தொழிலாளர்களின் தகுதிகளை சூப்பர்வைசர்கள் என்று தந்திரமாக உயர்த்தியது.தொழிலாளர்கள் பு.ஜ.தொ.மு மூலம் இதை எதிர்த்து வழக்கு தொடுத்தனர். பிரச்சினை தொழிலாளர் உதவி ஆணையரிடம் சென்றது. இவர்கள் நிர்வாக ஊழியர்கள் அல்ல உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்கள் தான் என்பதை பு.ஜ.தொ.மு ஆதாரங்களுடன் நிரூபித்தது நிர்வாகத்திற்கு விழுந்த முதல் அடி!
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை!
நிறுவனத்தின் லாபம் மற்றும் வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடும் போது நிர்வாகம் தொழிலாளிகளுக்கு வழங்கும் கூலி என்பது லட்சத்தில் ஒரு பங்கு கூட இல்லை.முருகப்பா கும்பலை பொருத்தவரை ஒவ்வொரு ஆலைக்கும் தனித்தனியே ஒவ்வொரு ஆண்டுக்கும் இவ்வளவு ஊதியம் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து ஒரு தொகையை ஒதுக்கி விடுகின்றனர். டி.ஐ. மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்களுக்கு 2012-ம் ஆண்டுக்கு வழங்க வேண்டிய ஊதியம் ஒரு கோடி தான் ஒன்று ஒதுக்கிவிட்டு அதிலும் ஆட்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்க முடியுமோ, குறைக்கிறார்கள். மிச்சமுள்ள பணத்தை ஆலையின் உயர் அதிகாரிகளுக்கு ஊக்கத் தொகையாக வழங்குகிறார்கள்.
நிரந்தரத் தொழிலாளிகளுக்கே அதிகப்பட்ச ஊதியம் எட்டாயிரம் தான். ஒப்பந்ததத் தொழிலாளர்களுக்கோ மிக மிக அடிமாட்டு கூலியாக மூவாயிரத்து ஐநூறு முதல் நாலாயிரம் ரூபாய் தான் வழங்கப்படுகிறது. எனவே தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்தனர். பேச்சுவார்த்தைக்கு வருகிறேன் என்று வரும் நிர்வாகம் பேச்சுவார்த்தையை வேண்டுமென்றே இழுத்தடிப்பதும், பாதியிலேயே எழுந்து செல்வதுமாக தொழிலாளர்களை தொடர்ந்து அவமானப்படுத்திக் கொண்டிருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் குழுமத்தின் நிறுவன நாள் என்று ஒரு நாளை கொண்டாடுகிறார்கள். அன்று அனைத்து அதிகாரிகளும் ஆலையில் கூடி இனிப்புகள் வழங்கி, உரையாற்றி உணவருந்தி பிறகு கலைவார்கள். இந்த ஆண்டின் நிறுவன நாளன்று மழை கொட்டிக் கொண்டிருந்தது. உங்களுடைய கொண்டாட்ட நாள் எங்களுக்கு துக்க நாள் என்று கூறி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொழிலாளிகள் அனைவரும் சட்டைகளில் கருப்பு பட்டைகளை அணிந்து கொண்டு விழா நடந்த அரங்கிற்கு எதிரில் கொட்டும் மழையில் நனைந்து கொண்டே நின்றனர். அவர்கள் கொடுத்த இனிப்புகளையும் புறக்கணித்தனர்.
ஏற்கெனவே வருடத்திற்கு எண்ணூற்றி ஐம்பது ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வந்தது. அதாவது மாதத்திற்கு எழுபத்தியோரு ரூபாய். இன்றுள்ள நிலைமைகளில் இந்த ஊதியம் போதுமானதாக இல்லை என்பதால் தொழிலாளர்கள் கூடுதல் ஊதியத்தை கோரினார்கள். கூடுதலாக நான்காண்டுகளுக்கு இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பது ரூபாய் தருவதாக நிர்வாகம் ஒப்புக்கொண்டது. அதாவது இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பது என்றால் ஆண்டுக்கு இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பது அல்ல அந்த மொத்த தொகையை ஆண்டுக்கு அறுநூற்று என்பத்து எட்டு என்று நான்காண்டுகளுக்கு பிரித்துக்கொள்ள வேண்டும் அவ்வாறு பிரித்துக்கொண்டால் மாதத்திற்கு ஐம்பத்து ஏழு ரூபாய் சொச்சம் வரும். எனினும் பரவாயில்லை என்று தொழிலாளர்கள் அதையும் ஏற்றுக்கொண்டனர்.
ஏற்கெனவே வழங்கி வந்ததைவிட இது மிகக்குறைவான ஒரு ஊதிய உயர்வு. அதை தருவதாக ஏற்றுக்கொண்ட நிர்வாகம் இதை தருகிறேன் ஆனால் ஏற்கெனவே வழங்கி வந்த எழுபத்தியோரு ரூபாயை தரமுடியாது என்று மறுத்தது. இது எப்படிப்பட்ட அயோக்கியத்தனம் ?
தற்போது தொழிலாளர்கள் உற்பத்தியை முடக்கி ஆலையை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட பிறகு நேற்று தொ.உ.ஆணையர் முன் நடந்த பேச்சு வார்த்தையையும் கணக்கில் சேர்த்தால் கடந்த ஒன்றரை ஆண்டில் மட்டும் சுமார் ஐம்பது முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது !
பேச்சுவார்த்தை என்கிற பெயரில் தொழிலாளிகளை அலைக்கழித்து இழுத்தடித்ததாலும், ஊதிய உயர்வு தருகிறேன் என்கிற பெயரில் சீண்டிப்பார்க்கும் விதத்தில் ஏற்கெனவே வழங்கி வந்த ஊதியத்தையே அயோக்கியத்தனமாக வெட்டியதாலும் வேறு வழியே இன்றி தான் தொழிலாளிகள் இயந்திரங்களின் பொத்தான்கள் மீது கை வைத்தனர்.
உள்ளிருப்பு போராட்டம் உற்பத்தி நிறுத்தம்!
24-ம் தேதி மாலை நாலரை மணிக்கு அனைத்து இயந்திரங்களும் நிறுத்தப்பட்டு உள்ளிருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஆலையிலிருந்த மேலாளர்கள் மூலம் உடனடியாக மேல்மட்டத்திற்கு தகவல் பறந்தது. அடுத்த சில மணி நேரங்களில் அதிகாரிகள் கூட்டம் திபுதிபுவென ஆலைக்குள் நுழைந்தது. அதற்கு முன்பாக அவர்களுக்கு காவல் காக்கக்கூடிய போலீசு கும்பல் சட்ட விரோதமான முறையில் ஆலைக்கு வெளியில் குவிக்கப்பட்டது. பத்து மணியை கடந்தும் அதிகாரிகள் வெளியே வரவில்லை.தொழிற்சாலைக்குள் நடக்கும் பிரச்சினை சட்டம் ஒழுங்கு பிரச்சினை அல்ல ! எனவே போலீசு இதில் தலையிடுவதற்கு சட்டப்படியே அதிகாரம் இல்லை. எனினும் விசுவாசம் காரணமாக போலீசார் ஆலைக்கு வெளியில் ஹூண்டாய் முதலாளி கொடுத்த காரில் அமர்ந்து கொண்டிருந்தனர்.
தொழிலாளிகளுக்காக ஆவடி அம்பத்தூர் பகுதி பு.ஜ.தொ.மு தோழர்களும் நின்று கொண்டிருந்தனர். தோழர்களை நெருங்கிய போலீசு “பத்து மணிக்கு மேல இங்க என்ன கூட்டம் போட்டுக்கிட்டு. எல்லோரும் கலைஞ்சு போங்க” என்று மிரட்டியது. “உள்ள எங்க தோழர்கள் போராடிட்ருக்காங்க, அவங்களுக்காக நாங்க நிக்கிறோம். இது ரோடு. ரோட்ல நிக்கிறதுக்கு இந்த நாட்டின் குடிமகன் என்கிற வகையில் எங்களுக்கு உரிமை இருக்கிறது” என்று தோழர்கள் தெரிவித்தனர். தனது அதிகாரம் செல்லுபடியாகவில்லை என்றதும் சரி சரி ரெண்டு ரெண்டு பேரா பிரிஞ்சி நில்லுங்க என்றனர்.
நிர்வாகம் தன்னுடன் இரு கியூ பிரிவு போலீசாரையும் ஆலைக்குள் அழைத்துச் சென்றிருக்கிறது. அவர்கள் தொழிலாளிகளை கண்காணிக்கத் துவங்கினர். அதிகாரிகள் தொழிலாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றனர். அருகிலேயே கியூ பிரிவு போலீசாரும் நின்று கொண்டிருந்தனர். பேச்சுவார்த்தை நடத்தலாம் ஆனால் இவர்கள் யார், எதற்காக வந்துள்ளனர் என்று கேட்டனர் அவங்க சும்மா கூட இருப்பாங்க என்றனர். இவங்க யார்னு எங்களுக்கு தெரியும். இது உங்களுக்கும் எங்களுக்கும் இடையிலான பிரச்சினை. அவர்களை வெளியேற்றுங்கள் நாம் பேசுவோம் என்றனர். அதன் பிறகும் பல காரணங்களை கூறி அவர்களை நிற்க வைக்க முயற்சித்தனர். ஆனால் அவர்கள் இங்கிருந்து வெளியேறினால் தான் பேச்சுவார்த்தை பற்றியே பேச முடியும் என்று தொழிலாளிகள் கராறாக கூறிவிட்ட்தால் கியூ போலீசு அவமானப்பட்டு வெளியேறியது.
வழக்கமாக பேச்சுவார்த்தை கான்ப்ரன்ஸ் ஹால், அல்லது ஏதாவது ஒரு அறையில் தான் நடக்கும். இப்போதோ அங்கெல்லாம் வர முடியாது இங்கேயே பேசுங்கள் என்று அதிகாரிகளை அங்கேயே நிற்க வைத்து பேசினர். பேச்சுவார்த்தை தோல்வி, மறுபடியும் பேச்சு மீண்டும் தோல்வி என்று இரவு இரண்டரை மணி வரை ஐந்து முறை பேச்சுவார்த்தை தோல்வி, தோல்வி, பேச்சுவார்த்தை என்று விளையாட்டுகாட்டிக்கொண்டிருந்தது நிர்வாகம்.
விளையாட்டு மட்டுமல்ல மிரட்டலும் விடப்பட்டது. “முருகப்பா குரூப்ல உங்களை மாதிரி முப்பதாயிரத்துக்கு மேற்பட்டவங்க வேலை செய்றாங்க. அதுல நீங்க வெறும் அறுபத்து எட்டு பேர் தான். உங்களால என்ன பண்ண முடியும் ? மரியாதையாக வெளியேறிட்டீங்கன்னா நல்லது இல்லைனா விளைவுகள் விபரீதமாக இருக்கும்” என்று பூச்சாண்டி காட்டினர். அந்த விளைவுகளையும் பார்க்கலாமே என்று தொழிலாளிகள் மிரட்டலை சட்டை செய்யாமல் உறங்கச் சென்றனர். பிறகு கூடி பேசிய அதிகாரிகள் மூன்று மணிக்கு ஆலையிலிருந்து வெளியேறினர்.
விடாப்பிடியான இழுபறி நிலை!
இதுவரை உற்பத்தி செய்யப்பட்டிருந்த அனைத்து கார் கதவுகளும் ஹூண்டாய்க்கு அனுப்பப்பட்டுவிட்டன. மறுநாள் அனுப்புவதற்கு கதவுகள் இல்லை. அன்றிரவு எட்டு மணிக்குள் உற்பத்தி துவங்கப்படாவிட்டால் அதற்கடுத்த நாள் ஹூண்டாய் கார்கள் அனைத்தும் கதவுகள் பொருத்தப்படாத நிலையில் அசெம்ப்ளி லைனில் நிற்கும், அங்கு உற்பத்தி ஸ்தம்பிக்கும் என்பது மறுநாள் நிலைமை.மறுநாள் விடிந்தது. ஆலைக்கு வெளியே பத்து தோழர்களும் தூங்காமல் காத்துக் கொண்டிருந்தனர். போலீசும் நகரவில்லை. சரியாக எட்டு மணிக்கெல்லாம் ஆலைக்குள் வந்த அதிகாரிகள். மறுபடியும் பேசலாம் என்றனர். அதற்குள் இங்கே நடக்கின்ற பிரச்சினைகள் எப்படியோ ஹூண்டாய்க்கு தெரிந்துவிட்டது. உடனே TI ல் என்ன நிலைமை என்பதை பார்த்துவர ஒரு அதிகாரியை அனுப்பியிருக்கிறது.
இந்நிலையில் காட்சி ஊடகங்களுக்கு தகவல் தெரிந்து சன் நியூஸ், ஜீ தமிழ், கேப்டன் நியூஸ் ஆகிய தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன. மக்கள் போராடக்கூடாது என்று விரும்புகின்ற ’புதிய தலைமுறை’ மட்டும் வெளியிடவில்லை.
ஊடகங்கள் வந்ததையும், தொழிலாளிகள் பேட்டியளித்ததையும் அறிந்த நிர்வாகம் வெளியே வந்த தொழிலாளர்கள் மீண்டும் உள்ளே சென்றதும் ஷட்டரை இழுத்து பூட்டு போட்டது. தொழிலாளர்களை இவ்வாறு உள்ளே தள்ளி கதவை மூடுவது என்பது சிறை வைப்பதாகும், இது சட்டவிரோத நடவடிக்கை.
வெளியில் நின்று கொண்டிருந்த தோழர்களுக்கு இந்த தகவல் கிடைத்ததும் தொழிலாளர்களுடைய பெற்றோர்கள், மனைவி குழந்தைகள் அனைவரையும் அணிதிரட்டி ஆலைக்கு முன்பு கொண்டு வந்து நிறுத்தி முழக்கமிட்ட்னர். காவல்துறை உடனே பெண் காவலர்களை கொண்டு வந்து இறக்கியது. பிறகு ஷட்டர் திறக்கப்பட்டது.
இதற்குள் பிற்பகல் ஆகிவிட்டது. ஆலைக்குள் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டி கோடி கோடியாக விழுங்கும் முதலாளிகள் சல்லித்தனமாக மாதத்திற்கு ஐம்பத்தியேழு ரூபாயை உயர்த்தி கொடுக்க முடியாது என்பதில் பிடிவாதமாக நின்றனர். உழைக்காத உனக்கே இவ்வளவு திமிர் இருந்தால் உழைத்து சாப்பிடுகின்ற எங்களுக்கு எவ்வளவு இருக்கும் என்று தொழிலாளிகளும் பிடிவாதமாக நின்றனர்.
தமிழகத்தில் பன்னிரெண்டு நிறுவனங்கள் பல்லாயிரம் கோடிகளில் முதலீடு செய்கின்றன என்று சமீபத்தில் ஜெயலலிதா பெருமைபட்டுக் கொண்ட நிறுவனங்களில் முருகப்பா குழுமமும் ஒன்று. இக்குழுமம் பத்தாயிரம் கோடிகளை முதலீடு செய்யவிருக்கிறது. எனவே அரசு தரப்பிலிருந்து உடனடியாக பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி தொழிற்துறை செயலர் மூலம் தொழிலாளர் ஆணையருக்கும், இணை ஆணையருக்கும் (JCL) இணை ஆணையரின் உத்தரவுப்படி தொ.உ.ஆணையர் (ACL) “ஞாயிற்று கிழமை என்றாலும் பரவாயில்லை பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்” என்று அழைத்தார்.
மாலை நாலரை மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தை இரவு எட்டரை மணிக்கு முடிந்தது. பேச்சுவார்த்தையின் முடிவில் புதிய ஊதிய உயர்வு கோரிக்கையை ஏற்பதாகவும் ஏற்கெனவே வழங்கி வந்த பழைய ஊதிய உயர்வையும் தொடர்ந்து வழங்குவதாகவும் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது. அதன் பிறகு ஆலைக்குள்ளிருந்த தொழிலாளிகள் வெளியேறினர்.
எழுபதுகளில் இதே அம்பத்தூர் ஆவடி பகுதிகளில் முருகப்பா குழுமத்தில் இதே போல தொழிலாளி வர்க்கம் போராடியுள்ளது. அப்போது ஆட்சியிலிருந்த எம்.ஜி.ஆர், அந்த காலத்து இரும்பு தொப்பி போட்ட போலீசை ஏவிவிட்டு தொழிலாளர்களை ஒடுக்க நினைத்தார். ஆனால் தொழிலாளி வர்க்கம் போலீசை விரட்டி அடித்தது வரலாறு.
அதன் பிறகு கடந்த முப்பது ஆண்டுகளாக முதலாளிகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமலிருந்ததால் குளிர்விட்டு போயிருந்தது. தற்போது அந்த வரலாற்றை மீட்டெடுக்க, முதலாளிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக பு.ஜ.தொ.மு வளர்ந்து வருகிறது. எழுபதுகளுக்கு பிறகு முருகப்பாவில் இத்தகையதொரு போராட்டம் நடைபெற்றதில்லை. அந்த தேக்க நிலையை உடைத்தெறிந்திருக்கிறது பு.ஜ.தொ.மு. முருகப்பாவில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பு.ஜ.தொ.மு விலுள்ள தொழிலாளிகள் முதலாளிகளின் கொட்டத்தை ஒடுக்குவார்கள்.
முன்பு ஒரு முறை நடந்த ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியடைந்த போது பேச்சுவார்த்தை நடந்த இடத்தின் வாஸ்து சரியில்லாதது தான் தோல்விக்கு காரணம் என்று கூறி அந்த இடத்தை இடித்துவிட்டு லட்சக்கணக்கில் செலவு செய்து புதிய கட்டிடத்தை கட்டினார்கள். தோல்விக்கு காரணம் வாஸ்து தான் என்றால் தற்போதைய பேச்சுவார்த்தை தொண்ணூற்று ஒன்பது சதவீதம் ஆலையின் நடு மையத்தில் தான் நடந்திருக்கிறது. என்ன செய்யப்போகிறது முருகப்பா குழுமம்? முழு ஆலையையும் இடித்து விடுமா?
போராட்டம் முடிவுக்கு வந்த அன்றைக்கு இரவோடு இரவாக தொழிலாளிகளை கண்காணிப்பதற்கான உளவு கேமராக்களை ஆலைக்குள் பொருத்தியுள்ளனர். இந்த கேமராக்களுக்கு ஒரு பார்ப்பானை வைத்து பூஜையும் போட்டு நல்ல நேரம் பார்த்து அதை ஆன் செய்துள்ளனர். எத்தனை கேமராக்களை வைத்தாலும் முதலாளித்துவத்திற்கு இனி நல்ல நேரம் இல்லை.
________________________________________________
- வினவு செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக