தி.மு.க. கொடி அரைக் கம்பத்தில்! உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் தடபுடல் கொண்டாட்டம்!
தி.மு.க.-வின் முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், சமயநல்லூர் செல்வராஜ் ஆகியோரின் மறைவை ஒட்டி, தி.மு.க. கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ள நிலையில், ஸ்டாலின் மகன் உதயநிதியின் பிறந்த தின விழா, நட்சத்திர ஓட்டலில், தடபுடல் விருந்துடன் கொண்டாடப்பட்டதால், கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சமயநல்லூர் செல்வராஜ் ஆகியோர், அடுத்தடுத்து உடல்நல குறைவினால் இறந்தனர். அதையடுத்து, கட்சி நிகழ்ச்சிகள் மூன்று நாட்கள் தள்ளி வைக்கப்பட்டன. தி.மு.க. கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
ஆனால், தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் மகன், உதயநிதியின் பிறந்த தின விழா நேற்று முன்தினமும், நேற்றும் சென்னையில் ஆடம்பரமாக கொண்டாடப்பட்டது.
சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், நேற்று முன்தினம், நள்ளிரவில் உதயநிதியின் பிறந்தநாள் விழா நடந்தது. அதில், அவரது நண்பர் மகேஷ் பொய்யாமொழி, திரைப்பட இயக்குனர்கள் ரவி குமார், தரணி, மற்றும் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டும் பங்கேற்றனர்.
அதையடுத்து நேற்று, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள, ரெட்ஜெயன்ட் பிலிம்ஸ் அலுவலகத்துக்கு நேற்று காலை உதயநிதி வந்தபோது, டி.ஆர்.பாலு மகன் ராஜா, எம்.எல்.ஏ., பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். உதயநிதிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக வெளியூர்களில் இருந்து வந்த தி.மு.க. இளைஞரணி பிரமுகர்கள், உதயநிதியின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஆகியோர், உதயநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த விவகாரம் தற்போது கட்சிக்குள் புகையத் தொடங்கியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக