சோதனை, கற்பனை வளம் சம்பந்தப்பட்டதல்ல; கல்லாப் பெட்டி சம்பந்தப்பட்டது. 2008 ஆம் ஆண்டு ரூ. 501 ஆக இருந்த என்.டி.டி.வி.யின் பங்கு விலை 2011 இன் இறுதியில் ரூ. 26 ஐ விடக் குறைந்து விட்டது. ஜூன் 30, 2012 இல் முடிந்த காலாண்டில் அது ரூ. 22.71 கோடி நஷ்டமடைந்திருக்கிறது.
தனது வீழ்ச்சிக்கும், நஷ்டத்திற்கும் காரணம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மதிப்பிடும் டிஆர்பி கணக்கீட்டில் நடந்த மோசடிகள் தான் என்று பன்னாட்டு நிறுவனமான ஏ சி நீல்சன் மற்றும் அதன் கூட்டு நிறுவனங்கள் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது என்.டி.டி.வி.
ஏ சி நீல்சன் பங்குதாரராக இருந்து நடத்தும் டேம் (TAM) நிறுவனம் இந்தியாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான டிஆர்பியை வெளியிடுகிறது. பார்வையாளர் இலக்குக் குறியீட்டுப் புள்ளிகள் (Target Rating Points) என்று சொல்லப்படும் டி.ஆர்.பி ரேட்டிங்குகள் தான் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்கு சந்தையில் உள்ள கிராக்கியை அளவிட்டுச் சொல்கிறது.
பெரு நகரங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 8,000 வீடுகளின் தொலைக்காட்சிப் பெட்டிகளில் பீப்பிள்ஸ் மீட்டர் எனப்படும் கணக்கீட்டுக் கருவியைப் பொருத்துகிறது டேம் நிறுவனம். இந்தக் குடும்பத்தினர் எந்த சேனலைப் பார்க்கிறார்கள், எந்த நேரத்தில் எந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள் என்கிற விவரத்தை அந்தக் கருவி பதிவு செய்து கொள்ளும். இப்படிப் பதிவு செய்த தகவல்களை அதனோடு இணைக்கப்பட்டிருக்கும் இணைப்பு மூலமாக இணையம் வழியே டேம் நிறுவனத்துக்கு அனுப்புகிறது.
இவ்வாறு சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு நகரிலும் ஒவ்வொரு பிரிவிலும் (செய்தி, கேளிக்கை, விளையாட்டு, இசை) நிகழ்ச்சிகளுக்கான டிஆர்பியை டேம் வெளியிடுகிறது. இதில் வயதுவாரியாக யார், எந்த நிகழ்ச்சியை ரசிக்கிறார்கள்? எந்த நேரத்தில், எந்த குறிப்பிட்ட நிகழ்ச்சி வரவேற்பைப் பெற்றது? என்பதைப் போன்ற தகவல்கள் இருக்கும்.
பொழுதுபோக்கு, செய்தி, விளையாட்டு, இசை என்று வெவ்வேறு வகையாக 500க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் இந்தியாவில் தமது நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன. அவற்றில் 163 சேனல்கள் டிஆர்பி (இலக்கு அளவீட்டுப் புள்ளி) அளவீட்டு முறையில் பங்கு பெறுகின்றன. மேற்சொன்ன வழிமுறைகளில் டிஆர்பி கணக்கிடும் முறையில் மாபெரும் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள என்.டி.டி.வி, அதனால் தனக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட $1.39 பில்லியன் (சுமார் ரூ. 7,500 கோடி) நஷ்டஈடு அளிக்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்துள்ளது .
“டிஆர்பி கணக்கிடுவதற்காக தேர்ந்தெடுக்கப்படும் குடும்பங்களின் எண்ணிக்கையை 8,000 லிருந்து 33,000 ஆக உயர்த்த வேண்டும் என்று பல முறை முறையிட்டும் டேம் நிறுவனம் அதைச் செய்யவில்லை” என்று குற்றம் சாட்டுகிறது என்.டி.டி.வி.
“மும்பையில் உங்கள் தொலைக்காட்சியின் டிஆர்பியை நீங்கள் விரும்பும் பிரிவினர் மத்தியில் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக்க வேண்டுமானாலும் செய்து தருகிறோம். கொஞ்சம் செலவாகும்’ என டேம் – நிறுவன ஊழியர்கள் பேரம் பேசியதாக என்.டி.டி.வி குற்றம் சாட்டியிருக்கிறது.
“ஒரு வீட்டுக்கு சுமார் $250 முதல் $500 வரை (சுமார் ரூ. 13,000 முதல் ரூ. 25,000 வரை) கொடுத்தால் அவர்களை நாம் சொல்லும் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பதிவு செய்யும்படி செய்யலாம்” என்றும், “அந்த வீடுகளில் இரண்டாவதாக ஒரு டிவி வாங்கிக் கொடுத்து, அதில் விரும்பிய நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொள்ளும்படியும், கணக்கீட்டுக் கருவி இணைக்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகளில் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட நிகழ்ச்சியை ஓட விடும்படியும் சொல்லி விடலாம்” என்றும் அவர்கள் சொன்னதாக என்.டி.டி.வி தெரிவிக்கிறது.
“20 ஆண்டுகளாகத் தனது நிகழ்ச்சிகளுக்கு நல்ல டிஆர்பி பெற்று, அதன் மூலம் விளம்பரப் பணம் சம்பாதித்த என்.டி.டி.வி, இப்போது அவர்கள் நிகழ்ச்சிகளின் டிஆர்பி குறைந்தவுடன் திடீரென்று புகார் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்கின்றன ஏ சி நீல்சன் குழும நிறுவனங்கள்.
இது என்.டி.டி.வி.க்கும், ஏ சி நீல்சனுக்கும் இடையேயான கொடுக்கல் வாங்கல் தகராறு மட்டும் அல்ல. தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காகவும், பொழுது போக்குக்காகவும் மக்கள் கணிசமான நேரத்தைச் செலவிடும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எந்த அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன என்பதைப் பற்றிய வழக்கு இது. ’எத்தகைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக வேண்டும்? அதை யார் தயாரிக்க வேண்டும்? எந்தத் தொலைக்காட்சி நிறுவனம் தொடர்ந்து செயல்பட வேண்டும்?’ என்பன போன்ற முக்கிய முடிவுகள் எப்படி எடுக்கப்படுகின்றன என்பதைப் பற்றிய வழக்கு இது.
இது மட்டுமல்லாமல், செய்தித் தொலைக்காட்சிகள் என்பவை தேசத்தின் அரசியல் அரங்கில் எந்தச் செய்திகள் விவாதத்தில் இருக்க வேண்டும், யார் எவ்வளவு நாட்களுக்கு அரசியல் வானின் நட்சத்திரமாய் இருக்க வேண்டும், எந்தக் கருத்து மக்களின் கருத்தாய் பதியப்பட வேண்டும், எது மக்களின் எதிர்ப்பாக சொல்லப் பட வேண்டும், அரச எதிர்ப்புக் கருத்து எந்த வடிவத்தில் இருக்க வேண்டும் என்பவற்றையெல்லாம் ‘தீர்மானிக்கும்’ செல்வாக்கைப் பெறத் துவங்கியிருக்கும் காலகட்டம் இது. எனவே இதனை என்.டி.டி.வி.க்கும், ஏசி நீல்சனுக்கும் இடையேயான சில்லறைத் தகறாராக சுருக்கிப் பார்க்க முடியாது.
2001 ஆம் ஆண்டு ’எந்தெந்த வீடுகளில் கணக்கீட்டுக் கருவிகள் பொருத்தப்படுகின்றன’ என்ற ரகசியப் பட்டியல் கசிய விடப்பட்ட போது, டிஆர்பி பற்றிய விவாதம் நடந்தது. அதைப் பற்றி விசாரிக்க வழக்கம் போல மத்திய அரசு ஒரு கமிசனை நியமித்தது. அந்தக் கமிசன் என்னவானது, அதில் இருந்தவர்கள் என்னவானார்கள், அதன் முடிவு என்ன, முடிவுகள் அமுல்படுத்தப்பட்டதா இல்லையா? என்பது போன்ற எந்த விபரங்களையும் அறிந்து கொள்ள முடியவில்லை.
டிஆர்பி கணக்கீட்டுக் கருவிகள் பொதுவாக பெரு நகரங்களின் நடுத்தர மற்றும் உயர்நடுத்தர வர்க்க குடும்பங்களிலேயே பொருத்தப்படுகிறது. இதில் கணக்கெடுப்பை நடத்தும் நிறுவனம் காசு கொடுத்து தனக்கு வேண்டிய முடிவுகளைப் பெற்று விடுகிறார்கள் என்கிற உண்மை ஒருபக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் இந்தப் பிரிவினரின் ரசனையையே பொது ரசனையாகவும், இவர்களின் அரசியல் வேட்கையையே பொதுவான கோரிக்கையாகவும் நிலை நிறுத்துகிறார்கள். இந்த உறவு ஆளும் வர்க்கங்களின் விருப்பத்தை இயல்பாகவே ஈடு செய்கிறது.
இந்த வகையில் தான் பெரு நகர மேல்நடுத்தர வர்க்கத்தினரின் மனங்கவர் ஜோக்கரான அண்ணா ஹசாரே, அனைவருக்குமான மீட்பராக சில மாதங்கள் வலம் வந்தார். இது ஒரு புறமென்றால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அடிப்படையாக வைத்து இயங்கும் விளம்பரக் கம்பெனிகளின் வருவாயும் டிஆர்பி ரேட்டிங்கை வைத்தே முடிவாகிறது. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு டிஆர்பி ரேட்டிங் எவ்வளவு என்பதைப் பொறுத்தே அதற்கு விளம்பரத் தொகை ஒதுக்கப்படுகிறது.
இந்தியத் தொலைக்காட்சி சேனல்கள் விளம்பரங்களின் மூலம் சுமார் 21,300 கோடி ரூபாய்கள் வருடாந்திரம் கல்லா கட்டுகின்றன. பற்பசை முதல் சோப்பு வரை, சமையல் எண்ணெய் முதல் குழம்பு மிளகாய்த் தூள் வரை, செல்போன் சேவை முதல் ரயில் பயணம் வரை என மக்கள் வாங்கும் பொருட்கள் அல்லது சேவைகளுக்கான விலையில் கணிசமான பகுதியை முதலாளிகள் விளம்பரங்களுக்காகச் செலவிடுகின்றனர். தேவையில்லாத பொருட்களை வாங்க வைக்கவும், தேவைப்படும் பொருட்களை தேவைக்கு அதிகமாக வாங்க வைக்கவும் விளம்பரங்கள் முயற்சிக்கின்றன.
என்.டி.டி.வி போன்ற இந்தியத் தொலைக்காட்சி நிறுவனங்களின் 80% வருமானம் விளம்பரங்கள் மூலமாகவே கிடைக்கிறது. சில விநாடிகள் விளம்பரத்தைக் காட்டுவதற்கு சில நூறு ரூபாய்கள் முதல் பல லட்சம் ரூபாய்கள் வரை கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. சன் டி.வி.யின் முக்கியமான மெகா தொடர் நடுவே வரும் 20 விநாடிகள் விளம்பரத்துக்கான கட்டணம் பல ஆயிரம் ரூபாய்களாகவும், இந்தியா விளையாடும் கிரிக்கெட் பந்தயத்தின் நடுவே அத்தகைய விளம்பரத்துக்கான கட்டணம் லட்சக் கணக்கிலும் எகிறுகிறது.
செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 7 வரை நடைபெற்ற டி-20 உலகக் கோப்பைப் போட்டிக்கான 10 விநாடி விளம்பர இடைவேளைகள் ஒவ்வொன்றுக்கும் ஹூண்டாய், டாடா மோட்டார், பெப்சி, நோக்கியா, டாடா டெலி சர்வீசஸ், யூனியன் பேங்க் போன்ற விளம்பரதாரர்களிடம் தலா ரூ. 3.5 லட்சம் கட்டணம் வசூலிக்கிறது, ஸ்டார் தொலைக்காட்சிக் குழுமம். இந்தப் போட்டிகளின் நடுவே ஒளிபரப்பப்படும் விளம்பரங்களுக்காக ஸ்டார் குழுமம் ரூ. 250 கோடி சம்பாதிக்கும் என்று இத்துறையைச் சேர்ந்தவர்கள் மதிப்பிடுகின்றனர்.
ஆனால் ஆரம்பத்தில் தொலைக்காட்சிச் சேவை என்பது பண வேட்டையாடும் களமாகத் துவங்கப்படவில்லை. தொலைக்காட்சி ஒளிபரப்பின் ஆரம்ப காலங்களில் மைக்ரோவேவ் எனப்படும் குறுகிய தூரம் பரவும் மின்காந்த அலைகள் மூலம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. அடுத்த கட்டமாக பூமிக்கு மேல் நிறுத்தப்பட்டுள்ள புவிநிலை செயற்கைக் கோள்கள் மூலம் உலகின் எந்தப் பகுதிக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொழில்நுட்பம் தற்போது பயன்படுத்தப்படுகிறது.
ஆரம்பத்தில் தொலைக்காட்சித் தொழில்நுட்பமும் அனைவருக்கும் பயன்படக்கூடிய, சமூகத்துக்கு உரிமையான ஒரு பொதுச் சேவையாகவே உருவாகி வளர்ந்தது. நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் போது சிக்னல்களைப் பெற்றுக்கொள்ளும் கருவி (தொலைக்காட்சிப் பெட்டி, ஆண்டெனா, டிஷ்) வைத்திருக்கும் அனைத்து மக்களும் நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும்.
மக்கள் அனைவருக்கும் சொந்தமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொதுச் சொத்தான அலைக்கற்றைகள், செயற்கைக் கோள்கள் இவற்றின் மூலம் மக்களின் அறிவையும், உணர்வையும் செறிவூட்டும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவது இயல்பானதாக இருந்திருக்கும். அதனால்தான் ஆரம்ப கால தொலைக்காட்சிகள் அரசுகளால் லாப நோக்கமில்லாமல் நடத்தப்பட்டு வந்தன. இந்தியாவில் 1980களின் இறுதி வரையில் அரசுத் தொலைக்காட்சி மட்டுமே இயங்கி வந்தது நினைவிருக்கலாம்.
தூர்தர்ஷன் என்ற பெயரில் ஒளிபரப்பான அரசுத் தொலைக்காட்சியில் மத்திய அரசின் கட்டுப்பாடு, இந்தி மொழி ஆதிக்கம், பிராந்திய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் இன்மை போன்ற பல முக்கியமான குறைபாடுகள் இருந்தன. தொழில் நுட்பமும், வசதிகளும் மேம்பட மேம்பட அவை நிவர்த்தி செய்யப்பட்டு வந்தன.
ஆனால் 1990 களில் ஆரம்பித்த தனியார்மயமாக்கலின் ஒரு பகுதியாக தொலைக்காட்சி ஒளிபரப்பு, தனியார் நிறுவனங்களின் போட்டிச் சந்தைக்கு திறந்து விடப்பட்டது. ’தூர்தர்ஷன் என்றால் ஒரே வயலும், வாழ்வும் போட்டு போரடிப்பான்’ என்று சலித்துக் கொண்ட நடுத்தர வர்க்கத்துக்கு நிவாரணமாக புதிய தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் நூற்றுக்கணக்கில் நமது வான்பரப்பில் இன்று கால் பரப்பி நிற்கின்றன.
பார்வையாளர்களிடமிருந்து தனித்தனியாகக் கட்டணம் வசூலிப்பது நடைமுறையில் சாத்தியமில்லாமல் இருந்த காலத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் வருமானம் ஈட்டுவதற்காக உருவாக்கப்பட்ட உத்திதான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கிடையே விளம்பரங்களைக் காட்டுதல்.
இப்போது செட்டாப் பாக்ஸ், டி.டி.எச் போன்ற மின்னணு தொழில்நுட்பங்கள் வந்து விட்ட பிறகும் தரைவழி மற்றும் செயற்கைக்கோள் வழி ஒளிபரப்பு முறைகளில் தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இந்தியாவின் பெரும்பான்மை மக்களைச் சென்றடைகின்றன. இந்தியத் தொலைக்காட்சி நிறுவனங்கள் சந்தாத் தொகையாக ஆண்டுக்கு ரூ. 11,600 கோடி வருமானத்தை ஈட்டினாலும், விளம்பரங்கள் மூலமாக ரூ. 21,300 கோடி வரை சம்பாதிக்கின்றன.
தொலைக்காட்சி சேனல்களின் டிஆர்பி வெறி ’விளம்பரங்களுக்காகவே நிகழ்ச்சிகள்’ என்ற வகையில் விளம்பரதாரர்களின் ஆதிக்கத்தை வளர்த்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் பகல் நேரத்தில் வேலைக்குச் செல்லாத பெண்களை விளம்பரங்களைப் பார்க்கச் செய்வதற்காக ஒளிபரப்பப்பட்ட சோப் ஓப்பராக்களின் வழித்தோன்றல்கள் தான் நமது வானலைகள் வழி வந்து வீடுகளை ஆக்கிரமிக்கும் இன்றைய மெகா தொடர்கள்.
பிறகு சென்ற நூற்றாண்டின் இறுதியில் செய்தித் தொலைக்காட்சிகள் பிரேக்கிங் நியூஸ் என்ற பெயரில் 24 மணி நேரமும் இயங்கத் துவங்கின. இவர்களின் போட்டிதான் செய்தி தயாரிக்கும் துறையையே தலைகீழாக மாற்றிவிட்டது. செய்தியல்லாதவற்றைச் செய்தியாக்குவது, செய்தியைச் செய்தியில்லாமல் செய்வது, பிரபலங்களின் படுக்கையறையை எட்டிப் பார்ப்பது, அதையே ஆபாச ரசம் சொட்டச் சொட்ட பார்வையாளர்களுக்குப் பரிமாறுவது, துயர சம்பவங்களில் தனி நபர்களின் உணர்வுகளை கிளறி சுவாரஸ்யத்தை உருவாக்க முயற்சிப்பது, அரசியல் ரீதியில் சில முக்கியமான பிரச்சனைகளைக் கூட தொலைக்காட்சி நிலையத்துக்குள் செய்தியாளர்கள் கத்தும் கத்தலில் அதன் கேந்திரமான பகுதியை மறைத்து, வெறும் பரபரப்பை மட்டுமே நிலைநாட்டி, இறுதியில் நீர்த்துப் போக வைப்பது. சினிமா தொடர்பான செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் மிக மலினமாகக் காட்டுவது – இப்படிப் பல்வேறு வகையில் மக்களின் ஓய்வு நேரங்களைக் கபளீகரம் செய்யும் தொலைக்காட்சி நிறுவனங்கள், அதற்கு வைத்திருக்கும் அளவுகோல் தான் டி.ஆர்.பி ரேட்டிங்.
உழைத்துக் களைத்தவர்கள் உடல் வலியை மறக்கவும், வாழ்ந்து சலித்தவர்கள் மனதை மரத்துப் போகச் செய்யவும் டாஸ்மாக் கடைகளை நாடுவது போல, அன்றாடப் பணிவாழ்வு தொடர்பான நினைவுகளிலிருந்து தப்பிக்கவும், இலக்கற்ற தமது ஓட்டத்தை நியாயப்படுத்தவும் விரும்பும் மக்களுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் புகலிடமாக இருக்கின்றன.
விஜய் டிவியில் ’நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’, அதற்கு இணையாக சன் டிவியில் ’கையில் ஒரு கோடி, ஆர் யூ ரெடி’ போன்ற கேலிக் கூத்துகள் ஒரு பக்கம் நவீன லாட்டரிகளாக சீறிப் பறந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கமோ சூப்பர் சிங்கர், சூப்பர் டான்சர் போன்ற நிகழ்ச்சிகள் வளரும் பருவத்திலேயே சின்னஞ் சிறுவர்களையும், சிறுமியர்களையும் குத்தாட்ட உணர்ச்சிக்கு பழக்கப்படுத்தி வருவதும் கூட டி.ஆர்.பி புள்ளிகளைப் பெற்று, விளம்பர வருவாய் மூலம் கொள்ளை லாபம் சம்பாதிக்கத் தான்.
புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமுலாக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த இரு பத்தாண்டுகளில் மக்களின் பொருளாதார வாழ்க்கை மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டே வருகிறது. வேலையிழப்பு, சம்பளக் குறைப்பு, சலுகைகள் வெட்டு என்பதைப் பணியிடங்களில் சந்திக்கும் மக்கள் இவற்றினூடாக பொருளீட்டியாக வேண்டும் என்பது தான் எதார்த்தம். புற உலகில் அதிகரிக்கும் தேவைகள், அதை நிறைவேற்றியாக வேண்டிய பதட்டம், அதற்காக வேகமெடுக்கும் வாழ்க்கையில் இளைப்பாறுதலையும் கொடுக்க வேண்டிய உறவுகளுக்கும், நட்புகளுக்கும், சுற்றத்தாருக்கும் பதில் அந்த இடத்தை தொலைக்காட்சிகள் ஆக்கிரமித்துள்ளன.
செய்திச் சேனல்கள் இந்த இடைவெளிக்குள் மக்களின் மூளைகளை அரசியல் நீக்கம் செய்கிறதென்றால், பொழுது போக்குச் சேனல்கள் அந்த இடத்தை வெற்று உணர்ச்சிகளால் நிரப்புகின்றன. தமிழில் நடிகர் லட்சுமி நடத்திய ’கதை அல்ல நிஜம்’, தமிழ்நாட்டின் குரல் வேட்டை ஆடும் ’சூப்பர் சிங்கர்’, சிறந்த நாட்டிய ஜோடியை தேர்ந்தெடுக்கும் ’மானாட மயிலாட’ போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெறுபவர்களை மிகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்த வைப்பதன் மூலம், பார்வையாளர்களிடம் போலியான உணர்ச்சிகளைத் தூண்டி விடுகிறார்கள்.
மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்த போது, என்.டி.டி.வி.யின் பர்கா தத் பாதுகாப்பு படையினரின் நிலைகளையும், தாக்குதல் நடத்தியவர்களையும் நேரடி ஒளிபரப்பு செய்து தனது தொலைக்காட்சிக்கு டிஆர்பி ரேட்டிங் சம்பாதித்துக் கொடுத்தார். நாடாளுமன்றத்தில் வாக்களிக்கப் பணம் கொடுத்து, கையும் களவுமாக பிடிப்பதற்கான ரகசிய திட்டத்தை செயல்படுத்தி, படம் பிடித்த சிஎன்என் ஐபிஎன் தனது ஒளிபரப்பு முடிந்ததும் சத்தம் போடாமல் அந்த டேப்புகளை நாடாளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைத்து விட்டது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு நிகழ்வுகளை வெறும் பரபரப்பு என்கிற வட்டத்திற்குள் கொண்டுவரும் செய்திச் சேனல்கள், வேண்டிய மட்டிலும் டிஆர்பி புள்ளிகளைக் கறந்ததும், அந்நிகழ்ச்சியையே மொத்தமாக மதிப்பிழக்கச் செய்து விடுகின்றன.
உண்மையில் விளம்பர வருமானத்துக்காகப் போட்டி போடும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எதற்கு வாய்ப்பு என்பதைத் தீர்மானிக்கும் நாட்டாமை தான் டிஆர்பி. அதன் யோக்கியதை முதலாளிகளுக்கு இடையேயான போட்டி முரண்பாடுகளால் அம்பலமாகி அவ்வப்போது பல்லிளிக்கிறது. அப்படிப்பட்ட தகராறு தான் என்.டி.டி.வி.க்கும், ஏ சி நீல்சனுக்கும் இடையேயான இப்போதைய வழக்கு.
என்.டி.டி.வி.யைப் பொறுத்தமட்டில் இதில் பெரிதாய் நீதி, நேர்மையெல்லாம் பார்த்துக் கொண்டு களமிறங்கவில்லை. இப்போதே நீதிமன்றத்துக்கு வெளியே தனிப் பஞ்சாயத்து நடத்தி ஒரு கவுரவமான தொகையைப் பெற்று விட்டு, வழக்கை வாபஸ் பெற்று விடவும் அவர்கள் தயார் என்றே செய்திகள் வெளியாகின்றன. அல்லது அவர்களது வழக்கு புஸ்வாணமாகப் போகலாம். எனினும் டிஆர்பி மோசடியால்தான் தனது நிறுவனம் நட்டமடைந்தது என்று பங்குதாரர்களை நம்பவைப்பதற்ககாவது இந்த வழக்கு துணை புரியலாம்.
டிஆர்பி எனும் இலாபத்தை தீர்மானிக்கும் மாயமானை நோக்கி எல்லா தொலைக்காட்சிகளும் வெறி பிடித்தவாறு ஓடுகின்றன. அந்த ஓட்டமே எல்லா சானல்களையும் வேறுபாடு இன்றி ஒன்றாக வடிவமைத்து விடுகிறது. இன்று எந்தச் செய்தியும் பரபரப்பாக யார் முதலில் காட்டுகிறார்கள் என்று போவதால் எல்லா சானல்களிலும் குறிப்பிட்ட செய்தியை ஒரே மாதிரியாகத்தான் பார்க்கிறோம். ஒரு செய்தி குறித்த பின்னணி விவரங்கள், ஆழமான அலசல்கள் இன்றி அவை வெறுமனே கரைந்து போகும் அலங்கார ஐஸ்கீரிம் போல தோன்றிய வேகத்தில் மறைந்து போகிறது.
இறுதியில் சானல்களின் போட்டி என்பது இத்தகைய குத்து வெட்டுக்களில் வந்து முடிகிறது. விளம்பரங்கள் தரும் முதலாளிகளுக்கு டிஆர்பி ரேட்டிங் முக்கியம் என்றால், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு விளம்பர வருவாய் முக்கியம். இவர்களுக்கிடையே நடக்கும் போட்டி, சண்டையில் யாருடைய வருமானம் குறைகிறது என்பது யாருடைய வருமானம் அதிகரிக்கிறது என்பதோடு இணைந்தது. தொலைக்காட்சி மூலம் கிடைக்கும் வருவாய் யாராவது ஒரு சிலருக்குத்தான் போக வேண்டும் என்ற ஏகபோகம் இதன் மூலம் உருவாகிறது. தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தும் சன் குழுமத்தையும், உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும் முர்டோச்சின் குழுமத்தையும் இதற்கு சான்றாக கூறலாம்.
என்.டி.டி.வி அத்தகைய ஆதிக்கத்தை பெற முடியவில்லை என்பதால் இந்தப் புகார், வழக்கு. விளம்பர முதலாளிகளுக்கும், தொலைக்காட்சி முதலாளிகளுக்கும் இடையே இருக்கும் முரண்பாட்டின் வெளிப்பாடுதான் இந்த வழக்கு. மற்றபடி இந்த வழக்கில் நீதி, நேர்மை, நியாயம், அறம் என்பதெல்லாம் மாயை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக