வியாழன், 29 நவம்பர், 2012

ஜெயலலிதா - ஜெகதீஷ் ஷெட்டர் பேச்சுவார்ததை தோல்வி தண்ணீர் தர கர்நாடக அரசு மீண்டும் மறுப்பு

பெங்களூரு: காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக இரு மாநில முதல்வர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. உச்சநீதிமன்ற ஆலோசனைப்படி காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு மேற்கொள்ள கர்நாடக மற்றும் தமிழக முதல்வர்கள் இன்று பெங்களூருவில் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் நிமிடம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் இரு மாநில அரசுகளுக்கு இடையே எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்த பேச்சுவார்த்தையும் தோல்வி முடிவடைந்ததால் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்திருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பின்பு செய்தியாளர்களை சந்தித்து கூறினார்.


காவிரி பாசன மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி பற்றி ஜெயலலிதா விளக்கம்

இந்த பேச்சுவார்த்தையின் போது, காவிரி பாசன மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரிடம் விளக்கினார். கர்நாடகம் தண்ணீர் தந்தால் மட்டுமே சம்பா நெற்பயிர்களை காப்பாற்ற முடியும் என்று ஷெட்டரிடம் கூறிய ஜெயலலிதா, இன்னும் 65 நாட்களுக்கு கட்டாயம் தண்ணீர் தேவை என்று கூறியுனார். தொடர்ந்து ஷெட்டரிடம் பேசிய ஜெயலலிதா, குறைந்தது 15 நாட்களுக்காவது 30 டி.எம்.சி தண்ணீரை விடுமாறு கோரிக்கை விடுத்தார். அதுமட்டுமின்றி மேட்டூர் அணையின் நிலவரத்தையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஷெட்டரிடம் விளக்கி கூறினார். அப்போது 'மேட்டூர் அணையிலுள்ள 16 டி.எம்.சி.யில் 5 டி.எம்.சி குடிநீர் தேவைக்கானது, 5 டி.எம்.சி மீன்கள் உயிர்வாழ இருப்பு வைக்க வேண்டும், எஞ்சிய 6 டி.எம்.சி நீரை மட்டுமே பாசனத்துக்கு பயன்படுத்த முடியும்' என்று ஜெயலலிதா ஷெட்டரிடம் கூறினார்.

கர்நாடக மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் விளக்கம்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கருத்தை கேட்ட பிறகு பேசிய கர்நாடக மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், கர்நாடக அணைகளில் 30 டி.எம்.சி. மட்டும் தான் நீர் இருப்பு உள்ளது என்று கூறினார். பெங்களூர் மற்றும் இதர நகரங்களின் குடிநீர் தேவைக்கு 20 டி.எம்.சி தண்ணீர் தேவை என்று ஜெயலலிதாவிடம் கூறிய ஷெட்டர், எஞ்சியுள்ள 10 டி.எம்.சி. கர்நாடகத்தில் சாகுபடி செய்துள்ள பயிருக்கே போதாது என்று விளக்கம் அளித்தார். கர்நாடகத்துக்கே போதாது என்ற நிலையில் தமிழகத்துக்கு நீர தர வாய்ப்பில்லை என்று ஷெட்டர் ஜெயலலிதாவிடம் தெரிவித்தார்.

கர்நாடகத்தின் யோசனையை ஜெ ஏற்கவில்லை : ஷெட்டர் புகார்

பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், 'தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீர் கூட தர முடியாது' என்று தான் கூறவில்லை என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், சென்னைக்கு வந்து நீர் தேவை குறித்து பேசலாம் என்று ஜெயலலிதாவிடம் கூறியதாக விளக்கம் அளித்தார். மேலும் கர்நாடகத்தின் யோசனையை ஜெயலலிதா ஏற்க மறுத்து விட்டதாக ஷெட்டர் ஜெயலலிதா மீது குற்றம்சாட்டினார்.

மீண்டும் உச்சநீதிமன்றம் செல்ல ஜெயலலிதா முடிவு

பேச்சுவார்த்தையும் தோல்வி முடிவடைந்ததால் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்திருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பின்பு செய்தியாளர்களை சந்தித்து கூறினார். தொடர்ந்து பேசிய அவர், உச்சநீதிமன்றம் கூறியதால் பேச்சு நடத்தியாக கூறினார். மேலும் ஷெட்டருடன் நடத்திய பேச்சு விவரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று ஜெயலலிதா கூறினார்.http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=37219

கருத்துகள் இல்லை: