புதன், 28 நவம்பர், 2012

எம்.ஜி.ஆர், கண்ணதாசன் – சத்தியராஜ், மணிவண்ணன் – பாக்கியராஜ், சேரன் – பாலா; இவர்களில்…?



தேவர் மகன், சின்னக் கவுண்டர் போன்று சாதி பெயர்களிலும் ஆதிக்க சாதிகளை ஆதரித்தும் படம் வந்திருக்கிறதே?
-கு. அர்சுனன், விழுப்புரம்.
அது மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட மக்களை புறக்கணிக்கிற அவமானப்படுத்துகிற சினிமாக்களாகவும் அவைகள் இருக்கின்றன.
இதுபோன்ற மோசடிகளை அந்த குறிப்பிட்ட ஆதிக்க ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, முற்போக்காளர்களாக அறியப்படுகிற இயக்குநர்களும் செய்திருக்கிறார்கள்.
பகுத்தறிவு மற்றும் இஸ்லாமியர்களை முன்னிலைப்படுத்திய திராவிட இயக்க சினிமா, தாழ்த்தப்பட்டவர்களை முன்னிலைப் படுத்தவில்லை.
அண்ணா, கலைஞர் போன்றவர்களின் சினிமாக்களில் வந்த கதாநாயகன், பகுத்தறிவாளனாக, முற்போக்காளனாக  இருந்தாலும் அவன் பார்ப்பனரல்லாத உயர்ஜாதிக்காரனாகத்தான் இருந்தான். அதிலும் குறிப்பாக பிள்ளை, முதலி போன்ற ஜாதிகளில் இருந்தே.
இதில் ஒரே ஆறுதல், அந்த ஜாதிகளைப் பிரதிநிதித்துவபடுத்தாததும், அந்த ஜாதிக்குள் இருந்தே வில்லனை காட்டியதும்தான்.
‘மதுரைவீரன்’ தாழ்த்தப்பட்ட சமூகத்தில் ஒரு பிரிவான அருந்ததியர்கள் வழிபடும் கடவுள்.
மதுரைவீரனின் கதை சினிமாவாக மாறியபோது, அதில் ‘மதுரைவீரன் பிறப்பால் அருந்ததியர் இல்லை, அவரை அருந்ததியர்கள் (சினிமாவில் என்.எஸ். கிருஷ்ணன்-மதுரம்) எடுத்து வளர்த்தார்கள்’ என்று உல்டா செய்தார்கள்.

அந்தப் படத்தில் திராவிட இயக்கத்தை சேர்ந்த எம்.ஜி.ஆர்., மதுரைவீரனாகவும், அப்போது திராவிட இயக்கத்தில் இருந்த, கண்ணதாசன் வசன கர்த்தாவாகவும் பங்காற்றி இருந்தார்கள்.
இதுபோன்றே, சமீபகாலத்தில் சினிமாவில் முற்போக்காளர்களாக அறியப்படும் இயக்குனர் மணிவண்ணன், சத்தியராஜ் இணைந்து உருவாக்கிய ‘ஆண்டான் – அடிமை’ படத்திலும் செருப்பு தைக்கும் அருந்ததியர் குடும்பத்தில் வளரும் கதாநாயகன் சத்தியராஜ், பிறப்பால் ஒரு பார்ப்பனர் அவரை அருந்ததியர்கள் எடுத்து வளர்த்தார்கள் என்றுதான் வந்தது.
பாலாவின் பிதாமகனில் ‘ஒரு பெண் சுடுகாட்டில் குழந்தையை விட்டுவிட்டு போகிறாள், அதனால்தான் விக்ரம் பிணம் எரிக்கும் வேலை பார்த்தார். மற்றபடி அவர் பிறப்பால் தாழ்த்தப்பட்டவர் இல்லை’ என்று காட்டப்பட்டது.
மிக நல்லவன், மிகத் திறமையானவன், நன்றாக ஆடுவான், பாடுவான், அறிவாளி, அழகன், அநீதியை தட்டிக் கேட்பவன் இதெல்லாம் கதாநாயகனுக்கான சிறப்புகளாக சித்தரிக்கப்படுகிறது. இந்த சிறப்புகளைப் போலவே கதாநாயகன் ஆதிக்க ஜாதியை சேர்ந்தவன் என்பதும் அவனுக்கான ‘சிறப்பாகவே’ காட்டப்படுகிறது.
ஜாதி ரீதியாக சக்கிலியராகவோ, பறையறாகவோ, பள்ளராகவோ கதாநாயகன் இருந்தால் ‘காதநாயக அந்தஸ்துக்கு இழுக்கு’ என்று ‘படைப்பாளர்கள்’ கருதுவதுதான் காரணம்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் இயக்குநராக வந்தால் அவரும் இதுபோன்ற முறையில்தான் படம் எடுக்கவேண்டும் என்று ஒரு ‘நியதி’ நிறுவப்பட்டிருக்கிறது. ஏனென்றால், படம் பார்க்கிற மிகப் பெருபான்மையான ‘ஜாதி இந்துக்கள்’ அல்லது தலித் அல்லாதவர்கள் அந்தப் படத்தை புறக்கணித்துவிடுவார்கள் என்பதும் அதற்குக் காரணமாக கருதப்படுகிறது.
இதில் வேடிக்கை, இன்று முன்னணியில் இருக்கிற மிகப் பெரிய கதாநாயகர்கள் பலர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்தான். ஆனால், படத்தில் அவர்கள் ஆதிக்க ஜாதியை சேர்ந்தவர்களாகத்தான் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
மாறாக, அவர்கள் தங்களை தலித்தாக அடையாளம் காட்டிக் கொண்டால், தங்களின் கதாநாயக அந்தஸ்து தகர்ந்துவிடும் என்று அவர்கள் கருதுவதால்தான், தான் தலித் என்பதையும் மறைக்க முயற்சிக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாகவே தன்னுடைய கிறிஸ்துவ மத அடையாளத்தையும் மறைத்துக் கொள்கிறார்கள்.
எனக்கு தெரிந்து, தமிழ் சினிமாவில், கதாநாயகன் தாழ்தத்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவராக காட்டியது  கே. பாக்கியராஜின் இது நம்ம ஆளு, சேரனின் பாரதி கண்ணமா இந்த இரண்டு படகள்தான். இவைகள் இரண்டும் மிகப் பெரிய வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இரண்டுபேரும் ‘ஜாதி மறுப்பு, பெரியார், அம்பேத்கர், தமிழ்த் தேசியம்’ என்று பேசுகிற முற்போக்காளர்கள் இல்லை.
இந்த இரண்டு படங்களில் பாக்கியராஜின் இது நமம ஆளு படத்தை தான் சிறந்த படமாக கருதுகிறேன். சேரனின் பாரதி கண்ணமாவில் தேவர் வீட்டுப் பெண் தாழ்த்தப்பட்டவரை காதலிப்பதாக காட்டுகிற துணிச்சல் இருந்தாலும்,(இதற்காக அந்தப் படத்திற்கு எதிர்ப்பு வந்தது)
அதற்கு பரிகாரம் செய்வதைப்போல், தேவர் ஜாதிக்கார்கள் இந்த மண்ணின் மைந்தர்களாகவும், தாழ்த்தப்பட்டவர்கள் அவர்களை நம்பி வேறு எங்கிருந்தோ பஞ்சம் பிழைக்க வந்வர்களாகவும் மிக மோசமான கருத்து பதிவு செய்யப்பட்டது.
ஆனால், பாக்கியராஜின் ‘இது நமம ஆளு’ படத்தில் தாழ்த்தப்பட்டர்களுக்கு சவரம் செய்கிற நாவிதர்தான் கதாநாயகன்.

கருத்துகள் இல்லை: