செவ்வாய், 27 நவம்பர், 2012

FDI: BJP யின் ஆட்சிக்கவிழ்ப்பு தந்திரம் பலிக்காது! கலைஞர் திட்டவட்டம்

ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கத்துடன் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த பாஜக கோருவதால்தான் அரசை ஆதரிக்க திமுக முடிவு செய்தது என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்திருக்கிறார்.
சென்னையில் இன்று கருணாநிதி நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்:
செய்தியாளர்: சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு பற்றி உங்கள் அறிக்கை கிடைத்தது. மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை திடீரென்று தாங்கள் ஆதரவளிக்க என்ன நெருக்கடி? என்ன நிர்பந்தம்?
கருணாநிதி: உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் என்னுடைய அறிக்கையிலே தெளிவாக இருக்கிறது.
செய்தியாளர்: ஆதரவு தரமாட்டோம் என்பதுபோல ஏற்கெனவே பல முறை சொல்லியிருந்தீர்களே?
கருணாநிதி: வாக்கெடுப்போடு கூடிய விவாதம் தேவை என்று பாஜக போன்ற கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்துவது எப்படியாவது ஆட்சி மாற்றம் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டது என்பதை நான்கு நாட்களாக நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்ற கூச்சல், குழப்பத்தையும் பிடிவாதமாக வாக்கெடுப்பு என்று பாஜக போன்ற கட்சிகள் வற்புறுத்துவதையும் பார்க்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது. அதைப் புரிந்து கொண்டுதான் இந்த முடிவை எடுக்க நேரிட்டது என்றார் அவர். http://tamil.oneindia.in/

காங்கிரஸ் நன்றி
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் மத்திய அரசுக்கு தி.மு.க. தனது ஆதரவைத் தெரிவிப்பதாக கருணாநிதி அறிவித்துள்ளதற்கு காங்கிரஸ் கட்சி நன்றி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் வெளியிட்ட அறிக்கையில்,
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்பது எந்த வகையிலும் சிறு வியாபாரிகளை பாதிக்காது என்ற உறுதிமொழியை மத்திய அரசு பலமுறை அளித்துள்ளது. எந்தக் காலக்கட்டத்திலும் அன்னிய முதலீட்டால் சிறு வியாபாரிகள் பாதிப்படைய மாட்டார்கள் என்பது ஒருபக்கம் இருக்க, எந்த மாநிலம் தேவை என கருதுகிறதோ, அந்த மாநில அரசு அமல்படுத்திட வசதியான கொள்கை முடிவை மத்திய அரசு வகுத்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் வாக்கெடுப்பு வந்தால் அந்த வாக்கெடுப்புக்கு எதிராகவும், மைய அரசுக்கு ஆதரவாகவும் திராவிட முன்னேற்ற கழகம் வாக்களிக்கும் என்று கருணாநிதி அறிவித்திருப்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கருணாநிதியின் இந்த அறிவிப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறது, நன்றி தெரிவிக்கிறது என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: