புதன், 28 நவம்பர், 2012

உங்கள் காசு உங்கள் கையில்! காங்கிரஸ் அதிரடி திட்டத்துடன் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிறது

 Aap Ka Paisa Aap Ke Haath Cong

ஆப் கா பைசா.. ஆப் கே ஹாத்'': அதிரடி திட்டத்துடன் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் காங்கிரஸ்!
டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வரும் காங்கிரஸ் தனது தேர்தல் அதிரடித் திட்டமான 29 நலத் திட்டங்களுக்கான உதவித் தொகைகளை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கிலேயே டெபாசிட் செய்யும் திட்டத்தை வரும் ஜனவரி 1ம் தேதி அமலாக்கவுள்ளது.
முதல் கட்டமாக 51 மாவட்டங்களில் இந்தத் திட்டம் அமலாக்கப்படவுள்ளது.
மத்திய அரசு அமல்படுத்தி வரும் நலத் திட்டங்களுக்கான உதவித் தொகை, உணவு, உரம் போன்றவற்றுக்கான மானியத் தொகைகள் நேரடியாக அதன் பயனாளிகளிடம் போய்ச் சேரும் வகையில் இந்தத் திட்டம் அமையும். இந்தத் திட்டத்தால் பயன் பெறும் பொது மக்களின் வங்கி கணக்குகிலேயே இந்தப் பணத்தை மத்திய அரசு டெபாசிட் செய்துவிடும். உங்கள் காசு உங்கள் கையில்

தேசிய அடையாள அட்டையான 'ஆதார்' அட்டையின் அடிப்படையில் இந்தத் திட்டம் அமலாக்கப்படவுள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:
நாடு முழுவதும் மத்திய அரசு 42 நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இவற்றில், முதல்கட்டமாக கல்வி உதவித் தொகை உள்ளிட்ட 29 நலத்திட்டங்களுக்கான உதவித் தொகை, பயனாளிகளுக்கு நேரடியாக போய்ச் சேரும் வகையில், ‘நேரடி ரொக்க மாற்று திட்டம்' அமல்படுத்தப்படும்.
நாடு முழுவதும் 16 மாநிலங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட 51 மாவட்டங்களில் ஜனவரி 1ம் தேதி இத்திட்டம் அமல்படுத்தப்படும்.
மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமயமாக்கல் அமைச்சகம், மனிதவள மேம்பாட்டுத்துறை, சிறுபான்மையினர் நலத்துறைம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சுகாதாரத்துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட அமைச்சகங்கள் அமல்படுத்தி வரும் நலத்திட்டங்களின் உதவித் தொகைகள் இந்தத் திட்டத்தின் கீழ் நேரடியாக மக்களின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படும்.
மொத்தத்தில் 42 நலத் திட்டங்களின் உதவித் தொகைகளை இத் திட்டத்தின் கீழ் மக்கள் நேரடியாக தங்களது வங்கிக் கணக்கில் பெறலாம்.
இந்தத் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் மேலும் பல மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்படும். அடுத்த ஆண்டு இறுதிக்குள், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு விடும்.
‘ஆதார்' அட்டையுடன் இணைந்த பயனாளிகளின் வங்கி கணக்கில் இந்த உதவித்தொகை நேரடியாக செலுத்தப்பட்டு விடும்.
வங்கி கணக்கை இயக்குபவராக வங்கி ஏஜெண்டுகள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் கையடக்க ஏ.டி.எம். எந்திரம் வைத்திருப்பார்கள். அந்த ஏ.டி.எம். மூலமாக பயனாளிகள் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். வங்கி கிளை மூலமாகவும் இப்பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
சுய உதவிக் குழுக்கள், தொடக்க கூட்டுறவு சங்கங்கள் போன்ற அமைப்புகள், கையடக்க ஏ.டி.எம். எந்திரத்தை இயக்க முடிந்தால், அவையும் இந்த திட்டத்தில் வினியோகஸ்தராக சேர்ந்து கொள்ளலாம்.
‘நேரடி ரொக்க மாற்று திட்டம்' அமல்படுத்தப்பட உள்ள 51 மாவட்டங்களில் 80 சதவீதம் பேருக்கு ‘ஆதார்' அட்டைகள் வழங்கப்பட்டுவிட்டதாக நம்புகிறோம். அவர்களின் பெயர் பட்டியல், அந்தந்த பகுதி வங்கிகளிடம் ஒப்படைக்கப்படும்.
டிசம்பர் 31ம் தேதிக்குள், சுமார் 95 சதவீதம் பேருக்கு ‘ஆதார்' அட்டைகள் வழங்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஆரம்பத்தில் உதவித் தொகைகளும், பின்னர் அடுத்த கட்டமாக மானியத் தொகைகளும் மக்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும். உணவுப் பொருட்கள், உரம், பெட்ரோலியப் பொருட்கள் போன்றவற்றுக்கு வழங்கப்படும் மானியங்களும் இதில் அடங்கும்.
தேர்தலுக்கு லஞ்சமா?:
நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வர இருப்பதால், லஞ்சம் கொடுப்பதுபோல இத்திட்டத்தை ஆரம்பிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இது அபத்தமான வாதம். இதைவிட கடுமையான வார்த்தை இருக்க முடியாது. வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். பொறுப்பின்றி குற்றம் சாட்டக்கூடாது.
தேர்தலுக்கும், இத்திட்டத்துக்கும் சம்பந்தம் இல்லை. தேர்தல் வரும், போகும். அரசு வரும், போகும். ஆனால், இது நீடித்த பயன் தரும் திட்டம் என்றார் ப.சிதம்பரம்.
''ஆப் கா பைசா.. ஆப் கே ஹாத்'':
பேட்டியின்போது உடனிருந்த மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படியே இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது. ''Aap ka paisa, aap ke haath'' (உங்கள் பணம் உங்கள் கையில்- your money in your hands) இது தான் காங்கிரசின் மந்திரம் என்றார்.
''காங்கிரஸ் கா ஹாத்.. ஆம் ஆத்மி கே சாத்'' (காங்கிரசின் கை எப்போதும் சாதாரண மக்களுடன்) என்று கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக கோஷத்தை உருவாக்கித் தந்து வெற்றியும் தேடித் தந்தவர் ஜெய்ராம் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: