ஹைதராபாத்:
ஆந்திர மாநிலத்தில் 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜெகன்மோகன்
ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி
ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
ஆந்திரப் பிரதேசம்,
மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தற்போதைய
முதல்வர்களான கிரண்குமார் ரெட்டி, பிரித்விராஜ் சவான் மற்றும் அசோக் கெலாட்
ஆகியோரது செயல்பாடுகள் 2014-ம் ஆண்டு தேர்தலுக்கு எப்படி கை கொடுக்கும்
என்று காங்கிரஸ் மேலிடம் ஆராய்ந்து வருகிறது.இதில் ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் வளர்ச்சியை தற்போதைய முதல்வர் கிரண்குமார் ரெட்டியால் தடுக்க முடியவில்லை என்பது வெளிப்படையானது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தற்போது ஜெகன்மோகன் ரெட்டி சிறையில் இருக்கிறார். கடந்த ஜூலை 4-ந் தேதி பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்த ஜெகனின் அம்மா விஜயலட்சுமி சிபிஐ பற்றி புகார் தெரிவித்திருந்தார்.
இந்த சந்திப்பைத் தொடர்பு காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் விஜயலட்சுமி சந்தித்தார் என்று காங்கிரஸ் தரப்பு சொல்கிறது. ஆனால் ஜெகன்மோகன் தரப்பு இதை முற்றாக நிராகரித்திருக்கிறது. தமது கட்சி தொண்டர்களை சோர்வடைய செய்வதற்காகவே காங்கிரஸ் இத்தகைய வதந்திகளைப் பரப்பிவிடுகிறது என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆனாலும் ஜெகனிடம் தோற்றுப் போன காங்கிரஸ் கட்சியினர் எப்படியும் ஜெகன் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பிவிடுவார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸின் பிரணாப் முகர்ஜியை ஜெகன் ஆதரித்ததை சுட்டிக்காட்டி தமது வாதத்துக்கு வலு சேர்க்கிறது காங்கிரஸ் தரப்பு. ஆனால் ஜெகன் தரப்போ, மறைந்த ராஜசேகர ரெட்டி எப்போதும் பாஜகவுக்கு ஆதரவாக நடந்து கொண்டது. அவரது கொள்கையே மதச்சார்பற்ற கொள்கைதான். அதையேதான் ஜெகனும் கடைபிடிக்கிறார். அதற்காகத்தான் மதச்சார்பற்ற அணியின் வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை ஆதரித்தார் என்கிறது. அதே நேரத்தில் தேசிய அரசியலில் கவனம் செலுத்துவதைவிட மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை வலுப்படுத்துவதுதான் தங்களது கட்சியின் முக்கிய நோக்கம் என்றும் ஜெகன் தரப்பினர் கூறுகின்றனர்.
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து 33 எம்.பி.க்கள் இருக்கின்றனர். ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் ஜெகன் மோகனின் ஆதரவாளர்கள் என்பதால் வேறுவழியே இல்லாமல் காங்கிரஸ் தமது வியூகத்தை ஜெகனை வைத்தே தொடங்கத் திட்டமிட்டிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக