மக்கள் ஆதரவை கிட்டத்தட்ட முழுமையாகவே இழந்து
விட்டார் அன்னா ஹசாரே. அடுத்தடுத்து அவரது குழுவினர் செய்த தவறுகள்,
குழப்பங்கள் காரணமாக மக்களின் நம்பிக்கையை இக்குழு இழந்து விட்டது. இதனால்
அடுத்து என்ன செய்வது என்பது குறித்து ஆழ்ந்து யோசிக்காமல் அரசியல்
பிரவேசம் என்ற மிகப் பெரிய தவறான முடிவை எடுத்து விட்டார்கள்.
இது
மக்களிடையே மட்டுமல்லாமல், அன்னாவின் ஆதரவாளர்களிடமே பெரும் அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளது.ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் மூலம் அன்னா ஹசாரே முதல் முறையாக போராட களம் இறங்கியபோது இதோ இன்னொரு காந்தி வந்து விட்டார் என்றுதான் மக்கள் பேசினார்கள். மகாத்மா காந்தியைக் கூட சற்று காலத்திற்கு மக்கள் மறந்து போய் விடும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் அன்னா படம்தான், பேனர்கள்தான்.
நாட்டு மக்களிடையே விஸ்வரூபம் எடுத்து நின்றார் அன்னா ஹசாரே. சுதந்திரப் போராட்டத்தின்போது மட்டுமே இப்படி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே உணர்வுடன், போராட்ட குணத்துடன் மக்கள் இருந்தனர். அதன் பிறகு இப்போதுதான் அப்படிப்பட்ட ஒரு ஒருமித்த உணர்வை அன்னாவின் போராட்டத்தின் மூலம் காண முடிவதாக மீடியா செய்திகளில் அன்னா புகழப்பட்டார்.
டெல்லியில் அவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் இருந்தபோது மக்கள் கூட்டம் அலை மோதியது. அதற்கு முன்புஅவர் கைது செய்யப்பட்டபோது டெல்லியே ஸ்தம்பித்துப் போனது. நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
ஆனால் இன்று நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது. அன்னாவின் போராட்டம் மக்களிடையே ஆர்வத்தை எழுப்பவில்லை. மும்பையில் முதல் தோல்வியைச் சந்தித்தார் அன்னா. அங்கு அவர் உண்ணாவிரதம் இருந்தபோது அதற்கு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை. தற்போது டெல்லியில் ஜந்தர்மந்தரில் அன்னா குழுவினர் உண்ணாவிரதம் இருந்தபோதும் ஆதரவு கிட்டவில்லை. அன்னாவே உட்கார்ந்தபோதும் எதிர்பார்த்த ஆதரவு திரளவில்லை.
இந்த நிலையில்தான் அன்னா அரசியல் பிரவேசம் என்ற அதிரடி முடிவை எடுத்துள்ளார். ஆனால் இது தற்கொலை முடிவுக்குச் சமம் என்கிறார்கள் அன்னாவை அறிந்தவர்கள்.
உண்மையி்ல் ஊழல், லஞ்சத்துக்கு எதிரான போராட்டமாகத்தான் அன்னாவின் குழுவினர் களத்திற்கு வந்தனர். ஜன் லோக்பால் மசோதாதான் அவர்களது முக்கிய இலக்கும் கூட. ஆனால் இவர்களது போராட்டம் காங்கிரஸ் கட்சியை மட்டுமே குறி வைத்து நடந்து வந்ததுதான் இவர்கள் செய்த முதல் தப்பு.
பிரதமரையும், காங்கிரஸ் தலைவர்களையும், மத்திய அமைச்சர்களையும் குறி வைத்து தொடர்ந்து தாக்கிப் பேசி வந்ததாலும், பிரசாரம் செய்து வந்ததாலும், நாடாளுமன்றத்தை கடுமையாக தாக்கிப் பேசியதாலும், எங்களை விட நாடாளுமன்றம் ஒன்றும் உயர்ந்ததில்லை என்ற கடுமையான வார்த்தைப் பிரயோகத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாலும் மக்களிடம் இவர்கள் மீது அதிருப்தியே ஏற்பட்டது.
கர்நாடகத்தி்ல எதியூரப்பா மீதும், அவரது கட்சியினர் மீதும் மிகப் பெரிய ஊழல் புகார்கள் வெடித்தபோதெல்லாம் அதற்காக அன்னா குழுவினர் யாரும் போராட வரவில்லை. எதியூரப்பாவின் ஊழல் குறித்து யாரும் பேசக் கூட இல்லை. இதுகுறித்து அன்னா ஹசாரே ஒரு கருத்தைக் கூட சொன்னதில்லை. முழுக்க முழுக்க காங்கிரஸை மட்டுமே எதிர்த்து வந்தார்கள் அன்னாவும் அவரது குழுவினரும்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தி்ல கூட காங்கிரஸைக் குற்றம் சாட்டிப் பேசி வந்தார்களே தவிர திமுகவுக்கு எதிராகவோ அல்லது ராசாவுக்கு எதிராக போராட அவர்கள் சென்னை பக்கம் வரவில்லை.
அதேபோல சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக இவர்கள் ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை.
இதனால் இந்த அன்னா ஹசாரே குழுவின் நோக்கமே காங்கிரசுக்கு எதிராக அரசியல் செய்வது என்பதாகிவிட்டது.
இப்போது மக்களிடையே அன்னா குழுவினர் மீதான நம்பிக்கை முற்றிலும் போய் விட்டது என்பதே உண்மை. இதற்கும் கூட முழுக்க முழுக்க அன்னா குழுவில் உள்ள உறுப்பினர்களே காரணம். கிரண் பேடி மீதான பல்வேறு சர்ச்சைப் புகார்கள், அரவிந்த் கேஜ்ரிவால் மீதான புகார்கள் என சரமாரியாக புகார்கள் வந்தபோது அன்னா என்ன செய்திருக்க வேண்டும், அவர்களை அதிரடியாக நீக்கி தான் பாரபட்சமற்றவன் என்பதை நிரூபித்திருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை.
நீதிபதி சந்தோஷ் ஹெக்டே போன்றோரின் கருத்துக்களுக்கு அன்னா குழுவினர் யாருமே மதிப்பு அளிப்பதில்லை. இதனால் அவர் கெளரவமாக ஒதுங்கிக் கொண்டார். பல்வேறு கருத்துக்களையும் கேட்டு ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்குப் பின்னர் நல்ல முடிவுக்கு வருதுதான் ஒரு வெற்றிகரமான இயக்கத்தின் வெற்றி ரகசியம். ஆனால் அன்னா குழுவில் அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை.
இப்போது மக்கள் செல்வாக்கை இழந்துள்ள நிலையில் அரசியல் பிரவேசம் என்ற தவறான முடிவுக்கு அன்னா வந்திருப்பது அவருக்கான ஆதரவு பலத்தை மேலும் மோசமாக செயலிழக்க வைக்கவே வகை செய்யும் என்கிறார்கள் அன்னாவின் போராட்ட வியூகம் குறித்து அறிந்தவர்கள்.
அரசியல் களங்கப்பட்டிருக்கிறது, அரசியல்வாதிகள் சரியில்ல, நாடாளுமன்றம் மோசமாக உள்ளது என்று கூறி விட்டு இப்போதே அதே அரசியலில் அன்னாவும் காலடி எடுத்து வைப்பது நிச்சயம் புதிய பாதையாக இருக்க முடியாது, தடம் மாறிய பாதையாகவே இருக்க முடியும்.
ஒருவேளை அரசியல் பிரவேசம் என்று அன்னா குழுவினர் தீர்மானித்து விட்டால், அதில் உறுதியாக இருந்தால் அவர்கள் யாரை எதிர்த்து அரசியல் செய்வார்கள்... காங்கிரஸை மட்டுமேவா அல்லது மற்றவர்களையும் எதிர்ப்பார்களா.
அத்வானிக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்துவார்களா, ஜெயலலிதாவுக்கு எதிராக நிறுத்துவார்களா, எதியூரப்பாவை எதிர்த்து கடுமையாக பிரசாரம் செய்வார்களா, ராசாவை எதிர்த்து வெறித்தனமாக உழைப்பார்களா..
காங்கிரஸை மட்டுமே எதிர்ப்போம் என்று கூறிக் கொண்டு அரசியல் களத்தில் அன்னா ஹசாரேவும் அவரது கட்சியினரும் களம் இறங்கினால் அது மக்களை முட்டாளாக்கும் வேலையாகவே அமையும். காங்கிரஸ் மட்டும்தான் ஊழல் செய்கிறது, மற்றவர்களெல்லாம் ஒழுக்க சீலர்கள் என்பது போல இவர்கள் சொன்னால் அது அவர்களின் பெரிய முட்டாள்தனமாகவே முடியும்.
மக்கள் வெறுக்க ஆரம்பித்து விட்ட நிலையில் அவர்களிடமிருந்து தப்பி அரசியலுக்குப் போவது என்பது புலி வாலைப் பிடித்த நாயர் கதைதான் என்பதை ஹசாரே குழுவினர் புரிந்து கொண்டால் சரி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக