வியாழன், 2 ஆகஸ்ட், 2012

Mulayam: உ.பி.,யில் மகன் அகிலேஷ் ஆட்சி சுகப்படவில்லை

லக்னோ: ""அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு, கடந்த ஐந்து மாதங்களில் சரியாகச் செயல்படவில்லை. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டவில்லை'' என, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் விமர்சித்துள்ளார். தன் மகன் தலைமையிலான அரசை, முலாயம் சிங், வெளிப்படையாக விமர்சித்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி.,யில், முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ், தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. டில்லி அரசியலில் முக்கிய பங்காற்ற வேண்டியிருப்பதால், தன் மகன் அகிலேஷை, முதல்வர் பதவியில் அமர்த்தினார், முலாயம்.


அதிருப்தி: இந்நிலையில், கடந்த ஐந்து மாத கால, சமாஜ்வாதி ஆட்சி குறித்து, அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன், முலாயம் சிங் யாதவ், நேற்று லக்னோவில் ஆலோசனை நடத்தினார். அப்போது, அமைச்சர்கள் சரியாகச் செயல்படவில்லை என, அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் கூறியுள்ளதாவது: சமாஜ்வாதி அரசின் கடந்த ஐந்து மாத கால செயல்பாடுகள், சொல்லிக் கொள்ளும்படி இல்லை. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டவில்லை. கடந்த சட்டசபைத் தேர்தலின்போது, மக்களுக்கு என்ன வாக்குறுதி அளித்தோமோ, அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இந்த விஷயத்தில், உறுதியுடன் செயல்பட வேண்டும். மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

கெட்ட பெயர் வரும்: இந்த விஷயத்தில், அமைச்சர்களும், தீவிரமாக பணியாற்ற வேண்டும். இன்னும் இரண்டு ஆண்டுகளில், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இதை, நாம் மனதில் கொண்டு செயலாற்ற வேண்டும். மக்களுக்கு முடிந்த அளவு, பணியாற்ற வேண்டும். அமைச்சர்கள் சிலர், தங்களுக்குள் வெளிப்படையாக விமர்சித்து வருவது, கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும். இவ்வாறு முலாயம் சிங் யாதவ் கூறினார். முலாயமின், இந்த வெளிப்படையான விமர்சனம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து, அகிலேஷ் யாதவ் கூறுகையில்,"முலாயம் சிங் யாதவ், எங்கள் கட்சியின் தலைவர். அவரின் விமர்சனத்தை ஏற்றுக் கொள்கிறோம். அவரின் ஆலோசனைகளை பின்பற்றுவோம்' என்றார்.

கருத்துகள் இல்லை: