சென்னை: 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற
திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதல்வர்
ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,திருநங்கையர்களை சமுதாய நீரோட்டத்தில் கொண்டு வரும் வகையிலும், அவர்கள் சமுதாய மற்றும் பொருளாதார ஏற்றம் பெற ஏதுவாகவும், 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கையர்களின் நலனுக்காக "ஆதரவற்ற திருநங்கையர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்'' என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின்படி, 40 வயதிற்கு மேற்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள திருநங்கையர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஓய்வூதியமாக 1,000 ரூபாய் வழங்கப்படும். இதற்காக 1 கோடியே 17 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தைகள் வருவதை அதிகரிக்க புதிய திட்டம்
தமிழக அரசு வெளியிட்டுள்ள இன்னொரு செய்திக் குறிப்பில், ஜனநாயகத்தின் நாளைய தூண்களாக விளங்க உள்ள குழந்தைகள் சிறந்த ஊட்டச்சத்துடன் வளர்க்கப்பட்டால் தான், அவர்கள் வருங்காலத்தில் இந்த நாட்டை நன்முறையில் வழிநடத்திச் செல்லும் வலிமை மிக்க தலைமுறையினராக உருவெடுப்பார்கள். இந்த நோக்கத்தை எய்தும் பொருட்டு உருவாக்கப்பட்டவை தான் அங்கன்வாடி மையங்கள்.
புகையில்லா சமையல் அறை இந்த மையங்களில், இணை உணவு, சமைக்கப்பட்ட சூடான மதிய உணவு, முட்டை, ஆகியவற்றுடன் பள்ளிசாரா முன்பருவக் கல்வியும் அளிக்கப்படுகின்றன. மேலும், இந்த மையங்களில் கர்ப்பிணி பெண்கள், வளர் இளம் பெண்கள், முதியோர்கள் ஆகியோருக்கு புரதசத்து மிக்க, சத்தான, சூடான, மதிய உணவு வருடத்தில் 365 நாட்களும் வழங்கப்படுகின்றன.
தற்பொழுது தமிழகம் முழுவதிலும் உள்ள 54,439 அங்கன்வாடி மையங்களுக்கு தினந்தோறும் 31 லட்சம் பயனாளிகள் வருகை புரிகின்றனர். இந்தியாவிலே தமிழகத்தில் மட்டும் தான், ஓய்வூதியம் பெறும் முதியோருக்கு சமைக்கப்பட்ட சூடான, மதிய உணவு அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படுகிறது.
இந்த மையங்களுக்கு அதிக அளவில் குழந்தைகள் ஊட்டச்சத்து உணவை பெறுவதற்காகவும், 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் பள்ளிசாரா முன்பருவக் கல்வி பெறுவதற்காகவும் வருகை புரிவதை ஊக்குவிக்கும் பொருட்டு, 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இரண்டு வண்ண உடைகள் இந்த ஆண்டு முதல் வழங்கப்படும் முன்னோடித் திட்டத்தை தொடக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள்.
முதற்கட்டமாக, சென்னை, வேலூர், திருச்சிராப்பள்ளி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 2,01,032 குழந்தைகள் பயனடையும் வகையில் 4 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் இந்த திட்டத்தை அமல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக