மக்களுக்காக வாஜ்பாய் கொண்டு வந்த தங்க நாற்கார சாலை
திட்டம்..அந்த திட்டத்தின் மூலம் மக்கள் பயன் அடைந்ததை விட,அந்த
திட்டத்தின் மூலம் குறுக்கு வழியில் Toll gate contract விட்டதன் மூலம்
பலன் அடைந்தவர்கள் அதிகம்..
சுங்கச் சாவடி மையங்களில், கூடுதல் சுங்கக் கட்டணம் வசூலிப்பதால், லாரி
உரிமையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு தீர்வு
காணும் வகையில், சீரான சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என, லாரி
உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலையை பராமரிக்கும் உரிமம், மத்திய தரை வழி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்தால் வழங்கப் படுகிறது. உரிமம் பெறும் தனியார் நிறுவனத்தினர், தேசிய நெடுஞ்சாலையை பராமரிக்கின்றனர். இவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சாலையில் பயணிக்க, வாகனங்களுக்கு தகுந்தாற் போல் கட்டணமும் நிர்ணயம் செய்கின்றனர்.
இங்கு அதிகம்:
அந்த வகையில், நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், 184 சங்கச் சாவடி மையங்கள், தனியார் நிறுவனம் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த சுங்கச் சாவடிகளின் கட்டுப்பாட்டில், 4,832 கி.மீ., தூரத்திற்கு, தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்து உள்ளன. தமிழகத்தில் அதிகளவில், 28 சுங்கச்சாவடி மையங்கள் உள்ளன.இந்த மையங்கள் ஒவ்வொன்றுக்கும், கட்டணங்கள் மாறுபடுகின்றன. தவிர, 2011ம் ஆண்டு சுங்கச் சாவடி மையங்களில், கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, புதிய சட்ட வடிவம் ஒன்று, மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத் துறை அமைச்சகம் மூலம் நிறைவேற்றப் பட்டது.
எதிர்ப்பு ஏன்?
நாட்டின் பொருளாதார வளர்ச்சி மாற்றத்தின் அடிப்படையில், சுங்கக் கட்டணம் மாறும் என்பது, அச்சட்ட முன்வடிவத்தின் சாராம்சம். அந்த சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, சுங்கச் சாவடி மையங்களில், சுங்கக் கட்டணம் உயர்த்தப் பட்டது.இது, லாரி, பஸ் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. லாரி போக்குவரத்துக்கு செலவாகும் டீசல் கட்டணத்தைக் காட்டிலும், சுங்கக் கட்டணம் அதிகம் என்பதே, லாரி உரிமையாளர்களின் எதிர்ப்புக்கு முக்கிய காரணம்.
போராட்டம்:
சுங்கக் கட்டண உயர்வைக் கண்டித்தும்; சுங்கச் சாவடி மையங்களில், சீரான சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும் எனவும், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த காலங்களில், நாடு முழுவதும் உள்ள லாரி உரிமையாளர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.போராட்ட சமயங்களில் மட்டும், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, கோரிக்கை நிறைவேற்றப்படும் என, மத்திய அரசு உறுதி அளிக்கும். அதன்பின், லாரி உரிமையாளர்களது கோரிக்கையை கண்டு கொள்வதில்லை என, லாரி உரிமையாளர்கள் கடும் அதிருப்தி கொண்டிருக்கின்றனர்.
விதிமுறையில் மாற்றம்:
தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி கூறியதாவது:முன்பு, சுங்கச் சாவடி மையத்தில் கட்டணம் செலுத்தி, ரசீது பெற்றால், அந்த ரசீதைக் காட்டி, சம்பந்தப்பட்ட சுங்கச் சாவடி வழியாக நாள் முழுவதும் பயணம் செய்யலாம். தற்போது, நாட்டின் பொருளாதார வசதி, வளத்திற்கு ஏற்ப, சுங்கக் கட்டணம் மாறும் என்ற விதிமுறை கடைபிடிக்கப் படுகிறது.இந்தச் சட்டம், மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக டி.ஆர்.பாலு இருந்தபோது, கொண்டு வரப்பட்டது. உலக அளவில், இந்தியாவில் மட்டுமே, சுங்கக் கட்டணம் வசூல் செய்ய, இம்முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஒவ்வொரு பயணத்திற்கும், கட்டணம் செலுத்த வேண்டும்.மேலும், லாரி, பஸ் போன்ற இரு "ஆக்சில்' வண்டிகளுக்கு, 1 கி.மீ.,க்கு, 2.20 ரூபாய் வசூலிக்கப் படுகிறது. இது, லாரி தொழிலில் ஈடுபடுவோருக்கு, பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
தீர்வு ஏற்படுமா?
மேலும் அவர் கூறியதாவது:இதற்கு தீர்வு காணும் வகையில், 30 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும், ஓராண்டு வரை செல்லலாம் என்ற நடைமுறையை ஏற்படுத்தலாம். உள்ளூர் வாகனங்களுக்கு, ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், கட்டணமின்றி செல்லலாம்.மற்ற வாகனங்களுக்கு, சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்கு என்ற ஆலோசனை, திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டோ சிங் அலுவலியாவிடம் ஏற்கனவே தெரிவிக்கப் பட்டு உள்ளது. இது, எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தெரியவில்லை.
இவ்வாறு நல்லதம்பி கூறினார்.
- நமது நிருபர் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக