சனி, 4 ஆகஸ்ட், 2012

Anna Hazare:செலவை பாத்துங்குங்க? கட்சிகள் எங்களை பார்த்து அச்சப்படுகின்றன.

அன்னா ஹசாரே அடித்த யு-டர்ன்: நாங்க ரெடி, செலவை நீங்க பாத்துங்குங்க

Viru News
ஊழலுக்கும், அதிகார துஷ்பிரயோகத்துக்கும் எதிராக போராடும் சமூக அமைப்பாக பிரபலமாகிய அன்னா ஹசாரே குழுவினர், தமது கொள்கையில் இருந்து யு-டர்ன் அடித்துள்ளனர். தாமும் அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதாக கூறியுள்ளனர். தமது அரசியல் கட்சிக்கு அருமையான பெயர் ஒன்றை ரெக்கமென்ட் செய்யுமாறு, மக்களை கேட்டும் உள்ளனர்.
அரசியலுக்கு வெளியே நின்று போராடிப் பலனில்லை என்று கருதி, அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவினரின் காலவரையற்ற உண்ணாவிரதம் நேற்று வாபஸ் பெறப்பட்டது. அப்போதுதான், 2014 மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சி தொடங்கப் போவதான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

லோக்பால் நடைமுறையை கொண்டுவருமாறு வற்புறுத்தி, அன்னா குழுவினர் 3 பேர் டெல்லியில் கடந்த மாதம் 25-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க துவங்கினர். ஆனால், உண்ணாவிரதத்துக்கு, ஆதரவு தெரிவிக்க வரும் கூட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போனது. மக்கள் ஆதரவை திரட்டுவதற்காக, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அன்னா ஹசாரவும் உண்ணாவிரதம் இருந்தார்.
ஆனாலும், எதிர்பார்த்த அளவு மக்கள் ஆதரவு இல்லை.
ஆதரவு குறைந்து வருகிறது என்பதை கண்டுகொண்டது மத்திய அரசு. அதனால், இம்முறை அன்னா குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு சார்பில் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
இப்படியே போனால் நிலைமை மோசமாக போய்விடும் என்பதால், நேற்று உண்ணாவிரதத்தை கைவிட்டு, இளநீர் குடித்துவிட்டு, அரசியல் கட்சி ஆரம்பிக்கும் அறிவிப்பை வெளியிட்டனர்.
தமது அரசியல் கட்சி பற்றிய விளக்கமும் அவர்களால் கொடுக்கப்பட்டுள்ளது. இதோ, அந்த விளக்கம்: “இதில் தலைவர் என்று யாரும் கிடையாது. யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். அவருக்கான பிரசார செலவுகளையும் மக்கள்தான் செய்வார்கள்”
அன்னா ஹசாரே பேசுகையில், “ஊழலுக்கு எதிராக நாங்கள் இயக்கம் தொடங்கியபோது, தைரியம் இருந்தால் தேர்தலில் போட்டியிட்டு மக்களவைக்கு வாருங்கள் என்று எங்களை பார்த்து அரசியல் கட்சிகள் சவால் விட்டன. இதோ, இப்போது, அரசியலில் குதிக்கப் போகிறோம் என்று அறிவித்ததும் அந்த கட்சிகள் எங்களை பார்த்து அச்சப்படுகின்றன. (இதை அவர் சொல்லியபோது, அறிவித்தல் வெளியாகி அரை மணிநேரம்கூட இல்லை) ஆட்சியை கைப்பற்றுவது எங்கள் நோக்கம் அல்ல” என்றார்.
“ஆட்சியை கைப்பற்றுவது எங்கள் நோக்கம் அல்ல” என்று கூறியிருப்பதால், ஒருவேளை தேர்தலில் போட்டியிட்டு, மெஜாரிட்டியுடன் ஜெயித்தால், யாரிடம் ஆட்சியை ஒப்படைப்பார்கள் என்று யாரும் சொல்லவில்லை.

கருத்துகள் இல்லை: