செவ்வாய், 31 ஜூலை, 2012

நரேந்திர மோடி ஒரு மத நல்லிணக்கவாதி: சொல்கிறது சிறப்புப் புலனாய்வுக் குழு!!

மோடியின் மதவெறிப் படுகொலைகள்: நரியைப் பரியாக்கியது சிறப்புப் புலனாய்வுக் குழு!


மோடிகுஜராத் மாநிலத்தில் முசுலீம்களுக்கு எதிராக நடந்த மதவெறிப் படுகொலை வழக்கில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசைச் சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 62 பேரைக் குற்றவாளிகளாகச் சேர்க்கக் கோரி ஜாகியா ஜாஃப்ரி தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரித்து வந்த சிறப்புப் புலனாய்வுக் குழு, தனது விசாரணையை முடித்து, இறுதி அறிக்கையை இரண்டு மாதங்களுக்கு முன்பு அகமதாபாத் விசாரணை நீதிமன்றத்திடம் அளித்தது.  அந்நீதிமன்றம் இவ்வறிக்கையை உடனடியாக வெளியிடாமல் தன்வசமே வைத்திருந்தபோதும், “இப்படுகொலை தொடர்பாக மோடி மீது சுமத்தப்பட்ட 32 குற்றச்சாட்டுக்களுக்கும் போதிய ஆதாரமில்லாததால், அவர் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்ய முடியாது” எனச் சிறப்புப் புலனாய்வுக் குழு எடுத்த முடிவு, மோடி ஆதரவு கும்பலால், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மறைமுகமான ஒத்துழைப்போடு வெளியே கசியவிடப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் மோடிக்கு எதிராக வழக்குத் தொடுத்த ஜாகியா ஜாஃப்ரியிடமும், அமைதி மற்றும் நீதிக்கான குடிமக்கள் குழுவிடமும் நீதிமன்றம் தற்பொழுது அளித்துவிட்டது.  இதனையடுத்து, இவ்வழக்கு தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்திய விதம், அதனின் முதல் மற்றும் இறுதி அறிக்கைகள்; உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற நண்பன் ராஜூ ராமச்சந்திரனின் அறிக்கை, அதனைச் சிறப்புப் புலனாய்வுக் குழு ஏற்றுக் கொள்ள மறுத்திருப்பது ஆகியவை அனைத்தும் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துவிட்டன.
குஜராத்தில் இந்து மதவெறிக் கும்பல் நடத்திய மதவெறிப் படுகொலையை கோத்ரா சம்பவத்தின் எதிர்வினை என்றும், ஜாகியா ஜாஃப்ரியின் கணவர் இஷான் ஜாஃப்ரி துப்பாக்கியால் சுட்டதையடுத்துதான் கொல்லப்பட்டார் என்றும் கூறி நியாயப்படுத்தினார், மோடி. அவரது கூற்றை அப்படியே தனது அறிக்கையில் வழிமொழிந்துள்ளது, சிறப்புப் புலனாய்வுக் குழு.  மோடிக்கு எதிரான சாட்சியங்களை நடுநிலையாக நின்று ஆராயாமல், ஏதாவதொரு நொண்டிச்சாக்கைச் சொல்லித் தட்டிக் கழித்து மோடியைக் காப்பாற்றியிருக்கிறது.  “இப்படுகொலைக்கும் மோடி அரசிற்கும் இடையே எவ்விதத்திலும் தொடர்பில்லை; கலவரத்தின்பொழுது மோடியின் அரசும் போலீசும் கடமை தவறாது நடந்துகொண்டனர்” என்று புளுகியிருக்கிறது.  சுருக்கமாகச் சொன்னால், போலீசின் அத்துமீறல்களை விசாரிக்க ஆளும் கும்பலால் அமைக்கப்படும் தலையாட்டி விசாரணை கமிசன்களைவிட மிகக் கேவலமான முறையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையும் அதன் முடிவுகளும் அமைந்துள்ளன.
‘‘இந்து மதவெறிக் கும்பல் குல்பர்க் சொசைட்டி காலனியில் வசித்து வந்த முசுலீம் குடும்பங்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தத் துணிந்த சமயத்தில், எனது கணவர் இஷான் ஜாஃப்ரி நரேந்திர மோடியைப் பலமுறை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உதவி கோரினார்.  ஆனால், போலீசு துறையைத் தன்னிடம் வைத்துள்ள மோடியோ இத்தாக்குதலைத் தடுத்து நிறுத்த எவ்வித முயற்சியும் செய்யவில்லை.  எனவே, இத்தாக்குதல் மோடிக்குத் தெரிந்து, அவரது மறைமுகமான ஒப்புதலோடுதான் நடந்தது” என மோடி மீது  ஜாகியா ஜாஃப்ரி  குற்றஞ்சுமத்தியிருந்தார்.
இக்குற்றச்சாட்டை ஒதுக்கித் தள்ளியுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, “மோடிக்கு இஷான் ஜாப்ரியிடமிருந்து எந்தவிதமான தொலைபேசி அழைப்பும் வரவில்லை; அவரிடமிருந்து மட்டுமல்ல, குல்பர்க் சொசைட்டியில் வசிக்கும் யாரிடமிருந்தும் தாக்குதல் நடந்த சமயத்தில் மோடிக்கோ, மற்ற உயர் அதிகாரிகளுக்கோ எந்தவிதமான தொலைபேசி அழைப்பும் வரவில்லை; குல்பர்க் சொசைட்டி மீது இந்து மதவெறிக் கும்பல் தாக்குதல் நடத்த முயலுவது பற்றி அகமதாபாத் போலீசு ஆணையருக்குத் தொலைவரிச் செய்தி அனுப்பியதாக, அப்பொழுது உளவுத்துறையில் துணை ஆணையராகப் பணியாற்றி வந்த சஞ்சீவ் பட் அளித்திருக்கும் சாட்சியமும் இட்டுக்கட்டிய பொய்; அத்தாக்குதலைத் தடுத்து நிறுத்த அகமதாபாத் போலீசு ஆணையர் தன்னால் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளது தூரம் நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார்” எனக் குறிப்பிட்டு மோடியையும் போலீசு அதிகாரிகளையும் விடுவித்துவிட்டது.

இதுவொருபுறமிருக்க, “ஒரு பெரும் கூட்டம் குல்பர்க் சொசைட்டியைச் சுற்றிவளைத்திருந்த சமயத்தில்,  இஷான் ஜாஃப்ரி தனது துப்பாக்கியால் அக்கூட்டத்தை நோக்கிப் பலமுறை சுட்டார்.  இத்தாக்குதலில் 15 பேர் காயமடைந்தனர்; ஒருவர் உயிரிழந்தார்.  இஷான் ஜாப்ரியின் இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைதான் குல்பர்க் சொசைட்டி மீது தாக்குதல் நடத்தக் காரணமாகிவிட்டது” எனக் குறிப்பிட்டு, இஷான் ஜாஃப்ரி நடத்திய துப்பாக்கிச் சூடுக்கு எதிர்வினையாகத்தான் இப்படுகொலை நடந்ததாகக் காரணத்தைக் கற்பித்திருக்கிறது, சிறப்புப் புலனாய்வுக் குழு.  கடந்த பத்தாண்டுகளில் இப்படிபட்ட கற்பிதத்தை மோடியையும், சிறப்புப் புலனாய்வுக் குழுவையும் தவிர வேறுயாரும் முன்வைக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மார்ச் 1, 2002 அன்று ஜீ  டி.வி. என்ற தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மோடி, “இஷான் ஜாஃப்ரி துப்பாக்கியால் சுட்டதை வினை என்றும், அவர் கொல்லப்பட்டதை எதிர்வினை என்றும் கூறியதோடு, கோத்ராவில் ரயில் பெட்டி எரிந்து போன சம்பவத்தை, அங்கு வாழும் முசுலீம்களின் கிரிமினல்தனத்தின் வெளிப்பாடு;  (இப்பொழுது) அவர்கள் புரிந்துள்ள கொடூரமான குற்றத்திற்கு எதிர்வினை நடந்து கொண்டிருக்கிறது” என்று வருணித்தார்.  மோடியின் இந்த இந்து மதவெறி பிடித்த பேச்சுகள் அனைத்தும் இந்து மதவெறிக் கும்பலின் கொலைவெறியைத் தூண்டிவிட்டன எனக் குற்றஞ்சுமத்தியிருந்தார், ஜாகியா ஜாஃப்ரி.
‘‘நரேந்திர மோடி ஜீடி.வி.க்கு அளித்த பேட்டியின் மூல சி.டி.யைக் கேட்டிருந்தோம்.  ஆனால், அதனை அந்நிறுவனம் எங்களுக்கு அளிக்கவில்லை” என்ற அற்பத்தனமான நொண்டிச்சாக்கைக் கூறி, மோடி மீது வழக்குத் தொடர முடியாது எனக் கூறிவிட்டது, சிறப்புப் புலனாய்வுக் குழு.  மேலும், இச்சம்பவங்களை வினையாகவும் எதிர்வினையாகவும் குறிப்பிட்டு மோடி கூறியதை, அதன் பின்னணியோடு வைத்துப் பார்க்கும்பொழுது அவர் மீது வழக்குத் தொடருவதற்கான முகாந்திரம் எதுவுமில்லை எனக் குறிப்பிட்டு, மோடியை மட்டுமல்ல, இஷான் ஜாஃப்ரி கொலையை எதிர்வினையாகச் சித்தரித்த தன்னையும் நியாயப்படுத்திக் கொண்டுவிட்டது, சிறப்புப் புலனாய்வுக் குழு.
‘‘கோத்ரா சம்பவத்துக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு, எதிர்காலத்தில் இப்படியொரு குற்றச்செயல் எந்தவொரு இடத்திலும் நடக்காதிருக்கும்படி, கடுமையான தண்டனை அளிப்போம்” என மோடி பிப்.27 மற்றும் பிப்.28, 2002 ஆகிய இரு தினங்களிலும் திரும்ப திரும்பக் கூறினார்.  பத்திரிக்கைகள் வாயிலாகவும், சட்டசபையிலும், பொதுமக்களைச் சந்தித்த இடங்களிலும் மோடி இதனைத் திரும்பதிரும்பக் கூறினார்.  இது, சட்டம்  ஒழுங்கை காக்க வேண்டும்; குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை தர வேண்டும் என்ற அவரது உறுதியைக் காட்டுகிறது.  இப்படிபட்ட எண்ணங்கொண்ட மோடி மீது இரு மதத்தினர் இடையே பகைமையைத் தூண்டிவிட்டார் எனக் குற்றஞ்சுமத்துவதற்கு அடிப்படை இருக்க முடியாது.  அது மட்டுமல்ல, அவரது இந்த உரை, “இந்துக்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்கக்கூடாதென மோடி அதிகாரிகளிடம் கூறினார்” என அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டையும் மறுதலிக்கிறது.  அப்படியே மோடி கூறியிருந்தாலும்கூட, அது நான்கு சுவருக்குள் கூறிய தனிப்பட்ட கருத்தாகும்.  அதற்காக மோடி மீது வழக்குப் பதிய முடியாது” என மோடிக்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை வக்காலத்து வாங்கியிருக்கிறது.
எல்லாச் சதிச் செயல்களுமே நான்கு சுவருக்குள்தான் பேசித் தீர்மானிக்கப்படுகின்றன.  சிறப்புப் புலனாய்வுக் குழுவின் வாதப்படி பார்த்தால், கலவரத்தில் நேரடியாக இறங்காமல் சதிச் செயலைத் தீட்டும் முக்கியப் புள்ளிகள் யாரையும் தண்டிக்கவே முடியாது.  மேலும், கோத்ரா சம்பவத்துக்குக் காரணமெனக் குற்றஞ்சுமத்தப்பட்ட முசுலீம்களைத் தண்டிப்பது பற்றித்தான் மோடி நீட்டி முழங்கி வந்தாரே தவிர, அவர் மதவெறிப் படுகொலைகளை நடத்திய இந்து மதவெறிக் கும்பலுக்கு எதிராகச் சுண்டுவிரலைக்கூட அசைக்கவில்லை.  மாறாக, அக்கொலைவெறி பிடித்த கும்பலைக் காப்பாற்ற அரசு அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தினார், மோடி.
“முசுலீம்கள் குழந்தைகளைப் பெற்றுத் தள்ளுவதற்காக நாம் அகதி முகாம்களை நடத்து முடியாது” என்றவாறெல்லாம் மேடைதோறும் பேசி, முசுலீம்களை அவமானப்படுத்தி வந்தார்.  ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழுவோ, “மோடி அமைதியை விரும்பினார்; குற்றவாளிகளைத் தண்டிக்க முயன்றார்; அகமதாபாத்தில் கலவரத்தைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்தார்; கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார்” என இட்டுக்கட்டிய பொய்களை எடுத்துவைத்து, இந்து மதவெறி கொலைகாரன் மோடியை மத நல்லிணக்கவாதி போலத் தனது இறுதி அறிக்கையில் சித்தரித்துள்ளது.
கோத்ரா சம்பவம் நடந்த நாளன்று (பிப்.27, 2002) இரவில், மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் உயர் அதிகாரிகளின் கூட்டம் நடந்ததைச் சிறப்புப் புலனாய்வுக் குழு மறுக்கவில்லை.  ஆனால், அக்கூட்டத்தில் போலீசு அதிகாரி சஞ்சீவ் பட் கலந்து கொண்டதற்கோ, அக்கூட்டத்தில், “இந்துக்கள் தமது கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்கக் கூடாது” என மோடி பேசியதாகக் குற்றஞ்சுமத்தப்படுவதை நிரூபிப்பதற்கோ போதிய ஆதாரமில்லை என்பதுதான் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முடிவு.
அக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிற அதிகாரிகள் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் இம்முடிவுக்கு வந்ததாகத் தனது இறுதி அறிக்கையில் கூறும் சிறப்புப் புலனாய்வுக் குழு, தனது முதல் அறிக்கையில் அந்த அதிகாரிகளின் சாட்சியங்களை நம்பமுடியாது என முரணாகக் குறிப்பிட்டுள்ளது.  அவர்களின் சாட்சியங்களை நம்ப முடியாது எனும்பொழுது, அக்கூட்டம் தொடர்பான கூட்டக் குறிப்புகளை வாங்கிப் பெற்று, அதன் அடிப்படையில் மோடி மீதான குற்றச்சாட்டு பற்றி சிறப்புப் புலனாய்வுக் குழு முடிவு செய்திருக்க வேண்டும்.  ஆனால், விசாரணைக் குழுவோ அக்கூட்டக் குறிப்புகளைக் கேட்டுப் பெற்று விசாரணை நடத்தாமல், நம்பத்தகாத சாட்சியங்களின் வாக்குமூலங்களை ஏற்று மோடியைக் காப்பாற்றியிருக்கிறது.
மோடி
பிப்.27, 2002 கூட்டம் மோடியும் அதில் கலந்துகொண்ட அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்துக் கொள்ளுவதற்காக நடத்தப்பட்டிருக்க முடியாது.  குஜராத் மாநிலமெங்கும் முசுலீம்களுக்கு எதிரான கலவரம் எந்நேரமும் வெடிக்கலாம் என்ற நிலையில் நடந்துள்ள அந்த முக்கியமான கூட்டம் எந்தவிதமான எழுத்துபூர்வமான பதிவின்றி நடந்திருக்க முடியுமென்றால், அல்லது அந்தப் பதிவுகள் வேண்டுமென்றே அழிக்கப்பட்டிருக்கக்கூடும் என்றால், சிறப்புப் புலனாய்வுக் குழு மோடியின் கிரிமினல் உள்நோக்கத்தைச் சந்தேகித்திருக்க வேண்டும்.  ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழுவோ, அக்கூட்டம் நடந்தது தொடர்பாக அரசிடம் ஆவணங்கள் இருக்கிறதா, இல்லையா என்பது பற்றி ஒரு கேள்வியைக்கூட எழுப்பவில்லை.  அதே சமயம், அச்சதிக்கூட்டம் பற்றி சாட்சியம் அளித்துள்ள சஞ்சீவ் பட்டை, மோடி அரசு பல முக்கியமான தடயங்களை ஒன்றன்பின் ஒன்றாக அழித்துவருவதை அம்பலப்படுத்தி வரும் சஞ்சீவ் பட்டை, கறைபடிந்தவராகக் குற்றம் சாட்டுகிறது.  அவரது கடந்தகால அதிகாரமுறைகேடுகளை இந்தச் சந்தர்ப்பத்தில் அம்பலப்படுத்தி, அவரை நேர்மையற்ற சாட்சியம் என முத்திரை குத்துகிறது.  மதவெறிப் படுகொலைக்கு ஆதரவாக எவ்வித எழுத்துபூர்வமான சாட்சியமின்றிப் பல வாய்மொழி உத்தரவுகளைப் போட்ட மோடி அரசை அம்பலப்படுத்திய முன்னாள் போலீசு அதிகாரி சிறீகுமாரின் சாட்சியத்தையும் உள்நோக்கம் கொண்டதென ஒதுக்கித் தள்ளுகிறது.
‘‘சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவரும் முன்னாள் சி.பி.ஐ. இயக்குநருமான ராகவன் சட்டப்படி நடக்கக்கூடிய நேர்மையான அதிகாரி, எவ்விதமான அரசியல் சார்பும் இல்லாதவர், மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்கக்கூடியவர்.  எனவே, அப்படிப்பட்டவரின் தலைமையில் நடக்கும் விசாரணையில் நீதி நிலைநாட்டப்படும்” என ஒளிவட்டம் போட்டுக் காட்டப்பட்டது.  ஆனால், ராகவன் இந்த ஒளிவட்டத்தை மோடியைக் காப்பாற்றுவதற்குப் பயன்படுத்திக் கொண்டார் என்பதே உண்மை.  தனது கீழ் அதிகாரியான ஏ.கே.மல்ஹோத்ரா நடத்திய விசாரணை அறிக்கைகளில் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்ததற்கு மேல், அவர் இந்த விசாரணையில் பாரதூரமான அக்கறை எதுவும் செலுத்தவில்லை.  சோ,  இந்து என்.ராம் ஆகியோரின் ஆலோசனையைப் பெற்றுத்தான் ராகவன் இறுதி அறிக்கையைத் தயாரித்தார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டையும் நிரூபிப்பதாகவே சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முடிவுகள் அமைந்துள்ளன.
இம்முடிவுகள் மோடியை பயங்கரவாதக் குற்றச்சாட்டிலிருந்து மட்டும் விடுவித்துவிடவில்லை; அவரின் பிரதமர் கனவுகளுக்கு உந்து பலகையாகவும் பயன்பட்டு வருகிறது.  மேலும், அரசு இயந்திரம் எந்தளவிற்கு இந்துமயமாகியிருக்கிறது என்பதையும்; இந்த அரசு இயந்திரத்தையும் இன்றுள்ள சட்டங்களையும் கொண்டு மோடி, அத்வானி, பால் தாக்கரே உள்ளிட்ட இந்து மதவெறிக் கும்பலின் தளகர்த்தர்களைத் தண்டித்துவிட முடியாது என்பதையும் மீண்டும் எடுத்துக்காட்டுவதாகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையும் அதன் முடிவுகளும் அமைந்துள்ளன.

கருத்துகள் இல்லை: