வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

நரிக்குறவ மருத்துவ மாணவர் ராஜபாண்டி

ராஜபாண்டிக்கு தஞ்சை கல்லூரியில் தடபுடல் வரவேற்பு

தஞ்சாவூர்: நரிக்குறவ சமுதாயத்தில் பிறந்து மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த மாணவர் ராஜபாண்டிக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் தடபுடலாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நரிக்குறவ இனத்தை சேர்ந்தவரான ராஜபாண்டி, பிளஸ்-2 தேர்வில் 1167 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். ராஜபாண்டிக்கு மருத்துவம் படித்து ஏழை, எளியோருக்கு சேவை புரிய வேண்டும் என்ற உயரிய லட்சியம் இருந்து வந்தது.
மருத்துவக்கல்லூரிக்கான கட்-ஆப் மார்க் 197.75 அவர் பெற்றிருந்தார். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் சென்னையில் நடந்த மருத்துவ கல்லூரி கவுன்சிலிங்கில், மாணவர் ராஜபாண்டிக்கு தஞ்சை மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது.
நரிக்குறவ இனத்தை சேர்ந்த அவருக்கு அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தார். இருப்பினும் கட்டணத்தை நினைத்து அவர் பெரும் கவலை அடைந்தார்.
இதையடுத்து நடிகர் ஜீவா ராஜபாண்டிக்கு ரூ.30 ஆயிரம் வழங்கி உதவி செய்தார். அதேபோல தூத்துக்குடியை சேர்ந்த ஒரு டாக்டர் ரூ.20 ஆயிரமும், கோவையை சேர்ந்த சமூக சேவகர், டாக்டர் முத்துலட்சுமி உள்ளிட்டோரும் மாணவர் ராஜபாண்டிக்கு பண உதவி அளித்தனர்.

இதையடுத்து நம்பிக்கை பெற்ற ராஜபாண்டி கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி முதலாமாண்டுத் தொடக்க விழா கல்லூரி கலையரங்கில் நடந்தது. அப்போது ராஜபாண்டிக்கு மூத்த மாணவர்கள் வரவேற்பு கொடுத்து அவரை மகிழ்வித்தனர் கைகுலுக்கியும், வாழ்த்துகள் கூறியும் அவர்கள் வரவேற்றது ராஜபாண்டியை நெகிழ வைத்தது.
அதேபோல கல்லூரி டீன் உமாதேவியும் ராஜபாண்டிக்கு வாழ்த்து தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: