திங்கள், 30 ஜூலை, 2012

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 2



செல்வத்தைப் பெருக்கும் வழிகள் என்ன என்பதைப் பார்ப்பதற்கு முன், கையில் வரும் பணத்தை எப்படித் தக்க வைத்துக் கொள்வது என்று பார்ப்போம்.
உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இரு சக்கர வண்டி ஒட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அதை நல்ல விதமாக வைத்திருந்தால் மட்டுமே, அதைவிடச் சிறந்த ஒரு வாகனத்தை அவருக்கு நீங்கள் வாங்கிக்கொடுப்பீர்கள். அதேபோல் உங்கள் கையிருப்பை நீங்கள் திட்டமிட்டு கையாண்டால்தான் அதைவிடக் கூடுதல் செல்வம் கிடைக்கும்.
பொருளாதார ரீதியில் கீழே உள்ளவர்களைக் கவனித்துப் பாருங்கள். தெருவில் நின்று இஸ்திரி செய்பவர், பூ விற்பவர், வீடுகளில் வேலை செய்பவர் என ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஈட்டிக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனாலும் அவர்கள் வாழ்நிலை முன்னேற்றம் காண்பதில்லை. இதே போல்தான் மத்தியதரக் குடும்பங்களின் நிலையும். குறைவு என்றாலும் மாதாந்திர சம்பாத்தியம் இருக்கும். இருந்தும், முன்னேற்றம் இருக்காது.

மூட்டை தூக்கிப் பிழைப்பவர்கள், கூலித் தொழிலாளிகள், வீட்டு வேலை செய்பவர்கள், தெருவில் காய்கறி விற்பவர்கள், சிறு சிறு வேலை செய்பவர்கள் என்று பலரிடமும் நான் பேசியிருக்கிறேன். உங்களுடைய ஒரு நாள் சம்பளம் என்ன? அவர்களும் தோராயமாகச் சொல்வார்கள். சுமார், நூறு ரூபாய்! மேலும், இந்த 100 ரூபாய் என்பது அவர்களுடைய லாபமாக இருக்கும்.
இவர்களில் பெரும்பாலானோர் குடிப்பழக்கத்துக்கும் பிற தீய பழக்க வழக்கங்களுக்கும் அடிமையாக இருப்பதை எனது ஆராய்ச்சிப் படிப்பின் போது தெரிந்து கொண்டேன். தவிரவும், தங்கள் வாழ்க்கைத் தரத்தைப் பற்றியும், தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய கல்வியின் அவசியம் பற்றியும், நல்ல வாழ்க்கை முறையை பற்றியும் அறியாதவர்களாகவும் இவர்கள் இருக்கிறார்கள்.
நல்ல ஒரு வழிகாட்டுதலை மிகுந்த சிரமப்பட்டாவது அரசாங்கமும் தன்னார்வுத் தொண்டு நிறுவனங்களும் இவர்களுக்கு அளிக்கும் பட்சத்தில், உண்மையான பொருளாதாரச் சீர்திருத்தத்தை இவர்களிடையே ஏற்படுத்தி விட முடியும். எதுவுமே செய்யாமல் நடைபாதையில் உறங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றி நாம் கவலைப்படவோ திட்டமிடவோ முடியாது.
0
‘என்னுடைய வருமானம் 7,000 ரூபாய், இதில் நான் என் குடும்பத்தை, அதன் தேவைகளை எப்படிச் சமாளிப்பேன்?’ என்று கேட்பவர்களுக்காக திட்டமிடுவது சாத்தியம்.
முதல் காரியமாக நீங்கள் செய்யவேண்டியது என்ன தெரியுமா? இனி உங்கள் மாதச் சம்பம் 6700 மட்டுமே. ஒரு சுயகட்டுப்பாட்டுடன் இதை நீங்கள் கிரகித்துக்கொள்ளவேண்டும். உங்கள் சம்பளம் 6700 மட்டுமே என்றால் என்ன செய்வீர்கள்?
செலவினங்களைக் குறைக்க வேண்டியிருக்கும். அத்தியாவசியம் எது? அனாவசியம் எது? தேவையானது எது? தேவையற்றது எது? என்று பிரித்துப் பார்க்கவேண்டியிருக்கும். எவ்வளவுதான் நம் மனதை ஈர்க்கும் ஒரு விஷயமாக இருந்தாலும், தேவையற்றதை வாங்குவதைத் தள்ளிப்போடவேண்டியிருக்கும்.
விளக்கமாகப் பார்ப்போம். ஒரு குடும்பத்தின் தேவைகள் என்னென்ன? வீட்டு வாடகை, பால், அரிசி, மளிகைப் பொருட்கள், குழந்தைகளின் கல்விச்செலவு, மருத்துவச் செலவு, போக்குவரத்துச் செலவு. இவை குறைந்தபட்சத் தேவைகள், அத்தியாவசியமானவையும்கூட.
ஆனால் ஒரு திரைப்படத்துக்குச் செல்வதும், உல்லாசப் பயணங்களுக்குச் செல்வதும், பக்தி என்னும் போர்வையில் மிக அதிகமாகப் பூஜைக்குச் செலவிடுவதும் அவசியம் அற்றது.
பூஜை என்ற பெயரில் அதிக அளவில் செலவுகளை இழுத்துக் கொள்பவர்களை எனக்குத் தெரியும். வருடத்துக்குக் குறைந்தது மூன்று முறையாவது தீர்த்த யாத்திரை செல்வார்கள். மன நிம்மதிக்காக என்பார்கள். திரைப்படம் பார்ப்பவர்களும் இதே பதிலைத்தான் சொல்வார்கள்.
ஒரு மனிதனுடைய தூய மனபக்திதான் இறைவனுக்கும் அவனுக்கும் உள்ள தொலைவைக் குறைக்கிறது. எச்சில் பழத்தை ராமனுக்கு ஊட்டிய சபரியாகட்டும், ஒரு பிடி அவலை கிருஷ்ணனுக்கு வழங்கிய குசேலராகட்டும், சிவனின் கண்களிலிருந்து வழிந்த உதிரத்தை நிறுத்த தன்னையே குருடாக்கிக் கொண்ட சிவபக்தர் கண்ணப்பர் ஆகட்டும்… இவர்களில் யாருமே பணக்காரர்கள் இல்லை. செல்வத்தால் இறைவனைப் பூஜித்தவர்கள் இல்லை. நாம் மட்டும் ஏன் பணத்தைச் செலவழித்து தீர்த்த யாத்திரைகள் மேற்கொள்ளவேண்டும்? அதுவும், மன நிம்மதிக்காக?
திரைப்படம் பொழுதுபோக்குக்காக என்று சொல்வோம். ஆனால் நுழைவுச் சீட்டு கிடைக்கவில்லை என்றால், அதிக பணம் கொடுத்தாவது அந்தப் படத்தைப் பார்க்கத் துடிக்கிறோம். மாதக் கடைசி பற்றிய சிந்தனை அப்போது எழுவதில்லை. எந்த மகிழ்ச்சிக்காக அந்தப் பணத்தை இழந்தீர்களோ, அந்த மகிழ்ச்சி உங்களை விட்டு நெடுந்தூரம் போய் விடுகிறது.
குடும்பத்தின் செலவுகளைத் தவறாகத் திட்டமிடுவதால் மட்டுமே பெரும்பாலான பிரச்னைகள் தொடங்குகின்றன என்பது வெளிப்படை.
பல வீடுகளில் செய்யப்படும் பொதுவான தவறுகள் கீழே பட்டியலிடிப்பட்டுள்ளன. இவற்றில் சில உங்களுக்கும் பொருந்தலாம்.
  • அவ்வப்போது சிடி, கேசட் என்று வாங்கி குவிப்பது.
  • அடிக்கடி புடைவைக்காரன் வருகிறான் என்பதால் நிறைய துணிமணிகளைக் கடனில் வாங்குவது.
  • உணவுப் பொருள்களை வாங்குவதில் கூட திட்டமிடுதலின்றி ஊதாரித்தனமாகச் செலவு செய்வது.
  • மிக அதிகமாக கேளிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது.
  • வீட்டுக்குத் தேவை இருக்கிறதோ இல்லையோ விளம்பரங்களில் வரும் பொருட்களால் ஈர்க்கப்பட்டு, கடனை வாங்கியாவது அப்பொருளை வாங்கத் துடிப்பது.
  • வீட்டிலுள்ள மின்சார உபகரணங்களைச் சிக்கனமாகச் செலவு செய்யாமல் இருப்பது.
  • வீட்டு வைபவங்களுக்கு அதிகமாகச் செலவிடுதல்.
  • ஆடை, ஆலங்காரம் என்று நிறைய செலவிடுவது.
மனைவி, குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு வெளியில் செல்வது ஒரு சிந்தனைப் பரிமாற்றத்துக்கு, ஒரு நட்புறவான சூழ்நிலைக்கு உதவும். பத்து ரூபாய் செலவு செய்தும் இதனை அடையமுடியும். இரண்டு ரூபாய் கடலை வாங்கித் தின்றால் கூட, இந்த நெருக்கத்தை குடும்பத்தில் ஏற்படுத்திவிட முடியும்.
அடிநாதம் இதுதான். எது பொழுதுபோக்கு? எது எனக்காக மகிழ்ச்சியை அளிக்கும் செயல்? எது உல்லாசம்? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை நீங்கள் கண்டறியவேண்டும். நான் இப்போது செய்யும் செய்கை, பின்னால் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமா? கொடுக்காதெனில் அதைச் செய்யாதிருப்பது உத்தமம். மேற்கொண்டு பொருளீட்டத் தெரியாதவர்கள் தன் கை இருப்பையும் இழப்பது எந்த வகையில் சிறந்தது?
பணத்தைச் செலவு செய்வதில் கிடைக்கும் ஆனந்தத்தைவிட, பணத்தைக் கையில் வைத்திருப்பதில் கிடைக்கும் ஆனந்தம் பெரியது.
கையில் பணம் இல்லையென்றால், விரக்தியும் எரிச்சலும் கோபமும்தான் ஏற்படும். உங்களை அழுத்தும் பொருளாதாரப் பிரச்னைகளைப் பறறிதான் நீங்கள் சிந்தித்துக்கொண்டிருப்பீர்கள். கையில் பணம் இருந்தால், பிரச்னைகள் பின்னுக்குப் போய்விடும்.
முதல் வாரம் கரெண்ட் பில் கட்டவேண்டும் என்று நினைப்பார்கள். குழந்தையின் பிறந்த நாள், நண்பர்கள் திருமணம் என்று ஏதாவது ஒன்று உள்ளே புகுந்து அந்தப் பணத்தை அபகரித்துச் சென்றுவிடும். சரி, கடைசி தேதிக்குள் கட்டிவிடலாம் என்று சமாதானம் சொல்லிக்கொண்டு அப்போதைய தேவைகளைப் பூர்த்திசெய்துவிடுவார்கள்.
மின் கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் தடைபடும் அளவுக்குப் போன பிறகு, பணம் தேடி அங்கும் இங்கும் செல்வார்கள். தொலைபேசிக் கட்டணம், பேப்பர் கட்டணம், மளிகைக் கடை பாக்கி, குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், பால் செலவு என்று அனைத்துக்கும் இந்த நிலைமைதான்.
இந்தச் சூழலில் நீங்கள் முதலில் செய்யவேண்டியது ஒன்றுதான். முக்கியமான செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை, எக்காரணம் கொண்டும் வேறொரு விஷயத்துக்குப் பயன்படுத்தக்கூடாது. சுயக் கட்டுப்பாட்டுடன் உங்களுக்கு நீங்களே இந்த விதியை விதித்துக்கொள்ளவேண்டும். செய்தால், அநாவசியமாக மற்றவர்களிடம் கடன் கேட்கவேண்டிய அவசியம் இருக்காது.
0
இந்த இடத்தில் கடன் கொடுக்கல் வாங்கல் பற்றி சிறிது பார்த்துவிடுவோம். முன்பெல்லாம், ஒரு கஷ்டத்தின்போது மற்றவர்கள் முன் பணத்துக்காகத் தலைகுனிந்து நிற்பது அவமானமான ஒரு செயலாகக் கருதப்பட்டது. ஆனால் இன்றைய சூழ்நிலையில், கடனுக்கு மிக அழகிய முலாம் பூசப்பட்டுவிட்டது. கடன் வாங்குவது என்பதே மிகப்பெரிய கௌரவம் என்னும் அளவுக்கு ஆகிவிட்டது. ஓ! எனக்குக் கடன் கொடுக்க எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா என்றுகூட சிலர் பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள்.
கடன் கேட்பது தவறில்லை என்ற எண்ணம் பரவலாகப் பரவியிருக்கிறது. சொன்ன நேரத்தில் கடனைத் திருப்பிக் கொடுத்தல் தனி நபரின் நாணயத்தின் பிரதிபலிப்பாகக் கருதி இருந்த காலம் போய், ‘என்ன? கொடுப்பேன் என்று சொன்னேன்! அதற்கென்ன இப்போ? முடியவில்லை!’ என்று எந்தவித உறுத்துதலின்றி சொல்லப் பழகிக்கொண்டிருக்கிறோம்.
செல்வம் சேர்க்கவேண்டும் என்று உண்மையில் நீங்கள் மனதார விரும்பினால், ஒரு சபதம் செய்துகொள்ளுங்கள்.நான் கடன் கேட்கமாட்டேன்! மற்றவர்களுக்குக் கடன் கொடுப்பராக இருக்கும்பட்சத்தில் இப்படிச் சொல்லுங்கள். இனி நான் கடன் கொடுப்பதில்லை!
உடனே உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். தேவை இருப்பவர்களுக்கு உதவி செய்வது மனித நேயம் இல்லையா? உங்கள் மனித நேயம், உங்களுக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்றால் அப்படிப்பட்ட மனித நேயம் எந்த வகையிலும் உதவாது என்பதுதான் உண்மை.
மனித நேயம் கொண்ட பலரும், பெரும் சங்கடங்களில் சிக்கி, ஈவு இரக்கமற்ற மனிதர்களாகப் பிற்காலத்தில் மாறி இருக்கிறார்கள். ‘நான் நல்ல மனிதனாகத்தான் இருந்தேன். ஆனால் உலகம் என்னை மாற்றிவிட்டது’ என்று இவர்கள் வருந்தியது உண்டு.
இன்றைய பொருளாதார உலகின் எழுதப்படாத சாசன விதி என்ன தெரியுமா? Unwritten Economic Constitutional Law என்றுகூட இதனை நீங்கள் வைத்துக்கொள்ளலாம்.
உங்கள் பணத்தைக் கையாள்வதில் உணர்வுபூர்வமாகச் சிந்திக்காதீர்கள். புத்திசாலித்தனமாகச் சிந்தித்து, புத்திசாலித்தனமாகச் செயல்படுத்துங்கள்.
நெருங்கிய சொந்தமாக இருந்தாலும் சரி, நன்கு பரிச்சயமானவராக இருந்தாலும் சரி. தெரியாத நபர் ஒருவரிடம் எப்படி கொடுக்கல், வாங்கலில் ஈடுபடுவீர்களோ அப்படியே இங்கும் செய்யுங்கள். அவ்வாறு செய்யாமல், கடன் பெற்றவரின் நாணயத்தைப் பற்றியும் நம்பகத்தன்மை பற்றியும் பின்னால் புலம்புவதில் பயனில்லை.
கடன் கொடுப்பவதன்மூலம் நீங்கள் யாருக்கும் உதவமுடியாது. ஒருவரைத் தவறான பாதையில் வேண்டுமானால் கொண்டு செல்லலாம்.
(தொடரும்)
www.tamilpaper.net

கருத்துகள் இல்லை: