செவ்வாய், 31 ஜூலை, 2012

Police பங்களாவில் லஞ்ச ஒழிப்புத்துறை "ரெய்டு': தங்கம், வெள்ளி பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்ட, போலீஸ் எஸ்.பி., யாக இருந்த அபிஷேக் தீட்சித்தின் பங்களா, கான்பூரில் உள்ள சொந்த வீடு, உறவினர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமாக இருந்த பர்கூர் எஸ்.ஐ., வீட்டிலும், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எஸ்.ஐ., வீட்டில் இருந்து, இரண்டு கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த அபிஷேக் தீட்சித், தனது மகன் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, அனைத்து இன்ஸ்பெக்டர்கள், நகைக்கடை உரிமையாளர்கள், அதிகளவு தங்க நகை மற்றும் விலை உயர்ந்த, பரிசுப்பொருள் பெற்றதாகவும், இதன் மூலம், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இடமாற்றம்:
இதையடுத்து, இரு வாரங்களுக்கு முன், சென்னை கமாண்டோ எஸ்.பி.,யாக அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய எஸ்.பி., அசோக்குமார் பொறுப்பேற்றும், கிருஷ்ணகிரியில் உள்ள எஸ்.பி., பங்களாவை, அபிஷேக் தீட்சித் காலி செய்யவில்லை. தொடர்ந்து, அபிஷேக் தீட்சித் மீது ஏராளமான புகார் வந்ததால், நேற்று காலை, கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் எஸ்.பி., செந்தில்நாதன் தலைமையில், லஞ்ச ஒழிப்பு போலீசார், அபிஷேக் தீட்சித், கிருஷ்ணகிரியில் தங்கியிருந்த, கிருஷ்ணகிரி எஸ்.பி., பங்களா, அவரது சொந்த ஊரான கான்பூரில் உள்ள வீடு, அவருக்கு நெருக்கமான எஸ்.ஐ., ராமச்சந்திரனின் பர்கூர் வீடு ஆகிய இடங்களில், ஒரே நேரத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.


ஆவணங்கள் பறிமுதல் :
நேற்று காலை 8 மணி முதல் பெங்களூரு சாலையில் உள்ள கிருஷ்ணகிரி எஸ்.பி., பங்களாவில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். அபிஷேக் தீட்சித், பங்களாவை காலி செய்வதற்காக, வீட்டில் இருந்த பொருட்கள், முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை கட்டி, லாரிகளில் ஏற்றி சென்னைக்கு கொண்டு செல்வதற்காக தயாராக வைத்திருந்தார். அவற்றை பிரித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான, அவரது டைரி குறிப்புகள், ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதோடு, கான்பூரில் உள்ள அபிஷேக் தீட்சித்திற்கு சொந்தமான வீடு, மூன்று உறவினர் வீடுகள் உட்பட நான்கு இடங்களில், நேற்று, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அந்த சோதனையிலும் அவரது சொத்து விவரங்கள், உறவினர்கள் பெயரில் அவருக்கு தொடர்புடைய சொத்து விவரங்கள், நகைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

2 கிலோ தங்கம் :
அபிஷேக் தீட்சித்திற்கு நெருக்கமான, எஸ்.ஐ., ராமச்சந்திரனின், பர்கூர் வீட்டில் நடந்த சோதனையில், "மினரல் வாட்டர்' கேனில், பதுக்கி வைத்திருந்த, இரண்டு கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவரது பெயரில் இருந்த சில சொத்து ஆவணங்களையும் எடுத்துச் சென்றனர்.எஸ்.ஐ., ராமச்சந்திரன் வட்டி தொழில், நகைக்கடை வியாபாரம் செய்து வந்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையை அறிந்த அபிஷேக் தீட்சித், நேற்று காலை, சென்னையில் இருந்து உடனடியாக கிருஷ்ணகிரி புறப்பட்டு வந்தார். அவரிடமும், உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை...:
எஸ்.பி., அபிஷேக் தீட்சித், கிருஷ்ணகிரியில் இருந்து டிரான்ஸ்பர் ஆவதற்கு சில நாட்களுக்கு முன், கடைசியாக, 87 போலீசாருக்கு அவரவர் விரும்பிய, வருமானம் கிடைக்கும் இடங்களுக்கு டிரான்ஸ்பர் போட்டுள்ளார். இதற்கு, தனக்கு நெருக்கமான எஸ்.ஐ., ராமச்சந்திரன் மூலம், டிரான்ஸ்பர் பெற்ற போலீசாரிடம், 10 ஆயிரம் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.மேலும், மணல் கடத்தல், கிரானைட் கடத்தல், கட்டப்பஞ்சாயத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்க சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள், எஸ்.ஐ., ராமச்சந்திரன் மூலம் எஸ்.பி., அபிஷேக் தீட்சித்திற்கு பணம் கொடுத்ததாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது.அபிஷேக் தீட்சித்திற்கு மீடியேட்டராகச் செயல்பட்ட எஸ்.ஐ., ராமச்சந்திரன், கிருஷ்ணகிரியில் பணிபுரிந்த போது, ஏற்கனவே பல்வேறு புகாரில் சிக்கி, ஹோம்கார்டு பிரிவில் வேலை பார்த்தார். எஸ்.பி.,யாக அபிஷேக் தீட்சித் வந்தபோது, அவரது எண்ணம் அறிந்து நடந்து கொண்டதால், ஓசூர் டிராபிக் எஸ்.ஐ., யாக நியமிக்கப்பட்டார்.

அதன் பின், அபிஷேக் தீட்சித்திடம் கொண்டுள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி, போலீசாரிடமும், தனியார் நிறுவன முதலாளிகளிடமும் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார். ஓசூர், குருப்பரப்பள்ளி, ஹட்கோ போலீசார் கடைசியாக பிடித்த ஒரு கொள்ளை வழக்கில், சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் போலீசார், 17 சவரன் நகையை எஸ்.பி., அபிஷேக் தீட்சித்திற்கு வழங்கியதாகவும் புகார் சென்றுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறுகிய காலம், எஸ்.பி.,யாக இருந்தாலும், தன்னுடைய அதிகாரம், பதவியைப் பயன்படுத்தி, பல்வேறு தவறான வழிகளில் அபிஷேக் தீட்சித் வருமானத்துக்கு அதிகமாக, சொந்த ஊரான கான்பூரில், உறவினர்கள் பெயரில் சொத்து வாங்கிக் குவித்துள்ள தகவல் கிடைத்தது. இதன் பின், லஞ்ச ஒழிப்பு போலீசார், கிருஷ்ணகிரி எஸ்.பி., பங்களாவில் சோதனை நடத்தியதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: