புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கான குறைந்தபட்ச ஏலத் தொகையை, 14
ஆயிரம் கோடி ரூபாயாக, மத்திய அமைச்சரவை நிர்ணயித்து உள்ளது.
கடந்த 2008ல், தொலை தொடர்புத் துறை அமைச்சராக ராஜா இருந்தபோது,
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், முறைகேடு நடந்ததாகப்
புகார் எழுந்ததை அடுத்து, இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,
தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, 122 உரிமங்களை ரத்து செய்தது.
ஆகஸ்ட் 31க்குள் (இந்தாண்டு) ஸ்பெக்ட்ரம் ஏலம் புதிதாக நடத்தப்பட வேண்டும்
என்றும் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
(டிராய்), குறைந்தபட்ச ஏலத் தொகையை, 18 ஆயிரம் கோடி ரூபாயாக (ஐந்து
மெகாஹெட்ஜ்க்கு), நிர்ணயிக்க வேண்டும் என, பரிந்துரை செய்தது. இந்த தொகை,
மிகவும் அதிகமாக இருப்பதாக, தொலை தொடர்பு நிறுவனங்கள் அதிருப்தி
தெரிவித்தன. இதையடுத்து, அமைச்சர் சிதம்பரம் தலைமையிலான அதிகாரம் பெற்ற அமைச்சரவை குழு, இதுகுறித்து ஆலோசனை நடத்தி, குறைந்தபட்ச ஏலத் தொகை, 15 ஆயிரம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கலாம் என்றும், இதுகுறித்த இறுதி முடிவை, மத்திய அமைச்சரவை எடுக்கும் என்றும் அறிவித்தது.
இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நேற்று மத்திய அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தியது.
இதுகுறித்து அமைச்சரவை வட்டாரங்கள் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கான குறைந்தபட்ச ஏலத் தொகையாக, 14 ஆயிரம் கோடி ரூபாய் (ஐந்து மெகாஹெட்ஜ்க்கு) நிர்ணயிப்பது என, முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், பயன்பாட்டு கட்டணத்தை பொறுத்தவரை, சம்பந்தபட்ட தொலை தொடர்பு நிறுவனங்களின் வருமானத்தின் அடிப்படையில், ஓர் ஆண்டுக்கு, இரண்டு சதவீதத்தில் இருந்து எட்டு சதவீதம் வரை செலுத்த வேண்டும். வரும் 31ம் தேதிக்குள் ஏலம் விடுவதில், சிரமம் இருப்பதால், ஏலத்துக்கான காலக்கெடுவை நீட்டிக்கும்படி, உச்ச நீதிமன்றத்தை அணுகுவது என்றும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு மத்திய அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தன. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கான குறைந்தபட்ச ஏலத் தொகை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக, அதிருப்தி தெரிவித்துள்ள தொலை தொடர்பு நிறுவனங்கள், இதன் விளைவால், மொபைல் போன் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என தெரிவித்து உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக