செவ்வாய், 31 ஜூலை, 2012

Shocking வட மாநிலங்கள் ஒரே நேரத்தில் மின் தடை

மின்சாரம் வினியோகம் திடீரென தடைபட்டுப் போனதால், டில்லி உட்பட பல வட மாநிலங்கள் மொத்தமாக இருளில் மூழ்கின. வட மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கும், "நார்தன் கிரிட்' எனப்படும் மின் தொகுப்பானது, கூடுதல் பளு தாங்க முடியாமல் போனதே இதற்கு காரணம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாக, வட மாநிலங்கள் பலவற்றில் மின் தடை ஏற்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
வட மாநிலங்கள் அனைத்தும், நேற்று அதிகாலை இரண்டு மணி முதல், திடீரென இருளில் மூழ்கின. இந்த மின் தடை, காலை 10 மணி வரை நீடித்தது. டில்லி, அரியானா, பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தின் மேற்குப் பகுதிகளில், ஒரே நேரத்தில் மின்சாரம் தடைபட்டுப் போனது. கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை போல உருவாகி விட்டதால், மக்கள் மத்தியில் அச்சமும், பீதியும் ஏற்பட்டது.

ரயில்கள் நின்றன
வட மாநிலங்கள் அனைத்திலும், 100க்கு 100 சதவீதம் ரயில்கள் மின்சாரம் மூலமாகவே இயங்குகின்றன. இந்த மின் தடையால், எல்லா ரயில்களும் அந்தந்த இடங்களில் அப்படியே நின்று போயின. டில்லிக்கு வரும் ஏறத்தாழ 55 ரயில்கள் அதிகாலை வந்து சேர முடியவில்லை. ஐந்து மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை தாமதமாக வந்து சேர்ந்தன. டில்லி விமான நிலையத்தில் இருந்து கிளம்ப வேண்டிய விமானங்கள் எல்லாம், இரண்டு, மூன்று மணி நேரம் தாமதமாகவே கிளம்பிச் சென்றன.

ஆலோசனை
சற்றும் எதிர்பாராத வகையில், வட மாநிலங்களை ஆட்டிப்படைத்து விட்ட இந்த மின் தடை, டில்லியில் மத்திய அரசு வட்டாரங்களை அதிர்ச்சி அடைய வைத்தது. மும்பை சென்றிருந்த மின் துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே நேற்று அதிகாலை 6.30 மணிக்கு கிளம்பி, டில்லிக்கு 8.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அவர் வந்த பிறகே, இந்த மின் தடை குறித்து தகவல் தெரிந்து, உடனடியாக அதிகாரிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வட மாநிலங்களுக்கு மின்சாரத்தை அளிக்கும், "நார்தன் கிரிட்டில்' ஏற்பட்ட கோளாறு காரணமாகவே மின் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. "நார்தன் கிரிட்' எனப்படும், வடக்கு மண்டல மின்சாரத் தொகுப்பில், மொத்தம் 48.5 மெகா ஹெட்சில் இருந்து 50.2 மெகா ஹெட்ஸ் வரை மின் ஓட்ட அலைவரிசை இருந்தாக வேண்டும்.

கூடுதல் பளு

எப்போதும் இந்த அளவீட்டில் மின்சார அலைவரிசை இருந்தால், வினியோகமும் சீராக இருக்கும். ஆனால், இந்த "நார்தன் கிரிட்'டில் 50.46 மெகா ஹெட்சுக்கும் மேல் மின்சார அலைவரிசை போய்விட்டதாக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கூடுதல் பளுவை தாங்க முடியாமல் போனதன் விளைவாக, "நார்தன் கிரிட்'டானது நிலைகுலைந்து போய்விட்டது.

மாநிலம் எது?
இந்த காரணத்தால் தான், இப்படி மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும், இதுகுறித்து முழுவதுமாக விசாரித்து அறிய, மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. குழுவில், மத்திய மின்சார அதிகார ஆணையத்தின் தலைவர், "பவர் கிரிட்' நிறுவனத் தலைவர் மற்றும் "பவர் சிஸ்டம்ஸ்' நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆகியோர் இடம் பெறுவர். ஒதுக்கப்பட்ட அளவைக் காட்டிலும், கூடுதலாக மின்சாரத்தை எடுத்துச் சென்று, "கிரிட்'டை நிலைகுலைய வைத்த மாநிலம் எது என்பது, விசாரணையின் இறுதியில் தெரியவரும். அந்த மாநிலத்திற்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்.

நிலை குலைந்தது:
நான் மும்பையில் இருந்து கிளம்பும் போது, ஆரம்ப கட்ட தகவலாக, ஆக்ரா அருகில் உள்ள மின் தொகுப்பில் கோளாறு ஏற்பட்டதாலேயே, மின் தடை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனாலும், முழு தகவலும் கிடைக்கப் பெற்ற பிறகே, "நார்தன் கிரிட்' நிலைகுலைந்து போனது தெரிய வந்துள்ளது.கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து, "நார்தன் கிரிட்' இதுபோல நிலை குலைந்து போய் உள்ளது. 2002ம் ஆண்டில், இதேபோல நிலைகுலைந்து போனபோது, அதை சரி செய்வதற்கு 24 மணி நேரம் பிடித்தது. இப்போது அதுபோல இல்லை. நிலைமைகள் சீராகிக் கொண்டே வருகின்றன. காலை 11 மணி வரை ஏறத்தாழ 60 சதவீதம் வரை சீரமைக்கப்பட்டு விட்டது.

சேமிப்பு:
"நார்தன் கிரிட்'டில் கடந்த ஆண்டே கூடுதலாக 55 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டது. தவிர, இந்த தொகுப்பில் பிரச்னையோ, பற்றாக்குறையோ ஏற்பட்டால், கிழக்கு தொகுப்பு மற்றும் மேற்கு தொகுப்பு ஆகியவற்றில் இருந்து உடனடியாக எடுத்துக் கொள்ள செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருந்தும் இவ்வாறு பிரச்னை ஏற்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு, மேற்கு மின் தொகுப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் தென்மண்டல தொகுப்பு இணைக்கப்படவில்லை. வரும் 2016ம் ஆண்டிற்குள், தேசிய மின்சாரத் தொகுப்புடன் தென்மண்டலத் தொகுப்பையும் இணைக்கும் திட்டத்தில் மத்திய அரசு உள்ளது.இவ்வாறு ஷிண்டே கூறினார்.

குளிக்க முடியாமல் மக்கள் பெரும் அவதி:
திடீர் மின் தடையால், மாநிலங்களின் தலைநகர் முதல் சிற்றூர் வரை, எங்குமே மின்சாரம் இல்லை. குறிப்பாக, தலைநகர் டில்லியின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. காலை ஆறு மணிக்கு இயங்க வேண்டிய மெட்ரோ ரயில், எட்டு மணிக்கு மேல் தான் இயங்கத் துவங்கியது. எல்லா சாலைகளுமே வாகனங்களால் பிதுங்கி வழிந்தன. டில்லி மட்டுமல்லாது, அமிர்தசரஸ் முதல் கோல்கத்தா வரை எல்லா நகரங்களுமே நிலைகுலைந்து விட்டன. டில்லி மற்றும் சுற்றியுள்ள நகரங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் மின்சாரம் இல்லாததால், "லிப்ட்' இயங்கவில்லை. தண்ணீர் இல்லாமல் போனதால், குளிப்பது உட்பட அத்தியாவசியத் தேவைகளுக்காக மக்கள் சிரமப்பட்டனர். நேற்று வாரத்தின் முதல் நாள் என்பதால், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் என, எல்லாமே பாதிப்புக்குள்ளாகின. பிரதமர் இல்லம், எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவற்றுக்குக் கூட, பூடானில் இருந்து மின்சாரம் வரவழைத்ததாகத் தெரிகிறது. 2008ம் ஆண்டு, இதேபோல அமெரிக்காவிலும் மின் தடை ஏற்பட்டு மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். அந்த மின் தடையை சரி செய்வதற்கு, நான்கு நாட்கள் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- நமது டில்லி நிருபர்

கருத்துகள் இல்லை: