கோவை, மே 15: தேர்தல் மூலமாக ஜனநாயகத்தை நிலைநிறுத்திய பெருமை முழுவதும் தமிழக மக்களையே சாரும். மக்களை ஏமாற்ற முடியாது என்பதே ஒருமித்த செய்தியாக தேர்தலில் வெளிப்பட்டுள்ளது என்று, ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கிவாசுதேவ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜாதி, மதம், பணம் இவை எல்லாவற்றையும் தாண்டி தேர்தலில் வாக்களித்து ஜனநாயகத்தை நிலைநிறுத்திய பெருமை முழுவதும் தமிழக மக்களையே சாரும். மக்களை ஏமாற்ற முடியாது, வசப்படுத்த முடியாது; மக்களை அவ்வளவு எளிதாக குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது என்பதை வலியுறுத்தும் ஒரு ஒட்டுமொத்தச் செய்தியாக தேர்தல் முடிவுகள் வெளிப்பட்டிருக்கின்றன.
தமிழக மக்கள் எந்தக் குழப்பமுமின்றி உறுதியான முறையில் வாக்களித்திருக்கிறார்கள். அதற்காக அவர்களை வாழ்த்துகிறேன். இந்தத் தீர்ப்பு, ஊழலற்ற, நேர்மையான அரசை அளிப்பதற்கான ஒரு நினைவூட்டலாக எப்போதும் இருக்கும்.
ஜெயலலிதா தலைமையின் கீழ் தங்களுக்கு உண்மையான நலனும் வளமான வாழ்க்கையும் கிடைக்கும் என்பதில் தமிழக மக்கள் மிகவும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதற்காக சேவை செய்ய ஜெயலலிதாவுக்கும் அவருடைய புதிய அரசில் அங்கம் வகிக்க இருப்பவர்களுக்கும் தெய்வீக அருள் துணை புரியட்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
5/16/2011 10:19:00 AM