செவ்வாய், 17 மே, 2011

ஒரு கோடி புத்தகங்கள் ? ? - சென்னை புத்தகக் கண்காட்சி

எங்க ஊருல – திண்டுக்கல்லில் – வழக்கம் போல எல்லா ஊர் மாதிரியும் வெயில் அதிகமா இருக்கும் மாதமான சித்திரையில்–மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கும். ஏன்னா அம்மை அந்த மாதங்களில் அதிகமா வர வாய்ப்புள்ளதால் வேப்பிலை,மஞ்சள் போன்றவைகளை இப்படியாச்சும் உபயோகிக்கட்டுமேன்னு ஆரம்பிச்சிருப்பாங்க.அந்த திருவிழாவில எனக்கு பிடிச்சது ரெண்டே விஷயங்கள் - கடைகள், மாவிளக்கு(அதுவும் நெய்யோட சாப்பிடும் சுகமே தனி). எனக்கு நினைவு தெரிஞ்சு கடைல நான் ரொம்ப ஆசைப்பட்டு வாங்கியது ஒரு சின்ன படகு.ஒரு பெரிய தாம்பாள தட்டுல, சின்ன விளக்கப் பொருத்தி அந்த படகுக்குள்ள வெச்சா அதுபாட்டுக்கு கடகடன்னு சுத்திகிட்டே இருக்கும். முதல் முறையா அதை வாங்கினபோது தலகால் புரியல.கிடைக்காதது கிடைச்ச மாதிரி ஒரு சந்தோசம். அவ்வளவுதான்..இனி அந்தப் பொருள் திருவிழாவில கிடைக்காது எப்படியோ வாங்கிட்டோம்ன்னு ஒரு நெனப்பு. அது மாதிரி வாங்காம விட்ட பொருட்களை நெனச்சு ரொம்பவே வருந்துவேன் முன்னமே சொன்ன மாதிரி இனி அது கிடைக்காதுன்னு ஒரு எண்ணம். ஆனா ஒவ்வொரு திருவிழாவிலும் ஒரே பொருட்களே எல்லா கடைகளிலும் இருப்பது போகப்போக புரிஞ்சது. ஒரு கட்டத்துல புதுசா ஒண்ணும் வரவேயில்லைன்னு தெரிஞ்சிருஞ்சு. எதிர்காலத்தை கணிக்கும் ரோபாட் கூட பத்து வருடங்களுக்கும் மேலா சிவப்பு வண்ணத்தில் ஒரே காஸ்ட்யூமிலேயே வலம் வந்துகிட்டிருக்கு.அதே மிளகா பஜ்ஜி – அதே டெல்லி அப்பளம் – அதே ராட்டினம் – அதே கரும்பு ஜூஸ் – புதுசா கழிப்பறை கட்டியிருந்தாலும் வெளியவே ஒண்ணுக்கு போய் அந்த பக்கமே போக முடியாம செய்யும் நம் மண்ணின் மைந்தர்கள் – டியூப்லைட்ல உபயம்னு வளச்சு வளச்சு எழுதிப்போட்டு வெளிச்சமே வராம செய்யும் மண்டகப்படிக்காரர்கள். எல்லாம் அதே.
இதுதான் எனக்கு சென்னை புத்தகக் கண்காட்சியில முதல் அனுபவம்.சனிக்கிழமை போயிருந்தேன். சென்டரலிலிருந்து நேரா பச்சயப்பாஸ்தான். ரெண்டு மூணு வருசங்களுக்கு முன்னாடி இதுபோல கண்காட்சிக்கு முன்னே பழைய புத்தகங்களை விற்கவிடாம பண்ணிட்டாங்கன்னு ஒரு பேச்சிருந்துச்சு. இந்த தடவை ரொம்பவும் அதிகமாவே பழைய புத்தகங்கள் இருந்தது. விலையும் கம்மி. கொஞ்ச நேரம் அங்க ஓட்டிட்டு கண்காட்சிக்குள்ள போன நம்ம விக்ரம் வரவேற்றார். ஆச்சிரியத்தோட கொஞ்ச தூரம் மேற்கொண்டு போனா தமன்னா இருந்தாங்க...என்னடாயிதுன்னு யோசிக்கும்போதே வரிசை இளையராஜால ஆரம்பிச்சு ரஹ்மான்ல முடிஞ்சது. உபயம்: குமுதம். எங்க திரும்பிலாம் அவர்களின் போஸ்டர் கண்ணில் அடித்தது
என் வாழ்க்கையிலேயே முதல்முறையாக ஒரு புத்தகக் கண்காட்சிக்கு நுழைவுச் சீட்டு எடுத்தது இங்குதான். அதுக்கு பரிசுக் குலுக்கல் வேறன்னு  எழுதியிருந்தது. நா மறந்துபோய் எழுதிப்போடாம கையோட எடுத்துகிட்டு வந்துட்டேன். உள்ள 10 கவிஞர்களின் பேருல ஒவ்வொரு பாதை. ஒவ்வையார், இளங்கோவடிகளில் ஆரம்பிச்சு பாரதியார்-தாசன், ஷெல்லி முதல் தாகூர் வரை இருந்தது. இதுல விவேகானந்தர் தான் odd man out. கலைஞரை ஏன் சேர்க்கலைன்னு தெரியல.ஒருவேள சமகால கவிஞர்களை கணக்குல எடுக்க மாட்டாங்களோ என்னவோ
முதல்ல என் கண்ணில் பட்ட ஸ்டால் பி.ரத்தின நாயக்கர் & சன்ஸ். உள்ள போன பட்சி சாஸ்திரம், பல்லி சாஸ்திரம், தும்மல் சாஸ்திரம், அங்க லட்சண சாஸ்திரம், மச்ச சாஸ்திரம், சாமுத்திரிகா லட்சணம் இது போல பல புத்தகங்கள். எல்லா சாஸ்திரங்களையும் வாங்கிப் படிச்சாக் கூட எனக்கு கொஞ்சம் கூட வளராதுன்னு தெரியும் – அறிவு. அப்படியே போய் ஒரு யு-டர்ன் அடிச்சா உயிம்மை.செம கூட்டம். மனுஷ்யபுத்திரன் இருந்தார். நிறைய பேர் போட்டோ எடுத்துகிட்டு அப்படியே போயிட்டாங்க. அவரு நிம்மதியா தனியா உக்காந்துகிட்டு யோசன பண்ணிட்டு இருந்தார். சரி..நானும் ஏதாவது பேசலாம்னு கிளம்பும்போது அவரு சடார்னு தெறிச்சு ஓடிட்டார்.ம்ம்..எப்படித்தான் கண்டுபிடிக்குறாங்களோ.அப்படியே நேஷனல் புக் டிரஸ்ட் ஸ்டாலுக்கு போனேன்.NBTல பல தரமான புத்தகங்கள் குறைந்த விலைக்கு கிடைக்கும்னு எனக்கு வாங்கிய முன் அனுபவத்தில் தெரியும். சலீம் அலியின் பல புத்தகங்கள், இயற்கை குறித்தப் புத்தகங்கள், தமிழ் சிறுகதைகள்ன்னு பல நல்ல புத்தகங்கள் அவர்களிடம் கிடைக்கும். ஆனா இந்த முறையும் புதிதாக எதுவும் இல்லாதது ஏமாற்றமே. கவிஞர்-பாடலாசிரியர் நா. முத்துக்குமார் மும்மரமா புத்தகங்களை வாங்கிக் கொண்டிருந்தார். ஒருத்தர் நாலு சிறுவர் சிறுமியருடன் வந்திருந்தார். அங்கேயே சிறுவர்களுக்கான புத்தகங்களை வாங்கி ஆளுக்கு ஒண்ணு பரிசா கொடுத்துக்கிட்டிருந்தார். எனக்கு எங்கப்பா ஞாபகமே வந்தது. இன்னும் அவர் இந்த வகை புத்தகக் கண்காட்சிக்கு வர இயலவில்லை. மதுரைல போலாம்ன்னு நினைக்கும் போதுதான் நடக்க சிரமமா போயிருச்சு. அடுத்த ஆண்டாவது வரணும். பார்ப்போம். 
அப்பறம் அம்பேத்கர் ஸ்டாலுக்கு போய் ஒரு புத்தகத்தை வாங்கினேன். எல்லாம் மிகவும் விலை குறைவு. இதுல இன்னொன்னு, காந்தியின் சத்திய சோதனையும் இன்ன பிற புத்தகங்களும் அம்பேத்காரின் புத்தகங்களும் பெரியாரின் புத்தகங்களும் கூடவே இஸ்லாம் புத்தகங்களும் கீதை ஆகிய அனைத்தும் மிகவும் விலை குறைவு. ஏறத்தாழ ஒரே விலை. what an irony...
                கிழக்கு பதிப்பகம் – அதன் அபிமானிகள் கோவிக்கக் கூடாது. சத்தியமா ஏதோ சரவணபவன் ஹோட்டலுக்குள்ள நொலஞ்ச மாதிரி டக்குனு தோணிச்சு.தூக்ககலக்கமும் ஒரு காரணமாயிருக்கலாம். எல்லாரும் சீருடையில இருந்தாங்க. அதான் இந்த குழப்பத்திற்கு காரணம். அதுலவேற ஒரு சர்வே பார்ம்ன்னு ஒண்ண கொடுத்தாங்க. கிழக்கு பதிப்பகம் சார்பில் என்னன்ன புத்தகங்கள் வரும்னு நினைக்கிறீங்கன்னு இருந்தது.நம்மளையும் மதிச்சு கருத்து கேட்க்குறாங்களேன்னு எல்லாத்தையும் டிக் அடிச்சு வெச்சேன். என்ன...பொது என்ற தலைப்பின் கீழ கோழி வளர்ப்பது எப்படின்னும் அதற்கடுத்து பாரதியார் கவிதைகள்ன்னு இருந்தது சற்று நெருடியது. காக்கை குருவி எங்கள் ஜாதின்னு பாடிய ஆளுனால கோழி ஒண்ணும் செய்யாதுன்னு நினைக்கிறேன். என்ன இருந்தாலும் செம மார்கெட்டிங் திறமை தெரிந்தது. பா.ராகவன் இருந்தார். இரா.முருகனும் இருந்தார்.அப்படியே எதிர் வெளியீடு, ஆழி, கறுப்புப் பிரதிகள், தமிழினி,தாய்மடி தமிழ் சங்கம் இது போல இருந்த ஸ்டால்களை ஒரு சுற்று வந்தேன். சாஹித்திய அகாடெமி ஸ்டால் காத்தாடியது.பல நல்ல நூல்களும், பழைய நூல்களும் இருந்தது. புக் வேர்ல்ட் லைப்ரரின்னு ஒண்ணு இருக்கு(இதை மருதன் அவர்கள் தளத்தில் இருந்து தெரிந்து கொண்டேன்). பல ஆங்கில புத்தகங்கள் வெறும் 150துன்னு போட்டிருந்தாங்க.ரொம்ப ஆவலா உள்ள போனா..புஸ்ஸா போச்சு. என் சிற்றறிவுக்கு எட்டின மாதிரி ஆங்கில புத்தகங்கள் இல்லை.எல்லாம் ரொம்ப பெரிய புத்தங்கள் போல.ஒண்ணும் புரியல.காமிக்ஸ்கள் பல – ஜட்ஜ் ட்ரேட் முழுத் தொகுப்பு அட்டகாசம் – செமையா இருந்தது. இசை புத்தகங்கள் இருந்தது. எனக்கு பிடிச்ச பாப் டிலனின் பாடல் வரிகள் அடங்கிய புத்தகம் வாங்கச் சொல்லி அடம் பிடித்தது. கூடவே ராக் இசை பத்திய புத்தகமும் சேர்ந்து கொண்டது..




சரி வேணாம்னு Oxford  ஸ்டாலுக்குள்ள நொலஞ்சா நா விரும்பிய புத்தகங்கள் 500,600 ரூபாய்ன்னு இருக்கு. வெறும் வாசனையை மட்டும் நுகர்ந்திட்டு வந்திட்டேன். காலச்சுவடுக்குள்ள போனாலும் இதே கதைதான். ரொம்பவும் விலை. எனக்கு கட்டுபடியாகவில்லை. குங்குமம் புத்தகக் ஸ்டாலில் ஏதோ சமைக்கும் பொருட்கள் எல்லாம் கொடுத்திட்டிருந்தாங்க. Induction அடுப்பு இருந்ததான்னு தெரியல..வீட்டுக்கு வாங்கணும். பல நல்ல தமிழ் பெயருடன் நிறைய ஸ்டால்கள் இருந்தது. பழனியப்பா பிரதர்ஸ்ல நரசய்யாவின் ஆலவாயும் மதராச பட்டினமும் வாங்கணும் ஒவ்வொரு முறை நினைத்து பின் வேண்டாம்ன்னு போவதே வாடிக்கையாக போயிருச்சு. ஒருவழியாக நான்கு மணிநேரத்திலேயே என் திக் விஜயம் முடிவுக்கு வந்தது.

அமைப்பாளர்கள் ஸ்டால்களை வட்டவடிவமாகவோ வடிவிலோ வெச்சா நல்லாயிருக்குனும்னு தோணுது. இது எனக்கு சிரமமாயிருந்தது.கிட்டத்தட்ட 450 ஸ்டால்களுக்கும் மேல என்று நெனைக்கிறேன். ஆனா பெரும்பாலும் சில குறிப்பிட்ட புத்தகங்களே பல ஸ்டால்களிலும் நிறைந்திருந்தது. தனித்துவமான புத்தகங்களோ புத்தகக் கடைகளோ குறைவாகவே இருந்ததாக நான் உணர்ந்தேன். இது என் தவறாகக் கூட இருக்கலாம். Quantity is there..but Quality??. தரத்தை நான் நிர்மானிக்க முடியாது-கூடாது என்றாலும் பார்த்தால் ஓரளவிற்கு தெரியுமில்லையா..மேலும் கழிவு 10% மட்டுமே. இதே அளவிற்குதான் எங்கள் ஊரிலும் வாடிக்கையாகவே தராங்க. என்னைப் போல பல பேருக்கும் பொருளாதார நிலைமை யோசிக்க வைத்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு லேமன்டீக்கு கூட 15ரூ எனக்கு அதிகமாகவே தெரிந்தது.இன்னொரு நல்ல விஷயம் தண்ணீர் ஏற்பாடு பிரமாதம். மினரல் வாட்டர் வாங்குவதற்கு பதில் அங்கே இலவசமாகவே சபோல்ஸ் மினரல் வாட்டர் ஏற்பாடு பண்ணியிருந்தாங்க.வெளிய, பஜ்ஜி பேல் பூரி சாப்பிடுவதில் நிறைய பேர் முனைந்திருந்தார்கள்.பின்ன...பசிக்காதா...
ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரே மாதிரி புத்தகங்களே நிறைய இருந்தது சோர்வைத் தந்துது. ஒரு கோடி புத்தகங்களில் தொண்ணுற்று எட்டு லட்சம் புத்தகங்கள் ஒரே வகையாக இருந்த மாதிரி தெரிந்தது. இது என்னோட பார்வைக் கோளாறான்னு தெரியல.போனவங்க யாராவது இதுபோல உணரந்தீங்களான்னு தெரியல.அமைப்பாளர்கள் ஸ்டால்களை – புத்தக எண்ணிக்கைகளை விட அரிதான, புதிய வகையான புத்தகங்களை அறிமுகப்படுத்தினால் நல்லாயிருக்கும் என்பது என் கருத்து. நாங்க(அப்பா+நான்) எப்படி இருந்தாலும் மாதாமாதம் ஒரு நான்கு அல்லது அஞ்சு புத்தகங்களை வாங்கிருவோம்.அதுனால அடிக்கடி புத்தகக் கடைக்கு போய்போய் ஓரளவு அனைத்து புத்தகங்களும் பரிச்சயமானதாகவே இருந்தது.
                          என்னைப் போல அல்லாமல் பல வேறு காரணங்களினால் புத்தகக் கடைகளுக்கு போக இயலாதவர்களுக்கு இது போன்ற கண்காட்சிகள் நிச்சயமாக ரொம்பவே பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதுபோக நிறைய சின்னப் பசங்களும் பெற்றோர்களுடன் வருவதை பார்க்க ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது. என்ன மாதிரி புத்தகங்களை வாங்குகிறார்கள் என்று பார்ப்பதற்கு எனக்கு விருப்பமில்லை. அவரவர் ரசனை அவரவர்களுக்கு. மற்றவர் ரசனையை மதிப்பிட எனக்கு எந்த உரிமையுமில்லை என்று தோணுது.

கடைசியா நான் வாங்கிய புத்தகங்களை சொல்லாட்டி எப்படி..ஒரு சுயவிளம்பரம் இல்லாட்டி அப்பறம் தமிழன்னு சொல்லுவதில்ல என்ன பெருமையிருக்கு
  • இளைஞகர்களுக்கான புத்தர் – NBTஎஸ்.பட்டாச்சாரிய - NBT
  • நம் காலத்து நாவல்கள் – எஸ்.ரா – உயிர்மை
  • அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது – எஸ்.ரா – உயிர்மை (எஸ்.ராவிற்கு பெரிய ரசிகன் என்றுலாம் நினைக்க வேண்டாம்)
  • கஸ்தூரிபா: மகாத்மாவின் மனைவி எழுப்பும் கேள்விகள் – மைதிலி சிவராமன் – பாரதி புத்தகாலயம்
  • சனங்களின் சாமிகள் கதை – அ.கா.பெருமாள் – United Writers
  • சூடிய பூ சூடற்க – தமிழினி – யாருடையதுன்னு உங்களுக்கே தெரியும்
  • மலேயா முதல் கனடா வரை – ஏ.கே.செட்டியார் – அகல் பதிப்பகம்
  • Earthquake: Forecasting & Mitigation NBT ( இது என் வேலைக்கு )
  • தீண்டப்படாதவர்களுக்கு காந்தியும் காங்கிரசும் சாதித்தது என்ன? – அம்பேத்கார் நூல் தொகுப்பு: 16. (ரொம்ப நாளா தேடியது)
       பல பேரின் முகங்களை வலைப் பதிவில் பார்த்தது போல இருந்தாலும், எப்படி பேசுவதுன்னு எனக்கு தயக்கமாகவே இருந்தது. இந்த விசயத்தில் நான் கொஞ்சும் கூச்சவாதி. அப்பறம் நா ஒண்ணும் பெரிய படிப்பாளி எல்லாம் கிடையாது. கையில கிடைப்பதை படிப்பேன். அதுனால பல சிரமங்களுக்கு இடையேயும் புத்தகங்களை பதிப்பித்துக் கொண்டும் வெளியிட்டுக்கொண்டும் இருக்கும் பதிப்பாளர்களை குறை சொல்லுவது போல எங்காவது தொணி தெரிந்தால் பொறுத்தருள்க.....

கருத்துகள் இல்லை: