தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள் அனைவரும் இந்தமுறை சென்னையை விட்டு இடம் பெயர்ந்து போட்டியிட்டனர். ஸ்டாலினும் ஆயிரம் விளக்கு தொகுதியை விட்டுவிட்டு கொளத்தூரில் போட்டியிட்டார். அ.தி.மு.க. சார்பில் சைதை துரைசாமி அவரை எதிர்த்து போட்டியிட, எதிர்ப்பு பலமானது.
வாக்கு எண்ணும் நாளன்று, இருவருக்கும் கடும்போட்டி நிலவியது. மாறி, மாறி இருவரும் முன்னிலை வகித்தனர். வாக்குப் பெட்டிகளில் வேறு பிரச்னை ஏற்பட, பரபரப்பு அதிகமானது. தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தோல்வியால் துவண்டிருந்த தொண்டர்கள் ஸ்டாலினாவது வெற்றிபெற வேண்டும் என எதிர்பார்க்கத் தொடங்கினர். ஸ்டாலின் வெற்றி என அறிவிக்கப்பட்டதும் தான் அவர்களுக்கு உயிர் வந்தது.
தி.மு.க. தோல்வியால் கட்சியின் தலைவர்கள் எல்லாம் துவண்டு போயிருக்க, அதை உதறிவிட்டு தனது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்தார் முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின். மூன்று நாட்களாக, கொளத்தூர் தொகுதியில் ஒரு சந்துகூட விடாமல் அனைத்து மக்களையும் சந்தித்து தனக்கு ஓட்டு போட்டதற்காக நன்றி தெரிவித்தார். தோல்வியை உதறிவிட்டு, அவர் இப்படி கிளம்பியது தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி இருப்பதைக் காண முடிந்தது.
ஆளுயர மாலைகள், பட்டாசுகள் என ஸ்டாலினை திணறடித்து விட்டார்கள் தொண்டர்கள். அவருடன் சென்னை மேயர் மா.சுப்பிரமணியனும், வடசென்னை மாவட்டச் செயலாளர் வி.எஸ்.பாபுவும் வந்திருந்தனர். தொகுதிக்குள் ஒவ்வொரு தெருவிலும் நின்று அமைதியாகவும், தெளிவாகவும் மக்களிடம் பேசினார் ஸ்டாலின். தங்கள் தொகு தியின் குறைகளை மக்கள் அவரிடம் தெரிவிக்க, பொறுமையாக கேட்டுக் கொண்டார்.
தி.மு.க.வின் அம்பத்தூர் வேட்பாளர் ரங்கநாதனின் வீட்டைக் கடக்கும்போது வண்டியை நிறுத்தி விட்டு, அவரது வீட்டிற்குள் சென்றார் ஸ்டாலின். உடன் மேயரும் செல்ல, வி.எஸ்.பாபு மட்டும் உள்ளே போக மறுத்துவிட்டார். ‘‘தோத்துட்டா ஒரு மரியாதையும் இல்லை. ஜெயிச்சாதான் மரியாதை’’ என ஒரு தொண்டர் சத்தமாகவே சலித்துக் கொண்டார்.
‘‘இந்த முறை தி.மு.க. தோல்விக்கு தலைவரோட குடும்பத்து ஆட்கள்தான் காரணம். ஆனாலும் மக்களுக்கு ஸ்டாலின் மேல் எந்தக் கோபமும் இல்லை. அவரோட சுறுசுறுப்பு, துணை முதல்வரா அவர் செயல்பட்ட விதம் எல்லாமே மக்களை ரொம்பவே கவர்ந்திருந்தது. குடும்பத்தை அரசியல்ல இருந்து விலக்கி வைச்சாதான் அடுத்து ஆட்சி அமைப்பது பற்றி யோசிக்கலாம்’’ என அடித்துச் சொல்கிறார் தி.மு.க. தொண்டர் ஒருவர்.
thanks kumudam.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக