சென்னையின் நம்பர்1 சுற்றுலாத்தலம்
அல்லக்கைகளின் ஆதிக்கத்தைப் பிடுங்கி அடிப்பொடிகளின் வசமாக்கியிருக்கிறார்கள் தமிழக வாக்காளப் பெருங்குடி மக்கள்.
கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, ஆட்சி வந்தாலும் போனாலும் உணர்ச்சிவசப்படுவதை விட அந்த அ & அ கும்பல்கள் உணர்ச்சிவசப்படுதல் ரொம்பவே அதிகம்.
‘மதுரையில் இருக்கும் போது மருதக்காரனாக இரு’ என்பதைப் போல சில ஊடகங்கள் கடந்த ஐந்து வருடங்களாக ‘அல்லக்கை’யாக இருந்து ஓவர் நைட்டில் ‘அடிப்பொடி’யாக மாறியிருக்கலாம். ஆனால் ஒரிஜினல் அல்லக்கைகள் ஒரு போதும் அடிப்பொடியாக மாறுவதில்லை. வைஸ்-வெர்ஸா!
இப்படிப் பல விஷயங்களில் அல்லக்கைகள் பின்பற்றிய அதே அரசியல் அரிச்சுவடியை அடிப்பொடிகள் பின்பற்றினாலும் தலைவர்கள் விஷயத்தில் இது நேர் மாறாக இருக்கிறது.
காதலர்களுக்கு ஏசி வசதி
புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகம் இப்போதே சுற்றுலாத் தலமாகிக்கொண்டிருக்கிறது என்று நாளிதழ்கள் சொல்கின்றன. இன்னும் சுண்டல் கடைகள் மட்டும்தான் வரவில்லை. கோட்டூர்புர நூலக வளாகத்தில் சைக்கிள் சுக்கு காப்பிவாலாக்கள் வரத்தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. காந்தி மண்டபக் காதலர்கள் செண்ட்ரலைஸ்ட் ஏசி வசதியுடன் இனி காதல் புரியலாம். ஆட்சி மாற்றம்!
கருணாநிதி அரசு தயாரித்தது என்பதற்காக சமச்சீர் கல்வி புத்தகங்களில் பல பாடங்களுக்கு ‘கட்’ கொடுத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. (’ஜிங்ஜாக்’க்குகள் தான் கட் என்பது தனிக் கதை! ஆனால் அடுத்த வருடம் அது ‘ஜாக்ஜிங்’காகப் புதிதாகப் புகாமல் இருந்தால் சரி!)
கேள்வி கேட்டால் ‘அவர்கள் செய்யவில்லையா?’ என்று அடிப்பொடிகளும், ‘இவர்களும் தானே செய்தார்கள்?’ என்று அல்லக்கைகளும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவார்கள். உலகறிந்தபடியே, அடிப்பொடிகளும் அல்லக்கைகளும் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள்தான்!
கண்கள் படாமல், கைகள் தொடாமல் - செம்மொழி நூலகம்
பேருந்துகளினுள் ஒட்டப்பட்ட நாம், நான், உதடு ஸ்டிக்கர்களை இரவோடு இரவாகப் பிய்த்தெடுக்க ரொம்பவே மெனக்கெட்டிருப்பார்கள் பேருந்து ஊழியர்கள்!
போன ஆட்சிக்கு ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியையும் தாண்டி பேரும் புகழும் பெற்றுத் தந்தது மின் வெட்டு! இந்த ஆட்சி வந்து நான்கைந்து நாட்கள் ஆகியும் அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் மாநிலமெங்கும் தொடருகின்றன என்று மக்கள் புலம்புகிறார்கள். இப்படி ஒரே நாளில் சரி செய்ய முடிகிற பிரச்னையா என்ன அது?! அமெரிக்க மின் சாதனங்களை இப்போதெல்லாம் சென்னையில் வோல்டேஜ் கன்வர்ட்டர்கள் இல்லாமலேயே உபயோகிக்க முடிகிறதாம். சதா சர்வ காலமும் 110 வோல்ட் அளவிலேயே லோ-வோல்டேஜாக இருந்தால் அப்படித்தான்!
இலவசங்களுக்கான பிள்ளையார் சுழியாக வருகிற 1-ம் தேதியிலிருந்து இலவச அரிசி உத்தரவுக்கு கையெழுத்து போட்டாகி விட்டது!
14-ம் தேதியே ரேஷன் கடைக்குச் சென்று ‘இலவச அரிசி எங்கேய்யா?’ என்று மக்கள் கேள்வி கேட்ட கூத்து பல நாளிதழ்களில் வந்திருந்தது.
தேன் நிலவு கொண்டாட ஜெ.வும் தமிழக அரசும் புதுமணத் தம்பதிகள் அல்ல. ஏற்கெனவே இரண்டு முறை ஆண்டு முடித்தவர்கள்தானே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக